சிறுமியை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்த எட்டு புண்ணியத்தலங்களின் பொறுப்பாளரும் நுவர கலாவிய பிரதேசத்தின் பிரதான சங்கநாயக்கருமான பல்லேகம சிறி சுமன ரதனபால ஹேமரதன நாயக்க தேரர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்னவினால் 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22-05-2026)சந்தேகநபரான 71 வயதுடைய பௌத்த தேரர், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் சந்தேகநபரான தேரர் இழைத்துள்ள குற்றத்தின் தன்மை, அதற்குரிய சட்ட விதிமுறைகள் மற்றும் அதன் காரணமாக பிணை வழங்குவது தொடர் விசாரணைகளுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்த நிலையிலேயே சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள பல்லேகம ஹேமரதன தேரருக்கு நீதவான் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான தேரருக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து அதிர்ச்சியுடன் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமிக்காக முன்னிலையான ஒரு சட்டத்தரணி, இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு ஏதேனும் உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எமக்கு வாசிக்கக் கிடைத்த அதிகாரசபையின் 18 பக்க அறிக்கையின் தொடக்கத்திலேயே, இடம்பெற்றுள்ள குற்றம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி சந்தேகநபரான தேரரைக் குறுகிய காலத்திற்குள் கைது செய்வதையும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதையும் பொலிஸார் தவிர்த்துள்ளனர் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸார் அநாவசியமான முறையில் விசாரணை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தியுள்ளனர் என்பதும் அதில் காட்டப்பட்டுள்ளது.
“இத்தகையதொரு பின்னணியில் இந்த சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்ட சிறுமியும் ஏனைய சாட்சிகளும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எமது அதிகாரசபை அவதானிக்கின்றது. மேலும், இந்த பிக்கு மத, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தக்கூடிய ஒருவராவார். அதேநேரம் இச்சிறுமி பொருளாதார ரீதியாக கடுமையான வறுமையால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியாவார். மேலோட்டமாகப் பார்க்கும்போதே தெளிவாகத் தெரியும் இந்த சமச்சீரற்ற அதிகாரத்துக்கு முன்னிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியங்கள் மீதும் சாட்சிகளின் மீதும் தாக்கம் செலுத்தப்படுவதற்கான அதிக அபாயம் நிலவுவது எமது அதிகாரசபைக்குப் புலனாகின்றது,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பல்லேகம ஹேமரதன தேரரையும், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அவளது தாயாரையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சந்தேகநபர் தரப்பின் சமர்ப்பிப்புகளைக் கருத்திற்கொண்டு நீதவான் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர், சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட பிள்ளைக்காக அதிகார சபையின் சார்பில் நான் விடய சமர்ப்பிப்புகளை முன்வைத்தேன். சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டால் ஏற்படக்கூடிய நிலைமை குறித்து நாம் எழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் விளக்கினோம். ஆனால் நீதவான் பிணை வழங்கத் தீர்மானித்தார்.”
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்காமல் இருப்பதற்கான சட்டரீதியான சாத்தியக்கூறுகள் இருந்தும் அவ்வாறு பிணை வழங்கப்படுவது எவ்வாறு எனக் கேட்டபோது, அது அவ்வாறல்ல என விளக்கிய பணிப்பாளர், பிணைச் சட்டத்தின்படி சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை வழங்கும் அதிகாரம் நீதவானுக்கு உண்டு எனக் குறிப்பிட்டார்.
“பிணைச் சட்டத்தின்படி பிணை வழங்குவதற்கான அதிகாரம் நீதவானுக்கு உண்டு. ஆனால் இவ்வாறானதொரு சந்தேகநபருக்குப் பிணை வழங்கப்பட்டால் அதனால் சமூகத்தில் கொந்தளிப்பும், விசாரணைகளுக்குப் பாதிப்பும் ஏற்படக்கூடும் என்ற இடத்திலிருந்தே அதிகாரசபை சமர்ப்பிப்புகளை முன்வைத்தது. ஏனெனில் பொலிஸார் எவ்வாறு இந்த விசாரணையை நடத்தினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆரம்பக் கட்டத்தில் செய்ய வேண்டிய எந்தவொரு காரியமும் முறையாகச் செய்யப்படவில்லை. அதனால்தான் அதிகாரசபைக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்து நீதவானிடம் விடயங்களை விளக்கிக்கூற வேண்டியதாயிற்று. அதன் பின்னரே ஹேமரதன தேரர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.”
