குற்றங்கள் மலிந்த ”தமிழர் தேசம்”

Share

”நெஞ்சில் விடுதலை வேட்கையும் கழுத்தில் சயனைட் குப்பியும் கைகளில் துப்பாக்கிகளுமென வரிப்புலிகளாக,வான் புலிகளாக ,கடற்புலிகளாக,கரும்புலிகளாக தமிழினத்தின் உரிமைகளுக்காக களமாடி தமது இன்னுயிர்களை தமிழின விடுதலைக்கான வித்துக்களாக்கிய தமிழ் இளைஞர் ,யுவதிகள் ,மக்கள் வாழ்ந்த மண் இன்று குற்றங்கள் மலிந்த, குற்றவாளிகள் நிறைந்த தேசமாகிக் கொண்டிருக்கின்றது.’

 —-கே.பாலா

தமிழர் தேசமான வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலமாக மிக வேகமாகபரவி வரும் போதைப்பொருள் பாவனைகள், தீவிரமாகத் தலையெடுத்துள்ள,வன்முறைகள், கொலைகள் ,குழு மோதல்கள், கலாசார சீரழிவுகள், ரவுடித்தனங்கள் ,சினிமா மோகங்கள் தமிழ் தேசத்தின் இளைய தலைமுறையினரை மிகவும் தவறான பாதைக்கு மிக வேகமாக கொண்டு சென்று கொண்டிருப்பதனை இம்மாகாணங்களில் இடம்பெற்று வரும் குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

வடக்கு,கிழக்கில் உள்ள இன்றைய இளைஞர்களின் நெஞ்சில் போதை, வன்முறை வெறியும் கழுத்தில் தங்க, வெள்ளிச் சங்கிலிகளும்,கைகளில் மதுபானப்போத்தல்களும் சிகரெட்களும் போதைப் பொருட்களும் வாள்களும் வெட்டுக்கத்திகளும் என வீதிக்கு வீதி,ஊருக்கு ஊர் ,நகருக்கு நகர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களிலும் ஆட்டோக்களிலும் கார்களிலும் வான்களிலும் சென்று தமிழினத்தின் சீரழிவுகளாக அரங்கேற்றும் அட்டகாசங்களினால் குடும்பங்களுக்குள் நடக்கும் கலாசார ,பண்பாட்டு சீரழிவுகளினால் முழுத்தமிழினமும் வெட்கித்தலைகுனியும் நிலைமையே இன்று ஏற்பட்டுள்ளது.

நெஞ்சில் விடுதலை வேட்கையும் கழுத்தில் சயனைட் குப்பியும் கைகளில் ரி.56 துப்பாக்கிகளுமென தமிழினத்தின் உரிமைகளுக்காக களமாடி தமது இன்னுயிர்களை தமிழின விடுதலைக்கான வித்துக்களாக்கிய தமிழ் இளைஞர், யுவதிகள், மக்கள் வாழ்ந்த மண்ணில் இன்று தினமும் அரங்கேறும் அவலங்களும் அசிங்கங்களும் அட்டகாசங்களும் அராஜகங்களும் போதைப்பொருள் பாவனைகளும் கொலைகளும், கொள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.

