சுவிற்சலாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார கருத்தரங்கில் உலகத தலைவர்கள் மத்தியில் ஆணித்தரமான உரையாற்றிய கனடியப் பிரதமர் மார்க் கார்னி

Share

கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று சுவிற்சலாந்து தேசத்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார கருத்தரங்கில் அமைதியை விரும்பும் உலகத தலைவர்கள் மத்தியில் ஆணித்தரமான உரையை ஆற்றி க னடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்கள் பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார் என்றால் அது மிகையாகாது.
அவர் அங்கு தனக்குரிய நேரத்தில் உரையாற்றிய போது கீழ்க் கண்டவாறு ஆரம்பித்தார். உலகத் தலைவர்களும் பொருளாதார ஆலோசகர்களும் அவரது உரையை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்

உலக ஒழுங்கு தகர்வது குறித்தும், அதாவது நல்லதொரு கதையின் முடிவு குறித்தும், பெரும் சக்திகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றியிருக்கும் கொடூரமான யதார்த்தத்தின் ஆரம்பம் பற்றியும் நான் இன்று பேசவுள்ளேன்.

ஆனால், மற்றைய நாடுகள், முக்கியமாகக் கனடா போன்ற இடைநிலை பலம் கொண்ட தேசங்கள் சக்தியற்றவை அல்லவெனவும் நான் கூறுவேன். ஆனால் மனித உரிமைகளை மதிப்பது, நீடித்திருக்கும் அபிவிருத்தி, ஒற்றுமை, இறையாண்மை, உலக நாடுகளின் பிரதேச ஒருமைப்பாடு போன்ற எமது விழுமியங்களை உள்ளடக்கிய புதியதொரு ஒழுங்கைக் கட்டியெழுப்பும் வல்லமை இந்த நாடுகளிடம் உள்ளது.

எனவே சக்தி குறைந்தவர்களில் மத்தியில் இருந்து தான் சக்தியின் நேர்மையான போக்கு ஆரம்பமாகும்.பெரும் சக்திகளுக்கு இடையில் போட்டி நிகழும் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்வது நாள்தோறும் எமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு மறைந்துவருகிறது. வலியவர்கள் தம்மாலியன்றதைச் செய்கிறார்கள், பலவீனமானவர்கள் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கிறார்கள்.

சர்வதேச உறவின் இயற்கைத் தன்மை, தன்னைத் தானே மீளஉறுதிப்படுத்துமென்ற துசிடிடீஸின் (Thucydides) முதுமொழி தவிர்க்கமுடியாததென முன்வைக்கப்படுகிறது. இந்தத் தர்க்கத்தை எதிர்கொள்கையில் நாடுகள் இணங்கிப் போகும், அனுசரித்து நடக்கும், பிரச்சினைகளைத் தவிர்க்கும், பணிந்து போவது பாதுகாப்பென நம்பும் பலமான போக்கு இருக்கும். ஆனால், இது நடக்காது.

அப்படியானால் எமது தெரிவுகள் என்ன?

செக் நாட்டு அதிருப்தியாளர் வட்ஸ்லவ் ஹவெல் (Václav Havel) 1978 ஆம் ஆண்டில் சக்தியற்றவர்களின் சக்தி என்ற ஒரு கட்டுரையை எழுதினார். கொம்யூனிஸ கட்டமைப்பு எவ்வாறு தன்னைத்தானே நிலைநிறுத்துகிறதென்ற எளிய கேள்வியை அவர் அதில் எழுப்பினார்.

அவரது பதில் மரக்கறிக் கடைக்காரரிடம் இருந்து ஆரம்பமாகியது. இந்தக் கடைக்காரர் ஒவ்வொரு காலையும் அவரது யன்னலில்“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற அறிவிப்பை வைக்கிறார். ஆனால் அதில் அவருக்கு நம்பிக்கையில்லை. அதை எவரும் நம்பவில்லை. இருப்பினும், பிரச்சினையைத் தவிர்ப்பதற்கும், பணிவைக் காட்டுவதற்கும், இணைந்து போவதற்குமென அவர் இந்த அறிவிப்பை வைக்கிறார். வீதியில் இருக்கும் ஒவ்வொரு கடைக்காரரும் இதைச் செய்வதால் இந்தக் கட்டமைப்பு நீடிக்கிறது.

