காவியுடைக் குற்றவாளிகளும் அநுரவின் ”தர்ம நீதிமன்றமும்”

Share

”பௌத்தத்தின் பெயரினால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. பிக்குகளின் பாரதூரமான பாலியல் குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்கும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பிக்குகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற ஜனாதிபதியின் கவலை வெளிப்படுத்துகின்றது”

– கே.பாலா

மூவினங்களும் பல் மதங்களும் கொண்டமக்கள் வாழும் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சிபீடம் ஏறும் எந்த அரசாங்கமாகவிருந்தாலும் அவர்களின் இரு கண்களாக பிக்குகளும் இராணுவத்தினருமே இருக்கின்றார்கள், பிக்குகள் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாகவும் இராணுவத்தினர் ஆட்சியை தக்க வைக்கும் சக்திகளாகவுமே இலங்கை அரசியலில் கோலோச்சுகின்றனர். அதாவது இலங்கையில் பிக்குகள் தேசியத் தலைவர்கள், இராணுவத்தினர் தேசிய வீரர்கள். இந்த இரு தரப்பை சுற்றியே இலங்கை அரசியல் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கின்றது. பிக்குகளைப் பகைத்துக் கொண்டோ இராணுவத்தினரை குற்றம் சாட்டிக்கொண்டோ எந்த ஆட்சியும் ,எந்தக் கட்சியும் நிலைத்து விட முடியாது.

அந்த வகையில் இலங்கையில் பௌத்த மதத்தை மட்டுமல்ல இலங்கையின் அரசாங்கங்களையும் அரசியலையும் மகாநாயக்க தேரர்களும் பிக்குகளுமே தீர்மானிக்கின்றனர். எந்தக் கட்சியின் ஆட்சி நாட்டில் இருந்தாலும் அந்தக் கட்சியையும் ஆட்சியையும் மல்வத்து பீடம், அஸ்கிரிய பீடம் ,அமரபுர பீடம்,ராமாஞ்ஞ பீடம் ஆகிய 4 பௌத்த உயர் பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்களே கட்டுப்படுத்துகின்றனர். வழிநடத்துகின்றனர்,இவர்களை மீறி நாட்டில்,அரசியலில் ஒரு அணுவும் அசைய முடியாது .எந்தத் தலைவர் ஆட்சி புரிந்தாலும் அவர் எந்தக் கொள்கை கொண்டவராக இருந்தாலும் மகாநாயக்க தேரர்கள், பிக்குகள் முன் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும்.

காவியுடைக் காவாளிகள்

இவ்வாறாக ஆட்சி பீடம் ஏறும் அரசாங்கங்கள் ,அரச தலைவர்கள் மண்டியிடும் பிக்குகளும் தேசிய வீரர்களாகப் போற்றும் இராணுவத்தினரும்தான் இன்று பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளாகவும் ,போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவும் .பாதாள உலகக் குழுக்களாகவும் மதவாதிகளாகவும் இனப் படுகொலையாளிகளாகவும் செயற்பட்டு நாட்டுக்கும் பௌத்த மதத்திற்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாறாக நாட்டின் சிறப்புரிமை பெற்ற பிக்குகள் ,இராணுவத்தினர் பாலியல் துஸ்பிரயோகங்கள் , போதைப்பொருள் கடத்தல்கள், இனவாத,மதவாத வன்முறைகள் என சட்டத்துக்கு முரணான செயல்களில் ஈடுபடுகின்றபோதும் அவர்களை தண்டிக்காது பாதுகாக்கவே அரச இயந்திரம் செயற்படுகின்றது.அதற்கு சிவப்பு சட்டை தோழர்களின் திசைகாட்டி அரசாங்கமும் விதி விலக்கல்ல. இதில் இராணுவத்தினரை தவிர்த்து இலங்கை அரசியலை, ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாகவுள்ள பிக்குகளின் அண்மைய சில குற்றங்கள்,அது நாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், அரசியல் நெருக்கடிகள்,இவ்வாறான காவியுடைக் காவாலிகளான பிக்குகளை பாதுகாக்க போராடும் அநுரகுமார அரசாங்கம்,இலங்கையில் சட்டம் அனைவருக்கும் சமமா?என்பது தொடர்பில் பார்ப்போம்.

