”சிறீதரன் எம்.பி.யை தமிழரசிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.அதன்மூலம் அவரின் எம்.பி. பதவியை பிடுங்க வேண்டும் என்பதில் ஒரு அணியினர் தீவிரமாக நிற்பதற்கு சுமந்திரன் அந்த எம்.பி. பதவி மூலம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற திட்டம்தான் காரணமா..?”
பாலா
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்று சிவஞானம் சிறீதரன் வாக்கெடுப்பு மூலம் பொதுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்டாரோ அன்று அவருக்கு பிடித்த ”சனி” இன்றுவரை சிறீதரனை விடாது துரத்தி வருகின்றது.ஆனால் ”மக்கள் பலம்” என்னும் பரிகாரத்தினால் சனியின் உக்கிர பார்வையிலிருந்து சிறீதரன் இரு கண்டங்களிலிருந்து தப்பி ஆலமரம் போல் அசையாது நிற்கும் நிலையில் அட்டமத்து சனியாக விட்டேனா பார் என்ற வகையில் தற்போது மூன்றாவது கண்டம் சிறீதரனை விரட்டத் தொடங்கியுள்ளது .
தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட சிறீதரனை சட்ட சதியினால் அப்பதவியை ஏற்கவிடாது தடுத்தவர்கள் அவரை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருந்தால் தாம் நினைத்தவற்றை செய்யமுடியாது என்பதனால் அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற முதலில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை சிறீதரன் ஆதரித்தமையை சாட்டாக வைத்து ”சிறீதரன் கட்சிக்கு கட்டுப்படவில்லை, தலைமையின் முடிவுக்கு முரணாக செயற்படுகின்றார் ஆகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற சதியை முன்னெடுத்தனர்.ஆனால் சிறீதரனின் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு மக்கள் ஆதரவும் கட்சிக்குள் தமிழ் தேசிய உணர்வாளர்களின் ஆதரவும் இருந்ததால் அவருக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இது சிறீதரனுக்கு ஏற்பட்ட முதல் கண்டம்.
முதல் கண்டத்திலிருந்து தப்பிய சிறீதரனை பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது தோற்கடித்து அவரின் மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்து அதன்மூலம் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்ட கட்சியில் ஒரு அணியினர் எடுத்த அடுத்த சதிதான் ”சிறீதரன் மதுபானசாலைக்கான அனுமதிகளை ரணில் அரசிடமிருந்து அரசியல் இலஞ்சமாக பெற்றுள்ளார்”என்ற குற்றச்சாட்டு.இந்த குற்றச்சாட்டை தீவிர பிரசாரமாக தமது விசுவாசிகள் மூலம் அந்த அணியினர் முன்னெடுத்தனர். ஆனால் ”நான் மதுபான சாலைக்கான அனுமதி பெற்றதை நீங்கள் நிரூபித்தால் நானாகவே கட்சியிலிருந்து மட்டுமல்ல அரசியலிலிருந்தே ஒதுங்கத் தயார்” என சிறீதரன் சவால் விடுத்தார்.
இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமாரவை நேரில் சந்தித்த அந்த அணியினர், ரணிலிடம் மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் பட்டியலில் சிறீதரனின் பெயர் இருக்கின்றது. எனவே அந்த பட்டியலை வெளியிடுங்கள் என மன்றாடினர் , அரசும் வெளியிட்டது அதில் சிறீதரனின் பெயர் இல்லை. அதனால் அந்த சதியும் தோற்றுப் போனது. இந்நிலையில் சிறீதரன் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அந்த சதியை முன்னெடுத்தவர்கள் அர்ச்சுனா எம்.பி.யின் ”தங்கம்” எடுத்த வாக்குகளை விடவும் குறைவாக வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்தனர். இது சிறீதரனுக்கு ஏற்பட்ட இரண்டாவது கண்டம்.
இவ்வாறான நிலையில்தான் சிறீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் தற்போது முறைப்பாடு செய்து சிறீதரனுக்கு எதிரான மூன்றாவது கண்டத்தை ஏற்படுத்தியுள்ளார் . சிறீதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களைப் பராமரித்து வருவதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார். இந்த முறைப்பாட்டாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தீவிர ஆதரவாளர். அவர் முன்னாள் சிங்கள அமைச்சர்கள் , எம்.பி.க்களின் சொத்துக்கள் தொடர்பில் இவ்வாறு பல முறைப்பாடுகளை செய்துள்ளவர்.
