கிழக்கில் ‘சத்துருக்கொண்டான்’ மனிதப் புதைகுழியை அகழ உதவுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை!

Share

கைக்குழந்தைகள் உள்ளிட்ட 180-க்கும் அதிகமான நிராயுதபாணியான தமிழர்கள் அரசாங்க பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இடத்தை அகழ்ந்து விசாரணை நடத்துமாறு பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக விடுத்து வரும் கோரிக்கையை, போரினால் பாதிக்கப்பட்ட தாயொருவர் மீண்டும் ஒருமுறை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்த விடயத்தில் சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் 2026 செப்டெம்பர் 9ஆம் திகதி 36-ஆவது தடவையாக சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உப தலைவி அமலராஜ் அமலநாயகி தெரிவித்தார்.

“உண்மையில் இவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் இந்த இடத்தில்தான் வெட்டி புதைத்ததாக சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை நிபுணத்துவத்துடன் செம்மணி போன்று அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே இதற்கு பொறுப்புக்கூறல் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. இது இலங்கை அரசாங்கத்திடமிருந்து எமக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே சர்வதேசம் இதற்காக அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசாங்கதை இடம்பெற்ற அநீதிகளுக்கும் இனப்படுகொலைக்கும் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்வது சர்வதேசத்தின் பொறுப்பு என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.”

கைக்குழந்தைகள் உள்ளிட்ட நிராயுதபாணியான 186 தமிழ் பொதுமக்கள் அரசாங்க பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வலுவான சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு அரசாங்கமும் அதற்கான நீதியை வழங்கவில்லை என அவர் கவலையுடன் தெரிவித்தார்.

“36 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இந்த உறவினர்களுக்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்கவில்லை. வழங்கப்போவதும் இல்லை. எந்த அரசாங்கம் வந்தாலும் வழங்கப்போவதில்லை. ஏனென்றால் திட்டமிட்ட வகையில் இனப்படுகொலை செய்து ஒரு இனத்தை அழித்துள்ளனர்.”

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி கொல்லப்பட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த 186 பேரை நினைவுகூரும் வகையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற அந்த நினைவேந்தலில், பிரதேசத்தைச் சேர்ந்த சில குடிமைச் சமூக அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பாலகிட்னர் ஆணைக்குழு

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 1995 ஜனவரி 4ஆம் திகதி நியமிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணபிள்ளை பாலகிட்னர் தலைமையிலான வடக்கு, கிழக்கு தனிநபர் காணாமல் போதல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின்படி, படுகொலை தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுன் முகாமின் அதிகாரிகளாவர்.

இராணுவத்தினரால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டபோது உயிர் தப்பிய ஒரே நபர், அப்போது 27 வயதாக இருந்த பிள்ளையாரடி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் ஆவார்.

அவர் கூறுவதற்கு அமைய, 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுன் இராணுவ முகாமைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய படையினர் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி மற்றும் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களுக்குள் நுழைந்து, கிராம மக்களை வீடுகளில் இருந்து வெளியே வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.

வீதிக்கு வந்த 185 கிராம மக்களைச் சுற்றிவளைத்து, அவர்களின் கைகளைப் பின்னால் கட்டி, அவர்கள் அனைவரையும் இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்தக் குழுவில் சத்துருக்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த 38 பேரும், கொக்குவில் கிராமத்தைச் சேர்ந்த 47 பேரும், பனிச்சையடி கிராமத்தைச் சேர்ந்த 37 பேரும், பிள்ளையாரடி கிராமத்தைச் சேர்ந்த 62 பேரும் இருந்தனர்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட 85 பெண்களும் இருந்தனர்.

பத்து வயதுக்குக் குறைவான 42 சிறுவர்கள் மற்றும் சிறுமிகளைக் கொண்டிருந்த அந்தக் குழுவில், 60 வயதுக்கு மேற்பட்ட 28 பேரும் அடங்கியிருந்தனர்.

சாதாரண விசாரணையை மேற்கொள்வதற்காக அனைவரும் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இராணுவத்தினர் கிராம மக்களிடம் தெரிவித்திருந்த போதிலும், சில மணிநேரங்களுக்குப் பின்னர் ஒருவரைத் தவிர வேறு எவரும் வீடு திரும்பவில்லை.

பாலகிட்னர் ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, கந்தசாமி கிருஷ்ணகுமார் தனது காயங்களின் தழும்புகளைக் காட்டி, இராணுவ வீரர்கள் தனது மார்பில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் பத்து பேர் கத்திக் குத்துகளுக்கு இலக்காகி தரையில் விழுந்து கிடப்பதையும் அவர் கண்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வு

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கந்தசாமி கிருஷ்ணகுமார் தமிழ்நெட் இணையதளத்திடம் தெரிவித்த அதிர்ச்சியூட்டும் விபரங்களின் ஒரு சிறு பகுதி இது. தரையில் காயங்களுடன் கிடந்தபோது, இராணுவ வீரர்கள் பெண்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளை அவர் இதில் வெளிப்படுத்தியுள்ளார்.

“பின்னர் அவர்கள் உடலில் நூல்கூட இல்லாமல் பெண்களை அழைத்து வந்தார்கள். அந்தப் பிள்ளைகளின் வாயில் மண்ணைக் கொட்டி பாலியல் வன்புணர்வு செய்தார்கள். அதன் பின்னர் இராணுவ வீரர்கள் வாள்களை எடுத்து அவர்களின் மார்பகங்களை வெட்டியெடுத்தார்கள். அவர்களில் மூவரை கிணற்றுக்குள் தள்ளினார்கள். அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து, கெலை செய்து, சடலங்களை குழிகளில் போட்டுக் கொண்டிருந்தபோது நான் மெதுவாக இருட்டில் வெளியே ஊர்ந்து சென்றேன். இராணுவத்தினர் சென்றதும் நான் இராணுவ முகாமின் வேலியை நோக்கி ஊர்ந்து சென்று, முகாமுக்குப் பின்னால் இருந்த புதருக்குள் மறைந்துகொண்டேன். பின்னர் இராணுவ வீரர்கள் டயர்களைக் கொண்டு வந்து குழியில் இருந்த சடலங்களுக்கு தீ வைத்தார்கள். அதிகாலை மூன்று மணி வரை தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அணைந்த பின்னர் குழிக்கு மண்ணைப் போட்டு மூடினார்கள்.”

இராணுவத்தினரும் கிராமப் பாதுகாப்புப் படையினரும் அந்தக் குற்றத்தைச் செய்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என, படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வடக்கில் காணாமல் போதல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக வைத்தியர் தேவேநேசன் நேசையாவின் தலைமையில் 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையில், அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒரு பரிந்துரை சத்துருக்கொண்டான் உள்ளிட்ட படுகொலைகள் இடம்பெற்ற இடங்களில் கூட்டு நினைவுச் சின்னங்களை அமைப்பதாகும்.

அத்தகைய வேலைத்திட்டம் நல்லிணக்கத்திற்கும், இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் உதவும் என ஆணைக்குழு நம்பியது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>