காயாத இரத்தமும் ஆறாத ரணமும்

Share

“காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட, குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு ஏதோ ஒன்று நடக்கப் போவது பற்றிய பேச்சு அடிபட்டது- ஏதோ ஒன்று மிகப் பயங்கரமாக, பாடம் ஒன்று கற்பிப்பது பற்றி ” என டைம்ஸ் ஒப் சிலோன், சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த மேவின் டி சில்வா 1992 இல் தெரிவித்திருந்தார். ”இது திடீரென்று சிங்கள மக்களிடையே எழுந்த இனவெறுப்பு எழுச்சியோ, அல்லது சிலர் குறிப்பிடுவது போல, 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமைக்கான எதிர்வினையோ இல்லை.இது முன்னரே தெளிவாகத் திட்டமிடப்பட்டு, அந்தத் திட்டத்தின் படி நடத்தி முடிக்கப்பட்ட கொடூரம் என 1983 “கறுப்பு ஜூலை” பற்றி சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் ஆணையத்தின் அறிக்கையில் போல் சீகார்ட் குறிப்பிட்டுள்ளார்

கே.பாலா

இலங்கையில் தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முற்றிலும் துடைத்தழிக்க துடித்த சிங்களப் பேரினவாத அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று இனப்படுகொலை செய்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை மௌனமாக்கியுள்ளது.இவ்வாறான இனப்படுகொலைகள் காலங்கள் கடந்தாலும் நம் இரத்தத்தை உறைய வைப்பவை. நடத்தப்பட்ட படுகொலைகள் நம் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்பவை. ஈழத் தமிழர்களின் வரலாற்றை படிப்பவர்கள் கண்ணீரின்றி கடக்க முடியாத நிகழ்வுகளுள் இந்த கறுப்பு ஜூலை என்ற ஜூலைக் கலவரம் மிகக்கொடூரமானது . 1983 ஜூலையில் நடந்தது வெறும் கலவரம் அன்று. அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். சிங்களம் -தமிழ் என்ற இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் ஏற்பட்டுவிட்ட முடிவு.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு சிங்களப் பேரினவாத அரசாலும், சிங்கள இனவெறியர்களாலும் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டு.தற்போது 42 வருடங்கள்.நிறைவடைந்துள்ளன.ஒரு மனிதன் உணர்ச்சி மரத்துப் போய் நிர்வாணமான நிலையில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, சுற்றிலும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கும் புகைப்படத்தை காணாதவர்கள் இருக்க முடியாது.ஜூலை கலவரத்தின் சாட்சியாக உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய புகைப்படம் இது. தமிழர் என்ற அடையாளமே சிங்கள வெறியர்களுக்கு வெறியேற்றிக் கொள்ள போதுமானதாக இருந்தது.

இந்தக் கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை, சிங்கள இனவெறியர்கள் கண்டந்துண்டமாக வெட்டி வீசினார்கள். குடும்பம்,குடும்பமாக தமிழர்களை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினார்கள். 500 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் ஈவிரக்கமின்றி இந்த வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வணிக வளாகங்கள், கடைகள், எரிபொருள் நிலையங்கள், திரையரங்குகள் என 5000 க்கும் மேற்பட்ட தமிழர்களின் வர்த்தக நிறுவனங்களை குறிவைத்து சூறையாடினார்கள்.தப்பிய தமிழர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் என வடக்கிற்கு அனுப்பப்பட்டார்கள் .

வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் ,வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் இக்காடைக்கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட, வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடூரங்களும் கடைகளில் ”தமிழனின் கறி கிடைக்கும்” என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்து விடும். ”ஜூலைக் கலவரம்” எனப்படும் தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக,தீராத வலியாக கனன்று கொண்டிருக்கின்றது. இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 42வருடங்கள் கடந்துவிட்டாலும் அது தமிழரின் மனத்தோடு ஆழமாக பதிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83 இன் தமிழர்களின் இரத்தக் கறைபடிந்த கறுப்பு ஜூலை நினைவிற்கு வந்து கண்ணீர் சிந்த வைப்பதை தவிர்க்க முடியாது.

தமிழர்களின் பொருளாதார அடித்தளத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே நன்கு திட்டமிடப்பட்டு இந்தக் கலவரம் நடந்தது. அதற்காகவே தமிழர்களின் உடைமைகள், வர்த்தக நிலையங்கள், சொத்துகள் தொடர்பான விவரங்கள் ஏற்கனவே சிங்கள அதிகாரிகளால் கலவரக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆறு நாட்கள் சிங்கள வெறியர்களின் கையில் கொழும்பு மாநகரமும், தென்னிலங்கையும் இருந்தது. தலைநகரமெங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும், தீயடங்காது எரியும் தமிழர்களின் வணிக நிலையங்களும் என கொழும்பு கோரமாய்க் காட்சியளித்தது. இன்னொரு குரூரமும் ஜூலை 25ஆம் திகதி நடந்தேறியது.