ஆனால் ”எனக்கு முகம்தெரியாத சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒருவர் நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் சொத்து குவிப்பு சம்பந்தமாக என் மீது முறைப்பாடு செய்திருக்கிறார். இந்த விடயத்தை நல்லதொரு விடயமாகவே நான் பார்க்கிறேன்.என்னுடைய பெயரிலேயோ அல்லது என்னுடைய குடும்பத்தினரின் பெயரிலேயோ இலங்கைக்குள்ளோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ சொத்துக்கள் இருந்தால் அது தொடர்பில் நிதிக்குற்றவியல் விசாரணை பிரிவினர் கண்டுபிடித்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களது தார்மீக கடமை என தெரிவித்திருக்கும் சிறீதரன், என் மீதான இந்த அவதூறான செயற்பாட்டுக்கு பின்னால் தமிழரசு கட்சியின் தலைமை பதவி தொடர்பில் எனக்கெதிராக நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்கும் தரப்பினரே இருப்பதாகவும் , தமிழரசு கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது என்னோடு சேர்ந்திருந்து எனது கைகளை தூக்கி, என்னோடு இணைந்து செயற்படுவதாக கூறியவர்களே ,கட்சியில் இணைந்து 6 மாதங்களே ஆகாதவர்களை வைத்துக்கொண்டு -பின்னணியில் இருந்துகொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து இடைக்கால தடையை பெற்றிருந்தார்கள். அந்த அடிப்படையில் இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் பின்னால் கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்தவர்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.எனவே, நிதி குற்ற புலனாய்வு பிரிவை நம்பி என்மீது சொத்து குவிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்திருக்கும் சிங்கள சமூகத்தை சேர்ந்த சஞ்சே மகாவத்த என்ற நபருடைய முறைப்பாட்டை ஏற்று உரிய விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அவசியம் .
என்னிடம் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அதனை உறுதிப்படுத்தவேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. வருடாந்தம் என்னுடைய சொத்து விபரங்களை பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பதோடு, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற பிரிவுக்கும் கையளித்து வருகிறேன். இணையத்தளங்களில் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் என்னுடைய சொத்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.என்னுடைய சொத்து விபரங்கள் என்பது வெளிப்படையானது.இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவனாக என்னுடைய சொத்து விபரங்களை வெளிப்படையாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணையத்தளத்தினூடாக வெளியிட்டு வருகிறேன்.அதனை எவரும் பார்க்கமுடியும். ஆகவே என் மீது சுமத்தப்பட்டிருக்கும் முறைப்பாட்டை ஏற்று விரைவாக விசாரணைகளை ஆரம்பித்து உண்மையை கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையை நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.
தலைமைக்கு சிறீதரன் கட்டுப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தோற்றவர்கள், சிறீதரன் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளார் என்ற போலி குற்றச்சாட்டை சுமத்தி தோற்றவர்கள் தற்போது சிங்களத்தரப்போடு -ரணில் தரப்போடு கைகோர்த்து சிறீதரன் சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் கட்சி நடவடிக்கையாக சிறீதரன் மீது கட்சி தலைமைக்கு கட்டுப்படாமை குற்றச்சாட்டுடன் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டையும் முன் வைத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருது நீக்குவதே இவர்களின் திட்டம்.
தமிழரசுக் கட்சியின் இந்த அணியினருக்கு சிறீதரன் மீது ஏன் இந்தக்கொலைவெறி என்றுபார்த்தால் கொலைவெறி சிறீதரன் மீது அல்ல அவரின் எம்.பி. பதவி மீதே என ”உள்வீட்டு”தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழரசின் தலைவர் பதவியிலும் பாராளுமன்ற எம்.பி.பதவியிலும் சிறீதரனிடம் தோற்றவர்களினால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அத்துடன் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் ”மக்களினால் தெரிவு செய்யப்பட்டால் மட்டுமே பாராளுமன்றம் செல்வேன். தேசியப்பட்டியல் மூலம் ஒருபோதும் பாராளுமன்றம் செல்லமாடடேன்” எனத் தெரியாத்தனமாக சூளுரைத்துவிட்ட நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தோற்று இன்று தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லமுடியாத நிலை.
அதனால்தான் சிறீதரனை ஏதோவொரு வழியில் கட்சியிலிருந்து வெளியேற்றினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும் . அதன் மூலம் பாராளுமன்றத்தேர்தலில் சிறீதரனுக்கு அடுத்ததாக வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில் பாராளுமன்றம் செல்லமுடியும் என்ற திட்டத்தில் சிறீதரனின் எம்.பி. பதவி மீது இலக்கு வைத்தே இவ்வாறு தொடர்ந்தும் சிறீதரனை வீழ்த்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்கின்றது அந்த உள்வீட்டுத்தகவல்.
