சிறுமி ஒருவர் மீதான பாலியல் துன்புறுத்தலில் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு இதுவரை கைது செய்யப்படவில்லை?

Share

அரசியல் மற்றும் மத அதிகாரத்தைக் கொண்ட அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்னா என்னும் குற்றவாளி இன்னும் சுதந்திரமாக நடமாடுகின்றாரா?

அரசியல் மற்றும் மத அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்னவை என்னும் குற்றவாளி இன்னும் சுதந்திரமாக நடமாடுகின்றாரா? என்ற கேள்வியை தென்னிலங்கை சட்டத்தரணிகள் சிலர் சட்டமா அதிபர் முன்பாக வைத்துள்ளனர்

ஒரு சிறுமி சம்பந்தப்பட்ட கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னணி பௌத்த தேரரான பல்லேகம ஹேமரத்னவைக் கைது செய்யவும், அவருக்குப் பயணத் தடை விதிக்கவும் அனுராதபுரம் பிரதம நீதவான் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் உள்ள மிக முக்கியமான எட்டு பௌத்த புனிதத் தலங்களை நிர்வகிக்கும் அட்டமஸ்தானாதிபதியாக குறித்த தேரர் செயற்படுகின்றார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும், சந்தேகத்திற்குரிய தேரரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல தேரர் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் தவறியதால் நேரடி விசாரணைகளை நடத்த அதிகார சபை தீர்மானித்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ப்ரீத்தி இனோகா ரணசிங்க, பிரதித் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா மற்றும் சட்ட நடைமுறைப் பிரிவின் தலைவர் சட்டத்தரணி சஞ்சீவனி அபேகோன் ஆகியோரை உள்ளடக்கிய குழு இன்று அனுராதபுரத்திற்குச் சென்று விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதன் பின்னரே நீதிபதி பொலிஸாருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

“இந்தச் சந்தேகத்திற்குரிய தேரரை கைது செய்யுமாறு நாங்கள் இதற்கு முன்பும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் அது முறையாகச் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்தக் குற்றம் ஒரு சிறுமிக்கு எதிரான கடுமையான துன்புறுத்தல் சம்பவமாகும். பொலிஸ் விசாரணையில் சில குறைபாடுகள் இருந்ததால்தான், அதிகார சபையின் தலைவர் தலைமையிலான குழு அனுராதபுரத்திற்குச் சென்று விடயங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தது,” என அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது அடையாளத்தைப் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அதிகாரி, சந்தேகத்திற்குரிய தேரரின் அரசியல் மற்றும் மத அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு தரப்பினர் இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க வலுவாக முயற்சி மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

“உண்மையில், அந்தத் தேரர் முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டு, உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அதன் பின்னரே, இந்த சந்தேகத்திற்குரிய தேரரரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,” என அவர் கூறினார்.

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் ஒரு இளைஞருடன் இருந்தபோது, சம்பந்தப்பட்ட அந்தச் சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரால் தான் முதலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அந்தச் சிறுமி விசாரணையின்போது பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார். இதற்காகத் தனது தாய்க்கும் தந்தைக்கும் அவ்வப்போது பணம் கொடுக்கப்பட்டதாகவும் அந்தச் சிறுமி மேலும் கூறியிருந்தார்.

இதற்கமைய, கம்பஹா பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு முதற்கட்ட விசாரணையை நடத்தி, அனுராதபுர நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தபோதிலும், சந்தேகத்திற்குரிய தேரர் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் அடங்கிய குழு, சந்தேகத்திற்குரிய தேரரிடம் விசாரணை நடத்தி விடயங்களை பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்திருந்தது.

‘ஆதாரம் இல்லாமல் எவரையும் கைது செய்ய முடியாது’ என சந்தேகத்திற்குரிய தேரரை கைது செய்யத் தவறியது குறித்துக் கேட்டபோது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.கே.வூட்லர் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

இருப்பினும், சட்டத்தரணியாகவும் இருக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் இந்தக் கூற்று தவறானது மற்றும் சட்டவிரோதமானது என சட்ட நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில், சிறுவர் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில், முன்னணி விசாரணை அதிகாரிகளான பொலிஸாருக்கு ஒரு சந்தேகநபரைக் கைது செய்ய பரந்த தன்னிச்சையான அதிகாரங்கள் காணப்படுகின்றன.

சிறுமியைப் பரிசோதித்த, கம்பாஹா வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரிர், சிறுமி நிச்சயமாகக் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>