இவ்வாறான தறி கெட்டுப்போன தலைமுறையினால் தினமும் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியையும் கவலைகளையும் ஏற்படுத்திவரும் நிலையில் அண்மையில் வடக்கில் நடந்த யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளினி திலீபன் அவரது மகளினாலும் மருமகனினாலும் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்ட சம்பவமும் கிழக்கில் வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 1/2 வயது குழந்தையுடன் சென்று காணாமல் போன இளம் தாயும் குழந்தையும் அடுத்த நாள் தாய் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் அவரது குழந்தை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டதுடன் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவமும் தமிழர் தேசத்தை நடுங்க வைத்துள்ளது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54வயது ) படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மகளின் காதல் போதையும் , மாமியாரால் வெறுக்கப்பட்ட மருமகனின் கஞ்சா போதையுமே இருந்துள்ளன. கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று காலையிலேயே அரியாலை- தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளார்.சடலத்தை வீசிவிட்டு, விரிவுரையாளரின் வீட்டில் எடுத்த நகையை அடகு வைத்து பெற்ற பணத்தில், திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த மகளும் (19 வயது) , மருமகனும் (21 வயது) 20ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 21ஆம் திகதி தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள்ளிருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம்- அராலியை பூர்வீக இடமாக கொண்ட விரிவுரையாளர் தயாளினி, கைதடியில் குடியிருந்து, சில வருடங்களின் முன்னர் சுண்டிக்குளி, பாண்டியன்தாழ்வு பகுதியில் காணி வாங்கி, வீடு கட்டி குடியிருந்துள்ளார்.அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன், இராஜரட்ட பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். மகளுக்கு 19 வயது. அவரும், நாயன்மார்க்கட்டு, இராஜேஸ்வரி வீதியை சேர்ந்த 21 வயதான இளைஞரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் குறித்த இளைஞர் போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பாக 2,3 தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இவர்களின் காதலுக்கு விரிவுரையாளராக தாயார் கடும் எதிர்ப்புத்தெரிவித்ததால் மகள் வீட்டுக்கு தெரியாமல் காதலனுடன் ஓடிச்சென்று, பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இந்த பதிவு திருமணம், கடந்த வருடம் நடந்தது. அப்போது விரிவுரையாளரின் மகளுக்கு 18 வயது. இந்த நிலையில் இவர்களுக்கிடையில் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. காதல் கணவனால் துன்புறுத்தப்பட்டு, அவரை விட்டுவிட்டு தாயாரின் வீட்டுக்கு மகள் வந்துள்ளார். மருமகன் போதைக்கு அடிமையாக, மகளையும் துன்புறுத்தி வந்த நிலைமையில், மகள் தரப்பில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

விவாகரத்து வழக்கு நடந்து வந்தாலும், அண்மைக்காலமாக, இன்ஸ்டகிராம் மூலம் விரிவுரையாளரின் மகளுடன் தான் தகவல் பரிமாறி வந்ததாகவும் இதன்மூலம் விவகாரத்து கோரிய மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும் விவகாரத்து வழக்கு விரைவில் வரவுள்ள நிலையில், அதற்கிடையில் மனைவியை சமரசப்படுத்தி, விவாகரத்து வழக்கை, இல்லாமலாக்க தான் விரும்பியதாகவும் கடந்த 17ஆம் திகதி இரவு விரிவுரையாளரின் வீட்டுக்குள் வீட்டு கூரையை பிரித்து இறங்கி, மகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து தனது மனைவியிடம் தாம் சேர்ந்து வாழலாம் எனக் கேட்டதாகவும் சேர்ந்து வாழலாம் என அவர் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் தாயார் இருக்கும் வரை சேர முடியாதென அவர் கூறியதாவும் அதனால் தாயாரை மகளின் ஒத்துளைப்புடன் கழுத்தை நெரித்துக்கொன்றதாகவும் அந்த இளைஞர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கொலையின் பின்னர், வீட்டிலிருந்த சிசிரிவி கமராவின் டிவிஆர் இருந்த அறையை திறந்து, டிவிஆரை எடுத்து சென்றுள்ளனர். அதை திருகோணமலை செல்லும் வழியில் நீர்நிலையொன்றில் எறிந்ததாக தெரிவித்துள்ளனர். டிவிஆர் இருந்த அறைத் திறப்பை மகளே எடுத்து தந்ததாகவும், தாயாரின் நகைகள் இருந்த அறைத் திறப்பையும் தந்து, நகைகளை எடுக்கும்படி சொன்னதாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.கொலை செய்த பின்னர், சடலத்தை படுக்கை விரிப்பினால் சுற்றி, விரிவுரையாளரின் காருக்குள் வைத்துள்ளனர். இருவரும் இணைந்தே சடலத்தை காருக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் திருகோணமலைக்கு தப்பிச் செல்லும் முடிவில் தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் சடலத்தை வீசிவிட்டு சென்றதாகவும் இளைஞர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாராம்.