சிறீதரனின் எம்.பி.பதவிக்கு எவ்வேளையும் ஆபத்து ஏற்படலாம் என்பதனை தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அளித்துள்ள விளக்கமொன்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.அந்த விளக்கத்தில் சுமந்திரன் பின்வருமாறு கூறுகின்றார்.
”தமிழரசுக்கட்சியில் எடுக்கப்படுகின்ற ஒழுக்காற்று நடவடிக்கைகள் சமபந்தமாக பலர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு முன்னைய காலத்தில் இப்படியாக இருந்ததில்லை. எவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. இப்பொழுது திடுதிப்பென்று புதிய பொது செயலாளர் இடை நிறுத்துகின்றார் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புகின்றார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
நான் இந்த கட்சிக்கு 2010 ஆம் ஆண்டே வந்தேன்.2011 ஆம் ஆண்டு பியசேன என்பவரின் வழக்கு வந்தது.2010 ஆம் ஆண்டு கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் 18 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் நாம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கினோம் .அந்த வழக்கை நான் தான் கையாண்டேன்.அப்போது தான் நானும் பார்த்தேன், எமது கட்சி யாப்பில் ஒழுக்காற்று நடவடிக்கை என்று எந்தவிதமான ஏற்பாடுகளும் இருக்க வில்லை.
எனது சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனிடம் இதில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஒன்றும் இல்லையே என்று கேட்டேன் . இதற்கு அவர் சொன்னார் ”தம்பி முன்னைய காலத்தில் ஒருவரும் நீதிமன்றம் போவதில்லை. கட்சி நீக்கினால் நீக்கினதுதான். கட்சி என்பது ஒரு பிரைவேட் கிளப். இது எமது அமைப்பு. அதில் உங்களுக்கு ஒத்துவராது விட்டால் நீங்கள் வெளியே போகலாம். கட்சியோடு இணங்க முடியாதுவிட்டால் போகச் சொன்னால் போக வேண்டியதுதான் என்று அவர் விளக்கம் கொடுத்தார்.
அதற்கு பின்னர் நான் தேடிப்பார்த்தபோது இந்தக்கட்சியின் ஆரம்பகாலத்தில் பலர் அப்படியாக விலக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். விசேடமாக இருவரை சொல்லலாம். தமிழரசுக்கட்சியின் மூளை என்று வர்ணிக்கப்படுகின்ற தீவகத்தை சேர்ந்த வீ. நவரத்தினம்.1970 ஆம் ஆண்டில் கட்சிக்கு மாறாக செயற்பட்டார் என்ற காரணத்தினால் அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அவர் கட்சியின் முடிவுக்கு மாறாக செயற்பட்டவுடனேயே எந்தவித விசாரணையும் இன்றி நீர் கட்சியிலிருந்து வெளியே போகலாம் என தந்தை செல்வா கூறி அவரை நீக்கி விட்டார்.
அடுத்தவர் சி.எக்ஸ். மார்ட்டின் . இவர் யாழ் எம்.பி.யாக இருந்தவர், அவர் ஒரு இளைப்பாறிய நீதிபதி. அவர் 70ஆம் ஆண்டளவில் கட்சிக்கு முரணாக செயற்பட்டபோது , ஒரு கூட்டத்தில் அவர் எழுந்து பேச முற்பட்டபோது தந்தை செல்வா அவரின் தோளில் கைவைத்து நீர் அமரும் எனக்கூறி இருத்திவிட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் மார்ட்டின் நீர் போகலாம் எனக்கூறி அவரை கட்சியை விட்டு அனுப்பி விட்டார்.
கட்சியின் ஒழுக்கக்கோவையுடன் இணைந்து செயற்பட முடியாதவர்கள் தாராளமாக வெளியே போகலாம்.கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சிக்கு மாறாக செயற்படுவதனை எந்த மானமுள்ள அரசியல் கட்சியும் அனுமதிக்காது.கட்சிக்குள் இருந்து கொண்டு பலவிதமான கேள்விகளை எழுப்பலாம் கருத்துரைக்கலாம்.கட்சி செய்வது தவறு என்று கூறலாம். இவை செவிமடுக்கப்படும். ஆனால் இறுதியில் ஒரு தீர்மானத்தை கட்சி எடுத்தால் அந்த தீர்மானத்திற்கு ஆதரவில்லாமல் பேசியவர்கூட கட்சியின் தீர்மானத்தோடு சேர்ந்து நிற்க வேண்டும்.
