குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், ‘ஜனாதிபதி மீதான நம்பிக்கை உடைந்துவிட்டது’

Share

கொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, ஒரு வருடம் ஆகியும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்ததன் மூலம் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை உடைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கழிந்துள்ளன. மாறி மாறி வருகின்ற ஒவ்வொரு அரசும், ஊடகவியலாளர்கள் படுகொலை குறித்த விசாரணைகளை ஆரம்பிப்போம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பிப்போம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருவார்கள். ஆட்சிக்கு வந்த பின்னர் தாங்கள் அளித்த வாக்குறுதியை மறந்துவிடுவார்கள். தற்போதைய ஜனாதிபதி, தோழர் அனுர குமாரவாக இருக்கும்போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். இதில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை துரிதமாக ஆரம்பித்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. அந்த விடயம் குறித்து அவர் அவதானம் செலுத்தவில்லை.”

மட்டக்களப்பில் இடம்பெற்ற, திருகோணமலையில் ஐந்து பாடசாலை மாணவர்களின் படுகொலையை உலகிற்கு வெளிப்படுத்தியமைக்காக படுகொலை செய்யப்பட்ட சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரும், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் எஸ். நிலாந்தன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனவரி 24, 2006 அன்று உயர் பாதுகாப்பு வலயமான திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுடர்ஒளி மற்றும் உதயன் நிருரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலையின் 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவை இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பில் உள்ள காந்தி பூங்காவின் முன் நிறுவப்பட்ட நினைவுத்தூபிக்கு முன் அவரை நினைவுகூர ஏற்பாடுகளை செய்திருந்தன.

16 வருடங்களுக்கு முன்பு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரை பதவி உயர்வு அளித்ததன் காரணமாக, ஜனாதிபதி மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை முற்றிலுமாக சிதைவடைந்துள்ளதாக எஸ். நிலாந்தன் மேலும் தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி மீதான நம்பிக்கை முற்றுமுழுதாக தகர்ந்துள்ளது. காரணம், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட ஒரு உயர் இராணுவ அதிகாரிக்கு அனுர குமார அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள விடயத்தை எக்னெலிகொடவின் மனைவி ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் அவரது செயற்பாடு எமக்கு வருத்தமளிக்கிறது.”

பிரகீத் என்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட குற்றவியல் வழக்கின் 9ஆவது குற்றவாளியான தெல்கே எரந்த ரதீஷ் பீரிஸின் நியமனம் குறித்து மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட, ஜனவரி 13, 2026 அன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தார்.

இதுபோன்ற கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு உயர் பதவி வழங்குவது நீதித்துறை செயல்முறைக்கு இடையூறாக இருக்குமென அவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் மேலும் வலியுறுத்தினார்.

கொலை நடந்து 20 வருடங்கள் ஆகின்றன

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு அரசாங்க பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்ட பின்னர், சுடர்ஒளி மற்றும் உதயன் நிருபர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டார்.

திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான மனோகரன் ரஜிஹர், யோகராஜா ஹேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், லோகிதராஜா ரோஹன், தங்கத்துரை சிவானந்தா ஆகியோர் ஜனவரி 2, 2006 அன்று குண்டுகள் வெடித்து இறந்ததாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள் மூலம் அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்ட பிரச்சாரத்தை சுகிர்தராஜனின் புகைப்படங்கள் மறுத்தன.

தனது பணியின் போது துணிச்சலான ஒரு தகவலை வெளியிட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தனது உயிரையே தியாகம் செய்த ஊடகவியலாளருக்கு இரண்டு தசாப்தங்களாக நீதி கிடைக்கவில்லை.

“தெற்கில் உள்ள பெரும்பான்மையான சிங்களவர்களுக்குத் தெரியாத சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் கடினமான வாழ்க்கை, உண்மை மற்றும் துணிச்சலான ஊடக நடைமுறைக்கு ஒரு அரிய எடுத்துக்காட்டு” என மூத்த ஊடகவியலாளர் அதுல விதானகே, ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்ட பத்து வருடங்களுக்குப் பின்னர் ஜே.டி.எஸ் இணையதளத்தில் எழுதினார்.

(சுகிர்தராஜனின் வாழ்க்கை மற்றும் படுகொலையை விபரிக்கும் முழு கட்டுரை) 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>