கொழும்பின் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான ரெலோ இயக்கத் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், உட்பட 37 பேரை வெலிக்கடை சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் அளித்த ஆயுதங்களோடு மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர்.நான் மரணித்தால் எனது கண்களை ஒரு தமிழனுக்கு கொடுங்கள் அதன் மூலம் நான் தமிழீழத்தை பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறிய குட்டிமணியின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன. அந்த நாளோடு மட்டும் அந்தக் கொடூரம் முடியவில்லை. மீண்டும் ஜூலை 28ஆம் திகதியும் வெலிக்கடை சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. 18 தமிழர்கள் கொல்லப்பட்டனர். மூன்றே நாட்களில் 55 தமிழ் கைதிகள் சிறையில் சிங்கள இனவெறிக்கு இரையானர்கள்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப்படுகொலை ஜே .ஆர்.ஜெயவர்த்தன அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது என்று கூறப்பட்டாலும் இந்த இனப்படுகொலை அந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. திருநெல்வேலி தாக்குதலில் 13 ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலேயே அவர்கள் உடல்களை அடக்கம் செய்ய இராணுவத்தினர் விரும்பிய போதும், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனே அவர்களது உடலை கொழும்பில்ல் சிங்கள மக்கள் மத்தியில் பார்வைக்கு வைத்து அடக்கம் செய்ய முடிவெடுத்தார். ஜெயவர்த்தனா அரசு இராணுவத்தினரின் மரணத்தை இனவெறி தூண்டும் நிகழ்வாக மாற்றியது.

எந்த இராணுவ வீரர்கள் மறைவிற்கும் கடைப்பிடிக்காத புதிய முறைகளில் இந்த இராணுவத்தினருக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. சவப்பெட்டியில் எடுத்து வராமல் வேண்டுமென்றே சூழ்ச்சியுடன் பொலித்தீன் பைகளில் பிணங்களை கட்டிக் கொண்டு வந்தார்கள். இருட்டும் வரை இறுதி ஊர்வலத்தை தாமதப்படுத்தி சிங்களவர்களிடம் கொதிப்புணர்வை தூண்டச் செய்தார்கள். இந்த தாமதம் பெரும்பாலான சிங்களவர்களை கொழும்பை நோக்கி வரச் செய்வதற்கு போதுமான காலமாக இருந்தது. அரச பயங்கரவாதிகளின் குரூரப் புத்தியால் தூண்டப்பட்ட சிங்கள வெறியர்களால் அப்பாவித் தமிழர்களின் இரத்தம் கொழும்பு வீதியெங்கும் ஆறாக ஓடியது.

கறுப்பு ஜூலை, இலங்கையின் முதல் படுகொலை அல்ல. அதற்கு முன்னர் 1958இலும் இத்தகைய இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.70-களிலும் நிகழ்த்தப்பட்டுள்ளன. அப்போது விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவம் மீது தாக்குதல்கள் எவற்றையும் நடத்தவும் இல்லை.தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் முன்னெ டுத்த வேளையில்தான், 1958இல் 300 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு, அறிவின் மீதும் புத்தகங்களின் மீதும் மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்பட்டது.ஆக, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் எழுச்சியை மக்களைப் படுகொலை செய்து அழிக்கவும் திசைதிருப்பவும் அன்றைய இலங்கை அரசு தீர்மானித்தது. இதனால் விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் தாக்குதல் நடத்திய மறுகணமே தலைநகர் கொழும்பில் தமிழ் மக்கள்மீது இனப்படுகொலை திட்டத்தை கட்டவிழ்த்து விட்டது.

1983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் அரசியலமைப்பின் 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்புக்கு, மார்க்ஸிய – இடதுசாரிக் கட்சிகளே காரணம் என்று கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய மூன்று கட்சிகளையும், ஜே.ஆர் தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தடை செய்திருந்த நிலையில், தமது கட்சி மீது சுமத்தப்பட்டிருந்த அபாண்டமான பழிக்கெதிராக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் முத்தெட்டுவேகம ஆதங்கம் மிக்க உரையொன்றை ஆற்றியிருந்தார்.

“தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் அரசுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களே, காடையர்களை ஏற்றி வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நான் இதனை ஒரு கருத்தாகச் சொல்லவில்லை. அந்தப் பிரதேசங்களிலுள்ள உங்களுடைய நண்பர்களிடம் போய்க் கேட்டுப் பார்த்தால், உங்களுக்கு இது தெரியும்.அகலவத்தைப் பிரதேசத்துக்குக் காடையர்களை அழைத்து வந்தது, மின்சார சபைக்குச் சொந்தமான வாகனங்கள். இதனால் மின்சார சபைத் தலைவரோ, அதற்குரிய அமைச்சரோ இதற்கு ஆணை பிறப்பித்தார்கள் என்று நான் சொல்லவில்லை. அது என்னுடைய கருத்தல்ல. ஆனால் அரச இயந்திரம் பயன்படுத்தப்பட்டது” என்று, 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பில், அரச இயந்திரத்தின் பயங்களிப்பைச் சுட்டிக் காட்டியதுடன், தணிக்கை அதிகாரி, யாழ்ப்பாணத்தில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை மட்டும், 25ஆம் திகதி காலை பத்திரிகைகளில் பிரசுரிக்க அனுமதித்தது எப்படி?; நாட்டை அதற்கு எந்த வகையிலும் தயார்படுத்தாது, அந்தச் செய்தி எப்படி அனுமதிக்கப்பட்டது?; நாட்டின் இரண்டு இடங்களில் வன்முறை வெடித்த பின்பும், 25ஆம் திகதி காலையிலேயே, ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தாது விட்டது ஏன் என்று, காரசாரமாக அரசாங்கத்தை நோக்கி, நியாயமான கேள்விகளையும் முன்வைத்தார்.