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், சந்தேக நபரான ஹேமரதன தேரர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்போது பொலிஸார் முறைமையற்ற விதத்திலும் பொறுப்பற்ற வகையிலும் செயற்பட்டுள்ளனர் என்பது மிகவும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
“2026.04.22 அன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு இது குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்று, அது தொடர்பில் விளக்கம் கோரும் வரை இந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை எனத் தெரியவருகிறது,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், “சிறுமியொருவரைப் பணத்திதுக்காக விற்றல், பாலியல் வன்புணர்வு மற்றும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தகவல்கள் அறிக்கைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அக் குற்றங்களுக்குரிய சந்தேகநபர்கள் பெயரிடப்படாததோடு சம்பந்தப்பட்ட தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருக்கவில்லை,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் தொடர்பில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், சந்தேகநபரான தேரரைக் கைது செய்யாமை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ நெதவத்தவிடம் எழுத்து மூலம் விளக்கம் கோரப்பட்ட போதிலும் அதற்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை என சட்ட அமுலாக்கல் பணிப்பாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் மீது செல்வாக்கு பிரயோகிக்கப் பட்டுள்ளதாக அறிக்கையில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதுடன், பொலிஸாரினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவியும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான பிரீதி இனோகா ரணசிங்கவினால் ஒரு வாரத்துக்குள் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களிலும், பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஊழியர்கள் மீதும் சந்தேக நபரான தேரர் தனது செல்வாக்கைப் பிரயோகித்துள்ளார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
“மேலும் இந்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் ஒரு சாதாரண சந்தேக நபரை நடத்தும் விதத்தில் அல்லாமல், ஏதோவொரு விசேடமான முறையில் செயற்பட்டுள்ளனர்” என்பதை மிகவும் தெளிவாகவும் தர்க்கரீதியாகவும் சட்டரீதியாகவும் நீதவானுக்கு விளக்கும் அதிகாரசபையின் அறிக்கையானது, பொலிஸாரின் செயற்பாடுகளைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அதன் காரணமாகவே இத்தகைய துஷ்பிரயோகச் சம்பவமொன்றின் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமையையும் விளக்கியுள்ளது.
எட்டாம் வகுப்பு சிறுமியைப் பெறுவதற்கு ஒரு இலட்சம் ரூபாய்
பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுள் பிரதானமானது சந்தேகநபரான ஹேமரதன தேரர் அச்சிறுமியை அவளது தாயிடம் கேட்டமையாகும்.
“மகள் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது, மகளோடு இருப்பதற்கு தருகிறீர்களா என்று தேரர் என்னிடம் கேட்டார்,” எனத் தாய் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதேபோன்று சந்தேகநபரான தேரர் அச்சிறுமியை விகாரைக்குள் அழைத்துச் சென்று சிறிது நேரத்திலேயே சிறுமி வெளியே வந்ததாகவும், பிள்ளை முகம் சுளித்தபடி இருந்ததால் தான் அது குறித்துப் பிள்ளையிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட தேரர் தனது முகத்தில் முத்தமிட்டதாகப் பிள்ளை கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தேரர் தாய்க்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கியதாகவும், ‘மகளே, வறுமை காரணமாகத்தான் இந்தப் பணத்தை வாங்குகிறேன்’ என தான் பாதிக்கப்பட்ட பிள்ளையிடம் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,” என சந்தேகநபரான தாயின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தேரர் கடந்த வழக்குத் தவணைகள் எவற்றிலுமே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், அத்தனகல்ல உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசாரணைக் குழுவின் அனுராதபுரத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் பின்னர், அவர் அவசரமாகக் கொழும்புக்கு வந்து நவலோக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர், இந்தத் தேரரைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அல்லது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பலமுறை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட போதிலும் கடந்த வழக்குத் தவணை வரை அது நடக்கவில்லை.
“தொடர்ச்சியான நெஞ்சு வலி, கைகளை உயர்த்துவதில் சிரமம், இரு கால்களும் மரத்துப்போதல், காலணிகள் இன்றி நடப்பதற்கான இயலாமை, தலைவலி மற்றும் மலச்சிக்கல்” ஆகிய நோய்கள் இருப்பதாக முறையீடு செய்து ஹேமரதன தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சந்தேகநபரான தேரரின் வைத்திய கட்டில் அறிக்கைளைக் கண்காணித்து அவற்றை இந்த அறிக்கையில் சேர்த்துள்ள அதிகாரசபை, சந்தேகநபருக்கு ‘அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு எவ்வித நோய் நிலைமையும் இல்லை’ எனக் கூறுகிறது.