பிக்குகளினால் 7 ஆண்டுகளில்

சீரழிக்கப்பட்ட 773 சிறுவர்,சிறுமியர்

இலங்கை பௌத்தர்கள் ,சிங்களவர்கள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் பௌத்த பிக்குகளின் அடையாளங்களாக பாலியல் துஷ்பிரயோகங்கள்,போதைப்பொருள் கடத்தல்கள்,இனவாதம், மதவாதம், கலாசார சீரழிவுகள் தான் உள்ளன.2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 488 சிறுவர்.சிறுமியர் பிக்குகளினால் பாலியல் துஷ்பிரயோகங்கள்,சித்திர வதைகளுக்குளாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் காவியுடைக்குள் எந்தளவுக்கு காமவெறி மறைந்துள்ளது என்பதனை அறிந்து கொள்ள முடியும்.

இதில் கடந்த 3 வருடங்களில் மட்டும் 285 பிக்குகள் மீது சிறுவர்.சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 27 பிக்குகள் மீது குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. இதேவேளை இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டபோதும் முறைப்பாடு செய்யப்படாத பிக்குகளின் உண்மையான பாலியல் குற்றங்கள் இதைவிட அதிகமாகவே இருக்கும்.இதில் இன்னொரு முக்கியமான விடயம் இத்தரவுகள் சிறுவர்,சிறுமிகள் மீது இழைக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் மட்டுமே. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீது பிக்குகள் செய்த பாலியல் குற்றங்கள் பற்றிய தரவுகள் இதில் கிடையாது.

அநுர, இந்திய பிரதமர் மோடி வணங்கிய

அட்டமஸ்தானாதிபதியின் பாலியல் இச்சை

இவ்வாறான பிக்குகளின் பாலியல் ரீதியிலான குற்றங்களின் உச்சக்கட்டமாக அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதியும் இலங்கை ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பல தலைவர்களும் அரசியல்வாதிகளும் சென்று மண்டியிட்டு தலை வணங்கி ஆசிர்வாதம் வாங்கிய அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் (71 வயது) சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதாகி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆண்-பெண் கலவி கூடாது.புல்லைக் கூட திருடக் கூடாது. சின்னஞ்சிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது.இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது என்ற 4 விடயங்களை விட்டு முற்றிலும் பிக்குகள் விலகியிருத்தல் வேண்டும் என்பதே பிக்குகளுக்கான அறம்.உலகத்து மதங்களில் மதகுருக்கள் திருமணம் செய்யமுடியாது என்கிற சட்டம் இருக்கும் பௌத்தம் கத்தோலிக்கம் ஆகிய மதங்களுக்குத்தான் உண்டு. ஆனால் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு கொழும்பிலும் கண்டியில் இரண்டு மனைவிகள் உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரின் பெயர் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அவர்களில் ஒருவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA)தகவல்படி, சிறுமிக்கு 2022 இல் 11 வயது இருந்தபோது இந்தத் துஷ்பிரயோகம்தொடங்கியது; தற்போது அவளுக்கு15 வயது.இப்போதுதான் விடயம் வெளிவந்துள்ளது.

இதேபோல் வெளிவராத விகாரை இரகசியங்கள்,பிக்குகளின் காமக் களியாட்டங்கள் ஏராளம் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முதல் பிக்கு ஒருவர் ஒரு தாயுடனும் மகளுடனும் ஒரே நேரத்தில் ஒரே படுக்கையில் உறவுகொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.சிங்கள ஊர் மக்களே திரண்டுபோய் பிக்குவைக் கையும் களவுமாகப் பிடித்து தாக்கி வீடியோ எடுத்து அம்பலப்படுத்தினார்கள். ஆக பௌத்த பிக்குகள் இதனை காலங்காலமாக சாதாரணமாகச் செய்து வருகிறார்கள். ஆனால் சட்டத்தின் பிடியில் அவர்கள் சிக்குவதில்லை. காவியுடையே அவர்களின் பாதுகாப்புக் கவசம். சிங்களவரின் பௌத்த வெறியே பிக்குகளின் தற்காப்பு ஆயுதம்.

அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரர் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட விடயம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், கண்டியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இன்னுமொரு பிக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அதேபோன்று யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

112 கிலோ போதைப் பொருள்

கடத்திய 22 இளம் பிக்குகள்

இவை பிக்குகளின் பாலியல் துஸ்பிர யோகங்கள் குறித்து சில சம்பவங்கள் மட்டுமே. அத்துடன் வெளிவந்த சில குற்றங்கள் மட்டுமே. ஆனால் வெளிவராத இவ்வாறான பாலியல் துஸ்பிரயோக குற்றங்கள் இன்னும் பல தொடர்ந்தும் பிக்குகளினால் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன .இவ்வாறாக பாலியல் துஸ்பிரயோக குற்றங்களில் மட்டுமன்றி இன்று பிக்குகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவும் மாறியுள்ளனர்.இவ்வாறான சம்பவம் ஒன்று அண்மையில் நடந்து ஒட்டுமொத்த நாட்டையும் பிக்குகளைப் பார்த்து முகம் சுளிக்க வைத்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 25.4.2026 ஆம் திகதியன்று 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக மிகப் பெரும்தொகை போதைப்பொருட்களை தமது காவியுடை கௌரவத்தைப் பயன்படுத்தி கடத்தி இந்த பிக்குகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.அதுமட்டுமன்றி சுமார் 112 கிலோ “குஷ்” மற்றும் ஹேஷ்” ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த 22 பிக்குகளில் 19 பிக்குகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையில் தெரியவந்துள்ளது இன்னொரு பேரதிர்ச் சியானது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 25.4.2026 ஆம் திகதியன்று வந்திறங்கிய அந்த பிக்குகள் ஒவ்வொருவரிடமும், தலா 5 கிலோ அளவிலான குஷ்” மற்றும் ஹேஷ்” ரக போதைப்பொருட்கள் இருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இது மிகவும் வீரியமிக்க போதைப்பொருள் வகை . பிக்குகளின் பயணப் பைகளில் அமைக்கப்பட்டிருந்த “போலி அடுக்குகள்” உள்ளே இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.கைது செய்யப்பட்ட பிக்குகளில் பெரும்பாலானோர் மாணவர்கள். பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபரால் வழங்கப்பட்ட, அனைத்துச் செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட 4நாள் விடுமுறைச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு அவர்கள் தாய்லாந்திலிருந்து திரும்பியபோதே போதைப் பொருட்களுடன் கைதாகினர்

இந்தச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் 23ஆவது பிக்கு ஒருவர், கொழும்பு புறநகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ளவிகாரைகளைச் சேர்ந்த இந்தப் பிக்குகளின் சிலரது செல்போன்களை இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்தபோது, அவர்கள் சாதாரண உடைகளை அணிந்து விடுமுறையை மகிழ்ச்சியாக, .பெண்களுடன் உல்லாசமாக கழிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் கண்டறியப்பட்டன.

காவியுடைக் காவாலிகளை

பாதுகாக்கும் அரசாங்கம்

இவ்வாறாக நாட்டின் சிறப்புரிமை பெற்ற பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகங்கள் , போதைப்பொருள் கடத்தல்கள், இனவாத,மதவாத வன்முறைகள் என சட்டத்துக்கு முரணான செயல்களில் ஈடுபடுகின்றபோதும் அவர்களை தண்டிக்காது பாதுகாக்கவே அரச இயந்திரம் செயற்படுகின்றமை கடும் விசனங்களையும் விமர்சனங்களையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதியும் அட்டமஸ்தானாதிபதியுமான பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதாகியபோதும் அவர் உடல் நலம் குன்றியதாக தெரிவிக்கப்பட்டநிலையில் அவரை தேசிய மருத்துவமனைக்கோ அல்லது சிறைச்சாலை வைத்தியசாலைக்கோ அனுப்புவதற்குப் பதிலாக, நவலோகா தனியார் மருத்துவமனையின் ஆடம்பர அறையில் வைத்திருந்து அவரை கடைசி சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்துள்ளார்கள்.

அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதியும் அட்டமஸ்தானாதிபதியுமான பல்லேகம ஹேமரத்ன தேரரின் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகம்,தாய்லாந்திலிருந்து 112 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த 22 பிக்குகள் தொடர்பில் நாட்டில் மக்களிடையில் பெரும் கொதி நிலை ஏற்பட்டிருந்தாலும் சிங்கள அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அடக்கியே வாசிக்கின்றனர். அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிராக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி பெண்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும் தென்பகுதியில் எந்தவொரு அமைப்பும் மூச்சுக்கூட விடவில்லை.

பிக்குகளைப் பாதுகாக்க

தனியாக ”தர்ம நீதிமன்றம்”

பிக்குகளின் இவ்விரு சம்பவங்களும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் 2026 மே 27 அன்று நடைபெற்ற தேசிய வெசாக் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள்,இன்னும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் ”சட்டம் அனைவருக்கும் சமம்” என்ற கொள்கையையும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது .பௌத்த பிக்குகளின் ஒழுக்காற்றை வலுப்படுத்தும் நோக்கில்’தர்ம நீதிமன்றம்’ மீண்டும் நிறுவப்படும் எனவும், இது1931 ஆம் ஆண்டு விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மூலம் சட்ட அங்கீகாரம் பெறும் எனவும் தெரிவித்தே ஜனாதிபதி இலங்கையின் அனைவருக்கும் ஒரே சட்டத்தை,நீதியை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

பிக்குகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் ஜனாதிபதி கூறுவதுபோன்று ‘தர்மநீதிமன்றம்’ போன்ற ஒரு அமைப்புஉருவாக்கப்படுமானால், அதுவெறும் ஒழுக்காற்று அமைப்பாக மட்டுமல்லாமல், நடைமுறையில் ஒருமாற்று நீதி அமைப்பாக மாறும் அபாயம் உள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது .ஜனாதிபதி கூறிய பிக்குகளுக்கான தர்ம நீதிமன்றம் யாரால் கட்டுப்படுத்தப்படும் என்பதுதான் முக்கிய பிரச்சினை.அண்மைக் காலங்களில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் மத நிறுவனங்களின் ,அதிகார அமைப்பின் உச்சியில் இருப்பவர்கள். இவர்கள் தான் இந்த தர்ம நீதிமன்றத்தை நடத்துவார்கள். இத்தகைய சூழலில்,பிக்குகளின் தலைமையின் கீழ்இயங்கும் இந்த தர்ம நீதிமன்றங்கள் எப்படி பிக்குகளுக்கு எதிராக நீதியை வழங்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பௌத்தத்தின் பெயரினால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த பிக்குகளின் பாரதூரமான குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்கும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பௌத்த பிக்குகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற ஜனாதிபதியின் கவலை வெளிப்படுத்துகின்றது. உள்நாட்டுச் சட்டங்களின் பிரகாரமும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமவாயங்களின் பிரகாரமும் சிறுவர்களை பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது ஜனாதிபதி கூறும் பௌத்த பிக்குகளின் குற்றங்களுக்கு தனியான நீதிமன்றங்கள் என்பது நாட்டை மேலும் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் .பௌத்தத்திற்கு ஏற்கனவே அரசியலமைப்பில் காணப்படும் முன்னுரிமைகளில் இருந்து மேலும் ஒருபடி முன்சென்று குற்றங்களில் இருந்தும் பிக்குகளுக்கு விடுபாட்டினை அளிக்கும் முயற்சிகளை திரைமறைவில் அரசாங்கம் மேற்கொள்ளவே முயற்சிக்கின்றமை ஜனாதிபதியின் ”தர்ம நீதிமன்றம்”கூற்றின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு கடந்த அநுராதபுரம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த தலைமை விகாராதிபதி நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையிலேயே வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்தன தேரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.ஆனால் இந்த விகாராதிபதியினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக எந்த சட்டத்தரணியும் அல்லது வேறு எந்த வெளித் தரப்பினரும் ஆஜராகவில்லை என்பது இலங்கை சட்டத்தரணிகளின் பெரும்பாலானோரின் பௌத்த விசுவாச மன நிலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>