வன்முறை மூலம் மட்டுமன்றி, சாதாரண மக்கள் போலியெனத் தமக்குத் தனிப்படத் தெரிந்த சடங்குகளில் பங்கேற்பதன் மூலமும் இது நீடிக்கிறது.ஹவெல் இதைப் “பொய்க்குள் வாழ்தல்” எனக் குறிப்பிட்டார். இந்தக் கட்டமைப்பின் சக்தி அதன் உண்மைத்தன்மையில் இருந்து வருவதில்லை. மாறாக, இது உண்மைபோன்று நடக்க ஒவ்வொருவரும் கொண்டுள்ள விருப்பத்தில் இருந்து வருகிறது. இதே மூலமே அதன் பலவீனமாகவும் இருக்கிறது: ஒருவராவது இதற்கமைவாகச் செயற்படுவதை நிறுத்தும்போது – மரக்கறிக்கடைக்காரர் அவரது அறிவிப்பை அகற்றும்போது – இந்த மாயை உடையத் தொடங்குகிறது.

நிறுவனங்களும் நாடுகளும் அவற்றின் அறிவிப்புகளை அகற்றும் நேரம் வந்துவிட்டது.விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கென நாம் அழைத்த கட்டமைப்பின் கீழ் கனடா போன்ற நாடுகள் பல தசாப்தங்களாகச் செழித்து வளர்ந்தன. இதன் நிறுவனங்களில் நாம் இணைந்து, இதன் கொள்கைகளைப் புகழ்ந்து, என்ன நடக்குமென எதிர்வுகூறக்கூடிய இதன் தன்மையால் பயனடைந்தோம். இதன் பாதுகாப்பின் கீழ் விழுமிய அடிப்படையிலான வெளியுறக் கொள்கைகளை நாம் பின்பற்றக்கூடியதாக இருந்தது. விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு என்ற கதை பகுதியளவு போலியானதென நாம் அறிந்திருந்தோம். அதாவது, மிகப் பலமானவர்கள் வசதிப்பட்டபோது விதிகளுக்கு விலக்காக நடந்தார்கள். வணிகம் தொடர்பான விதிகள் சமனற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. குற்றம் சுமத்தப்பட்டவரோ, பாதிக்கப்பட்டவரோ யாரென்பதைப் பொறுத்துச் சர்வதேச சட்டம் மாறுபட்ட வகைகளில் செயற்படுத்தப்பட்டது.

இந்தக் கற்பனை பயனுள்ளதாக இருந்ததுடன், முக்கியமாக அமெரிக்க மேலாதிக்கம் திறந்த கடற்பாதைகள், உறுதியான நிதிக் கட்டமைப்பு, கூட்டுப் பாதுகாப்பு, முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சட்டப்படல்களுக்கான ஆதரவு போன்ற பொது நலன்களை வழங்கியது.ஆகவே, நாம் யன்னலில் அறிவிப்பை வைத்தோம். சடங்குகளில் பங்கேற்றோம். பேச்சுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளிகளை சுட்டிக்காட்டுவதைப் பொரும்பாலும் தவிர்த்தோம்.
இந்தப் பேரம் செயலிழந்துவிட்டது.

நான் இதை வெளிப்படையாகக் கூறுகிறேன்: நாம் மாற்றத்தின் மத்தியில் இல்லை, ஒரு தகர்வின் மத்தியிலேயே இருக்கிறோம்.

சுவிற்சலாந்து தேசத்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார கருத்தரங்கில் அமைதியை விரும்பும் உலகத தலைவர்கள் மத்தியில் ஆணித்தரமான உரையை ஆற்றி க னடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்கள்

கடந்த இரண்டு தசாப்தங்களில் நிதி, சுகாதாரம், சக்தி, புவிசார் அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்ட நெருக்கடிகள் அதீதமான உலக ஒருங்கிணைப்பின் ஆபத்துக்களை வெளிக்காட்டின.

மிகவும் அண்மையில், பெரும் சக்திகள், பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதங்களாகப் பயன்படுத்த ஆரம்பித்தன. இறக்குமதி வரிகள் நோக்கங்களை அடைவதற்குப் பயன்படுத்தப்பட்டன. நிதிக் கட்டமைப்பு கட்டாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. விநியோகச் சங்கிலிகள் பயன்படுத்தப்படுவதற்கான பலவீனங்களாகின.

ஒருங்கிணைவு நீங்கள் கீழ்ப்படியக் காரணமாக இருக்கும்போது, ஒருங்கிணைவு ஒவ்வொருவருக்கும் நன்மையானதென்ற“பொய்க்குள் வாழ்வது” உங்களுக்குச் சாத்தியமற்றது.
இடைநிலைச் சக்திகள் நம்பியிருந்த – உலக வணிக அமைப்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு (COP) – போன்ற, கூட்டாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கட்டமைப்புகள் பெரிதும் பலவீனமடைந்துள்ளன.

இதன் விளைவாக, பல நாடுகள் ஒரே தீர்மானங்களை எடுக்கின்றன. சக்தி, உணவு, இன்றியமையா கனிமங்கள், நிதி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் அதிக மூலோபாய சுயாட்சியை அவை உருவாகவேண்டும்.

