(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வெல்லாவெளியில் கடமையாற்றிவரும் சக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் 72,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசியை கையூட்டலாக 2021ம் ஆண்டு பெற்றுக் கொண்டதாக கூறப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பெண் சார்ஜன்ட் ஆகியோரை நுவரோலியா மற்றும் கல்முனையில் 5ம் திகதி அன்று திங்கட்கிழமை (05-01-2026) இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சொத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் கைது செய்தனர்.
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் கல்முனை நாற்பட்டி முனை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோhகத்தர் ஒருவர், தனது வீட்டிலிருந்தே பணிக்கு வந்து செல்வதற்காக மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.
இதற்கமைய கடந்த 2021ம் ஆண்டு களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த பொலிஸ் கொஸதாப்பரர் அனுகியபோது அவர் இதற்கான பரிந்துரைகளைச் செய்து தருவதாகக் கூறி, அவரிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் கைபேசி உள்ளிட்ட பொருட்களையும், 72,000 ரூபாய் பணத்தையும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பெண் பொலிஸ் சாஜன்ட் ஆகியோர் இலஞ்சமாக கோரி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடந்தவருடம் இடமாற்றம் பெற்று நுவரெலியாவுக்கு சென்றுள்ளதுடன் பெண் பொலிஸ் சாஜன்ட் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்
இந்த நிலையில் இலஞ்சம் வாங்கியது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவதினமான 5ம் திகதி அன்று திங்கட்கிழமை (05) தற்போது நுவரெலியாவில் கடமையாற்றிவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகரை காலை 10.50 மணியளவில் அங்கு வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
இதேவேளை கல்முனை பொலிஸ் உதவி அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றிவரும் பெண் சார்ஜன்ட் பிற்பகல் 3.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரையும் முறையே நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.