வெளியே போய் நின்று கொண்டு நான் இதனை எதிர்த்தேன். எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என சொல்வது முறையற்ற செயற்பாடு.கட்சி கட்டுப்பாட்டோடு இயங்காது விட்டால் அது ஒரு கட்சி அல்ல. கட்சி ஒரு கொள்கையை அறிவித்தால் இல்லை அதனை நான் ஏற்கமாடடேன் என்றால் அவர் வேறு கட்சிக்குபோகவேண்டும். இந்தக்கட்சியில் இருக்க முடியாது. இந்த விடயத்தில் எமது மத்திய குழுவும் செயற்குழுவும் தீர்க்கமான நடவடிக்கைளை எடுத்துள்ளது. நானாக தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எமது கட்சி யாப்பின் பிரகாரம் பொது செயலாளர் தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற நிறைவேற்று உத்தியோகத்தர்.கட்சி தீர்மானத்தை நிறைவேற்றுகின்றவர் நான் என்பதனால் என்னுடைய கையொப்பத்துடன் கடிதங்கள் போகின்றனவே தவிர அது எனது தன்னிச்சையான முடிவு அல்ல.
கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்படுகின்றவர்களை கட்சி நீக்குகின்றபோது கடந்த 30 வருடங்களாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் கட்சிகளுக்கு மாறாகவே வந்துள்ளன. அந்த எம்.பி.க்கு அந்த அதிகாரம் இருக்கின்றது என்ற வகையிலேயே தீர்ப்புக்கள் வந்தன. ஆனால் கடந்த 2 வருடங்களில் அந்த நிலை மாறியுள்ளது.கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டவரை கட்சி நீக்க முடியும் அதனால் அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீங்கும் என்று அண்மைய காலத்தில் 3 தீர்ப்புக்கள் வந்துள்ளன. அந்த 3 தீர்ப்புகளும் வருவதற்கு நானும் காரணமாக இருந்துள்ளேன் என்பதை பெருமையாக சொல்லலாம். அந்த வழக்குகளை வாதாடியவன் நான்.
ஒன்று நசீர் அஹமட்.மு.கா. அவரை அக்கட்சியிலிருந்து நீக்கியபோது அதை அவர் சவாலுக்குட்படுத்தினார். நான் வாதாடினேன்.30 வருடகால தீர்ப்புகள் மாற்றப்பட்டு ஒரு விசாரணை கூட இல்லாது நீக்கப்பட்டது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எம்.பி. பதவியும் இல்லாமல் போனது. அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டனர். கட்சியின் முடிவுக்கு மாறாக செயற்பட்டு அரசுக்கு சென்று அமைச்சு பதவிகளை எடுத்த காரணத்தினால் கட்சி அவர்களை நீக்கியது சரி என தீர்ப்பு வந்தது.எம்.பி. பதவியும் இல்லாமல் போனது.
கட்சியின் தீர்மானம். கொள்கைக்கு மாறாக செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். அவர்கள் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்ட ரீதியாகக்கூட நிவாரணம் எதுவும் கிடைக்காது என்பது இப்போது உறுதியாகியுள்ளது. எமது கட்சியில் கூட அண்மையில் சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர். முன்னாள் எம்.பி. சிவமோகன். அவர் இப்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். அவர் கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்ற காரணத்தை வைத்து அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தினோம். விளக்கம் கோரி கடிதம் அனுப்பிய போது அவர் கட்சிக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தார்.அவருக்கு நீதிமன்றம் நிவாரணம் கொடுக்க இருதடவைகளும் மறுத்து விட்டது.
எனவே கட்சி ஒழுக்கக் கட்டுப்பாடு காரணமாக நடவடிக்கை எடுக்கும்போது எந்த நீதிமன்றமும் அதில் தலையிடாது. ஆகவே எதையும் செய்து விட்டு கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதுக்கு நான் இணங்க மாட் டேன் .இது என்னுடைய சுதந்திரம், நான் இன்னொரு வேட்பாளரை ஆதரிப்பேன் என்று சொல்லி நடப்பவர் கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் ”
இதன் மூலம் தமிழரசுக்கட்சியில் சிறீதரனின் இருப்புக்கும் அவரது எம்.பி.பதவிக்கும் எந்தளவு ஆபத்து காத்திருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள முடியும் .ஒருவேளை சிறீதரன் சர்வாதிகாரத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அவர் நீதிமன்றம் மூலம் கூட நீதியைப் பெறமுடியாது என்ற நிலையேயுள்ளது.சிறீதரனைப் பொறுத்தவரையில் ”பூரண ஆயுள்…நித்தம் கண்டம் ”என்ற நிலையில் அவரின் தலைக்குமேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கின்றது.