1983 “கறுப்பு ஜூலை” கலவரங்களின் பின்னணியில், அரச இயந்திரத்தின் பங்களிப்பு இருந்தமைக்கான சாட்சியங்களை, ஆதாரங்களை பலரும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரும் லேக் ஹவுஸின் டைம்ஸ் ஒஃப் சிலோன், சிலோன் டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவருமான மேவின் டி சில்வா 1992இல், 1983 “கறுப்பு ஜூலை” பற்றி எழுதிய கட்டுரையொன்றில், “காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட, குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு ஏதோ ஒன்று நடக்கப் போவது பற்றிய பேச்சு அடிபட்டது- ஏதோ ஒன்று மிகப்பயங்கரமாக, பாடம் ஒன்று கற்பிப்பது பற்றி-” என்று குறிப்பிட்டிருந்தார்.

1983 “கறுப்பு ஜூலை” பற்றி சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் ஆணையத்தின் அறிக்கையில் போல் சீகார்ட், “இது திடீரென்று சிங்கள மக்களிடையே எழுந்த இனவெறுப்பு எழுச்சியோ, அல்லது சிலர் குறிப்பிடுவது போல, 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமைக்கான எதிர்வினையோ இல்லை என்பது தௌிவாகத் தெரிகிறது- இது முன்னரே தௌிவாகத் திட்டமிடப்பட்டு, அந்தத் தௌிவான திட்டத்தின் படி தொடர் செயற்பாடுகளால் அறிந்தே நடத்தி முடிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்யு, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி என, அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பை பல வகைகளில் நியாயப்படுத்த முயன்றனரே அன்றி, அதற்காக வருத்தப்படவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் தரவோ முயலக்கூட இல்லை.ஐ.தே .க.அரசின் ஆட்சியில் ஜனாதிபதி ஜே .ஆர்.ஜெயவர்த்தன வழி நடத்தலில் முப்படையினரின் ஒத்துழைப்புடன் சிங்களக்காடையர்களை கட்டவிழ்த்துவிட்டு மேற்கொள்ளப்பட்ட ஜூலைக் கலவரம் என்ற பெயரிலான இந்த தமிழினப்படு கொலையின் பின்னர் ஜே .ஆர்.ஜெயவர்த்தன பிரிட்டன் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் சிங்களத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தியதுடன் அந்த முகமே இன்று வரையும் வெளிப்பட்டும் வருகின்றது.

அந்த நேர்காணலில் ”இப்போது யாழ்ப்பாணத்தவர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவர்களைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை. தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்” என ஜே .ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.அதுமட்டுமன்றி இந்த தமிழினப்படுகொலையை வெளிநாடுகள் சில கண்டித்தபோது “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். அத்துடன் “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற சூளுரையும் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது.

நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு, வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது பொலி­ஸாரும் படை­யி­னரும் ஏன் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­ய­வில்லை என டைம்ஸ் ஒவ் இந்­தியா பத்­தி­ரிகை, அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜெயவர்த்தன­விடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நேர்­காணல் ஒன்­றின்­போது வின­வி­யது.‘படை­யி­ன­ரிடம் பெரிய அளவில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான உணர்வு ஏற்­பட்­டி­ருந்­தது என நான் நினைக்­கிறேன். கலகத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தினால், அது சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாகப் போய்­விடும் என்றும் அவர்கள் (படை­யினர்) உணர்ந்­தி­ருந்­தார்கள். உண்­மை­யி­லேயே சில இடங்­களில் அவர்கள், அவர்­களை (கல­கக்­கா­ரர்­களை) ஊக்­கு­வித்­தி­ருந்­ததை நாங்கள் கண்டோம்’ என ஜெயவர்த்தன­ பதி­ல­ளித்­தி­ருந்தார்.

இந்த 1983 ஜூலைக்கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல் – சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழக்க காரணமாக அமைந்தது.. இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்ற நிலைமையை ஜூலைக் கலவரமே ஏற்படுத்தியது. அந்த நிலைதான் இன்றைய சிவப்பு சட்டை ஆட்சியாளர்களின் ”மாற்றம் ”ஆட்சி வரை தொடர்கின்றது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>