விரிவுரையாளரான தனது தாயாரையும், தங்கையையும் தங்கையின் கணவர் கடத்திச் சென்றுவிட்டதாக விரிவுரையாளரின் மகன் பொலிஸில் முறையிட்டநிலையில் இது தொடர்பில் தீவிர விசாரணையில் பொலிஸார் இறங்கினர் இந்த ஜோடி தப்பிச்செல்லும் போது, விரிவுரையாளரின் வங்கி ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி, கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் உள்ள வங்கியில் பணம் பெற்றுள்ளனர். இதற்கான குறுந்தகவல் விரிவுரையாளரின் தொலைபேசிக்கு சென்றுள்ளது. அத்துடன், திருகோணமலையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கியூ.ஆர் குறியீட்டுக்கு எரிபொருளை பெற்றுள்ளனர். இதற்கான குறுந்தகவலும் கிடைத்துள்ளது.

இது தவிர, கொலையின் பின்னர் தனது தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்த மகள், திருகோமணலையில் வீடொன்றை வாடகைக்கு பெற்ற, பின்னர், தனது தொலைபேசியை இயக்கியுள்ளார். இதன்போது, அவரது புவியியல் இருப்பிடத்தை சகோதரன் அறிந்து கொண்டுள்ளார். இந்த தகவல்களின் அடிப்படையின் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு, திருகோணமலையில் வைத்து இந்த ஜோடியை கைது செய்தனர். விரிவுரையாளரை கொன்ற பின்னர், அந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட நகையை அடகு வைத்து பெற்ற பணத்திலேயே, திருகோணமலையில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இவ்வாறாக பெற்றதாயை மகளும் மருமகனும் இணைந்து படுகொலை செய்த சம்பவம் வடக்கை அதிர வைத்த நிலையில் கிழக்கிலும் குலை நடுங்க வைக்கும் ஒரு சம்பவம் தமிழர் பகுதியில் அரங்கேறியது.

கடந்த 19 ஆம் திகதி வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 1/2 வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் குழந்தையுடன் காணாமல் போன நிலையில் இது தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித்த லீலா ரத்தின தலைமையில் விசாரணைகளை முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில் தாய் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்தும் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட தாயின் தகவலின்படி அந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இன்னொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு குறித்த பெண் ஒருவர் மற்றும் ஆட்டோ தொடர்பாக கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து வந்தாறுமூலை ஆலையடி வீதியில் உள்ள வீடு ஒன்றை கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு வவுணதீவு காஞ்சிரம்குடா வைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோதே இதன் பின்னணியில் ஒரு கொடூர கும்பலே செயற்பட்டுள்ளமை தெரிய வந்தது .விசாரணைகளையடுத்து குறித்த பெண்ணின் கணவரான காஞ்சிரம்குடா வைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர்,அவரது தம்பியான 22 வயதுடைய ஒருவர் என இருவர் கைது செய்யப்பட்டதுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கார் என்பன மீட்கப்பட்டன.

இதில் கைது செய்யப்பட்ட கணவன் மனைவி சம்பவ தினமான 19 ஆம் திகதி வியாழக்கிழமை வந்தாறுமூலையில் அவர்களது வீட்டில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு சென்று பின்னர் ஆயித்தியமலை சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது வவுணதீவு பிரதேச செயலக காரியாலயத்துக்கு முன்னால் குழந்தையுடன் பஸ்ஸுக்கு காத்திருந்த இளம் தாயை அவதானித்த நிலையில் குறித்த பெண் தாங்களும் மட்டக்களப்புக்கு செல்வதாகவும் தங்களுடன் வருமாறு கேட்டபோது அதற்கு இளம் தாய் ஆட்டோவில் போக பணம் இல்லை என தெரிவித்த நிலையில் 100 ரூபா தந்தால் போதும் எனத் தெரிவித்து இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிய நிலையில் அந்தஇளம் தாயிடம் கதை கொடுத்து ஈடு வைத்த குழந்தையின் தங்க நகையை மீட்க அவர் செல்வதை அறிந்துள்ளனர்