“இந்தத் தேரர் உண்மையிலேயே திடீரென ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய அதிகார சபையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து தேரருக்குரிய முழுமையான பரிசோதனை அறிக்கை கோரப்பட்டதுடன், அது விசேட சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் கிளிபர்ட் பெரேராவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பரிசோதனை அறிக்கைகளுக்கு அமைய, இந்த வயதுக்குரிய ஒரு நபருக்கு இருக்கக்கூடிய சாதாரண நாட்பட்ட நோய்கள் மட்டுமே அவருக்கு உள்ளன, அவை நீண்ட காலமாக இருந்த நோய் நிலைகளே தவிர திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோய் நிலைமை எதுவும் இல்லை என்பதே அவரது கருத்தாக இருந்தது” என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட 06 வைத்திய நிபுணர்களைக் கொண்ட வைத்தியக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 2026.05.20 ஆம் திகதியளவில் சந்தேக நபரான பௌத்த தேரர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார் என்பதாகும். இந்த அனைத்து விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், தனது சுய விருப்பத்தின் பேரில் செயற்பட்ட அனுராதபுரம் பிரதான நீதவான், சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்குள்ளான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரைப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
‘பிணை வழங்க முடியாது, ஆனாலும் வழங்கப்பட்டது’பொலிஸாரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அதுல ரணகல தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர் எம்மிடம் கூறுகையில், பிணைத் தீர்ப்புடன் அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பும் நீதியும் கிடைப்பது குறித்துப் பலத்த அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
“ஒரு சட்டத்தரணியாக இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். வெவ்வேறு நபர்கள் சட்டத்தின் முன்னிலையில் வெவ்வேறு விதமாக நடத்தப்படுகிறார்களா என எனக்குத் தோன்றியது. அது அவ்வாறு நடக்குமாயின், இவற்றின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்றுதானே நாம் நினைக்க வேண்டியுள்ளது? அவ்வாறு சந்தேகப்படுவது நியாயமானதுதானே?” என பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி யாலித விஜேசுந்தர தெரிவித்தார்.
அரசியலமைப்பில் சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் எனக் கூறப்பட்டிருந்த போதிலும், இலங்கையின் சட்ட அமுலாக்கத்தில் அது அவ்வாறு இல்லை என்பதைத் தனது இரண்டு தசாப்த கால சட்டத்தரணி வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை காண முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்தரணி சஜீவனி அபேகோனின் தலையீட்டை அவர் பாராட்டினார்.
“சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவது குடிமக்களுக்குரிய உரிமையாகும். இந்த வழக்கு ஒரு பாரதூரமான சிறுவர் துஷ்பிரயோக வழக்காகும். இவ்வாறானதொரு வழக்குக்குப் பிணை வழங்கப்பட்டால் குடிமக்கள் என்ற ரீதியில் நமக்கு என்ன தோன்றும்? சட்டத்தின் அடிப்படையிலும் இந்தக் குற்றத்துக்குப் பிணை வழங்க முடியாது. ஆனால் பல்லேகம ஹேமரதன தேரருக்குப் பிணை கிடைத்துள்ளது. இதே குற்றத்தைச் சாதாரண மனிதன் ஒருவன் செய்திருந்தால் பிணை கிடைத்திருக்குமா? சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்தரணி பிணை வழங்குவதைத் தடுப்பதற்குப் பலத்த முயற்சி எடுப்பதை நாம் கண்டோம். ஆனால் இறுதி முடிவு நீதிமன்றத்துக்குரியது. ஒரு சட்டத்தரணியாக மட்டுமல்லாது, ஒரு குடிமகனாகவும் நான் கேட்க விரும்புவது, நாம் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்றால் பல்லேகம ஹேமரதன தேரருக்கு ஒரு சட்டமும் சாதாரண மனிதனுக்குப் பிறிதொரு சட்டமும் என இரண்டு சட்டங்கள் உள்ளனவா என்பதுதான்,” என சட்டத்தரணி யாலித விஜேசுந்தர மிகுந்த ஆவேசத்துடன் கூறினார்.
சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகிக்கப்படும் அட்டமஸ்தானாதிபதி நாயக்க தேரரின் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நீதிமன்ற வளாகத்துக்கு அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாராதிபதி ஈதலவெடுனுவெவே ஞானதிலக, அபயகிரிய ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கள்ளஞ்சியே ரதனசிறி, லங்காராம விகாரையின் விகாராதிபதி ரளபனாவே தம்மஜோதி, தூபாராம விகாரையின் விகாராதிபதி கஹல்லே ஞானிந்த மற்றும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நுஹேதன்னே பஞ்ஞாநந்த உள்ளிட்ட தேரர்கள் வருகை தந்திருந்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கே. விஜேசிங்க