குறித்த இடத்தில் இறங்கிய அந்த இளம் தாய்க்கு பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாக தெரிவித்து பின் தொடர்ந்து சென்ற நிலையில் அங்கு அவர் ஈடு வைத்த தங்க நகையை மீட்டெடுத்துக் கொண்ட பின்னர் குறித்த பெண் தாங்கள் மீண்டும் வவுணதீவு போவதாகவும் உங்களுடன் இன்னொருவரை ஏற்றி குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்து அவர்களை ஆட்டோவில் மீண்டும் ஏற்றி கொண்டு வலையிறவு பாலத்தை அண்மித்த போது அவருக்கு மயக்க மருந்து கலந்து பழச்சாறு கொண்ட யூஸ் போத்தலை குடிப்பதற்கு கொடுத்த போது அவர் அதை குடித்த பின்னர் மயக்கமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆட்டோ வலையிறவு பாலத்தை கடந்து தாண்டியடி நோக்கி சென்ற நிலையில் அங்கு ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்து குறித்த பெண் இறங்கிய நிலையில் அங்கு காத்திருந்த 22 வயதுடைய இளைஞனான ஆட்டோ செலுத்தியவரின் தம்பி ஏறியுள்ளார்.இதையடுத்து மயங்கிக்கிடந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 பவுண் தாலிக் கொடி மற்றும் ஒரு பவுண் தங்க சங்கிலியை கழற்றிக் கொண்டு குழந்தையை கொத்தியவலை வயல்பகுதில் வீசி விட்டு மயக்கமடைந்த இளம் தாயை தாந்தமலை பகுதியிலுள்ள நெல்லிகாடு வயல் பகுதிக்கு கொண்டு சென்று அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதேவேளை இந்தக்கும்பலே கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும் இதே பாணியில் யூஸில் மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்து அவரின் தங்க நகைகளை கொள்ளையடித்து மயங்கிக்கிடந்த பெண்ணை அந்த கிணற்றுக்குள் கொண்டு சென்று போட்டு கொன்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இவ்வாறாக இந்தக்கும்பல் இன்னும் எத்தனை பெண்களை எந்தக்கிணறுகளில் போட்டுள்ளனர் என்பது இன்னும் தெரியவராததால் காணாமல் போனதாக கருதப்படும் இன்னும் பல பெண்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. உதாரணத்திற்கு மட்டுமே இவ்விரு சம்பவங்களும் குறிப்பிடப்படுகின்றன. இதேபோன்று தினமும் எத்தனையோ கொடூரங்கள் வடக்கு,கிழக்கில் நடந்து வருகின்றன.

எந்தவித வேலை வெட்டியும் இருக்காது .ஆனால் பலஇலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார்சைக்கிள்கள்,ஆட்டோக்கள், கார்கள், வான்கள் செல்போன்களுடன் வீதிக்கு வீதி , சந்திக்கு சந்தி தாடிகளுடனும் சடாமுடிகளுடனும் நிற்கும் இளைஞர்களை இன்று பல இடங்களிலும் காண முடிகின்றது. தாம் வைத்திருக்கும் வாகனங்களுக்கு பெற்றோல் அடிப்பதற்கோ வைத்திருக்கும் செல்போனுக்கு ரீலோட் செய்வதற்கோ அவர்களின் உழைப்பிலான பணம் இருக்காது. காலையில் எழுந்தவுடன் சந்திக்கு சந்தி வெட்டியாக நிற்பது மாலையானதும் தண்ணிப்பார்ட்டி வைப்பது வன்முறைகள், குற்றங்கள் ,கொலை. கொள்ளைகளில் ஈடுபடுவது இதுதான் அவர்களின் முழுத்தொழிலாகவுள்ளது.இவர்களுக்கு மனைவிகள் ,காதலிகள் பக்கபலமாக இருப்பதுதான் இன்னும் கொடுமையானது.

இவ்வாறாக குற்றங்கள் மலிந்த , குற்றவாளிகள் நிறைந்த மாகாணங்களாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் உருமாறி தமிழர்தேசத்தின் எதிர்காலம் தொடர்பில் அச்சத்தையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு தறிகெட்டுப்போகும் தமிழ் தலைமுறையினாலும் தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் சீரழிவினாலும் தமிழ் தேசமும் தமிழினமும் மீள முடியாத அதலபாதாளத்துக்குள் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டத்தின் மூலம் முழு உலகையுமே தமது பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த தமிழ் தேசம் இன்று திட்டமிட்ட கலாசார சீரழிவுக்குள் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதுடன் கொலைகள், குற்றங்கள் ,கொடூரங்கள் நிறைந்த தேசமாகவும் மாறி வருகின்றது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>