இந்த உந்துதல் புரிந்துகொள்ளத்தக்கது. தனக்குத்தேவையான உணவைப் பெற்றுக் கொள்ள முடியாத, அல்லது எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத, அல்லது தன்னைத் தற்பாதுகாத்துக் கொள்ளமுடியாத ஒரு நாட்டிற்குச் சொற்ப தெரிவுகளே உள்ளன. விதிகள் உங்களைப் பாதுகாக்காத நிலை வந்துவிட்டால், நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஆனால் இது எதற்கு வழிவகுக்குமென்பது குறித்து நாம் தெளிவாக இருக்கவேண்டும். கோட்டைகள் நிரம்பிய உலகம் ஏழ்மையானதாகவும், பலவீனமானதாகவும், நிலைத்திருக்கும் தன்மை குறைந்ததாகவும் இருக்கும்.

மேலுமொரு உண்மையும் இருக்கிறது: பெரும் சக்திகள் தங்குதடையின்றி அதிகாரத்தையும், நலன்களையும் அடையதவதற்காக விதிகள் மற்றும் விழுமியங்கள் குறித்த பாசாங்குகளைக் கூடச் செய்யாவிட்டால், “பரிவர்த்தனைவாதத்திலிருந்து” கிடைக்கும் நலன்களை மீள உருவாக்குவது கடினமாகிவிடும். மேலாதிக்க நாடுகளால் அவற்றின் உறவுகளைத் தொடச்சியாகப் பணமாக்க முடியாது.

நேச நாடுகள் நிச்சயமற்ற நிலையில் ஆபத்தைத் தவிர்ப்பதற்குப் பன்முகப்படுத்திக் கொள்வார்கள். காப்பீட்டைப் பெறுவார்கள். தெரிவுகளை அதிகரிப்பார்கள். இது இறையாண்மையை மீண்டும் உருவாக்கும். – ஒரு காலத்தில் விதிகளை அடித்தளமாகக் கொண்டிருந்த இறையாண்மை, இனிவரும் காலத்தில் அழுத்தத்தைத் தாங்கும் திறனை அதிகம் அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

நான் கூறியதைப் போன்று, இத்தகைய பாரம்பரிய இடர் மேலாண்மைக்கு ஒரு விலை இருக்கும். ஆனால் இந்த மூலோபாய சுயாட்சியினதும், இறையாண்மையினதும் விலை பகிர்ந்துகொள்ளத்தக்கது. மீள்தன்மையில் கூட்டாக முதலீடுவது ஒவ்வொருவரும் அவரவர் சொந்தக் கோட்டைகளைக் கட்டுவதை விடச் செலவு குறைந்தது. பொதுவான தராதரங்கள் துண்டுபடுவதைக் குறைக்கும். நிரப்புந்தன்மைகள் நேர்மதிப்புப் பெறுமதி கொண்டவை.
கனடா போன்ற இடைநிலை பலம் கொண்ட தேசங்களின் கேள்வி இது தான் , இந்தப் புதிய யதார்த்தத்திற்கு ஏற்ப மாறவேண்டுமா என்பதல்ல. நாம் நிச்சயம் மாறவேண்டும். உயரமான சுவர்களைக் கட்டுவதன் மூலம் நாம் மாறுகிறோமா, அல்லது மேலும் அதிக எதிர்பார்ப்புள்ள ஒன்றைச் செய்ய எம்மால் முடியுமா என்பதுதான் கேள்வி.

விழித்தெழுவதற்கான அழைப்பை முதலில் செவிமெடுத்தவர்களில் கனடாவும் அடங்கியிருந்தது. நாம் எமது மூலோபாய தோரணையை அடிப்படையில் மாற்ற இது வழிவகுத்தது.

எமது புவிவியலும், கூட்டணிகளின் உறுப்புரிமையும் செல்வச் செழிப்பையும், பாதுகாப்பையும் தானாகவே கொண்டுவருமென்ற பழைய, வசதியான அனுமானம் இனிச் செல்லுபடியாகாதெனக் கனேடியர்கள் அறிவார்கள்.

எமது புதிய அணுகுமுறை, அலெக்சாண்டர் ஸ்ரப் (Alexander Stubb) “விழுமிய அடிப்படையிலான யதார்த்தவாதம்” எனக் குறிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டது – வேறு விதமாகக் கூறுவதாக இருந்தால், கொள்கை அடிப்படையிலும், நடைமுறைச் சாத்தியமாகவும் இருக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு, ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு அமைவானவை தவிர்ந்த சந்தர்ப்பங்களில் பலம் பிரயோகிப்பதைத் தடை செய்வது, மனித உரிமைகளை மதிப்பது ஆகிய எமது அடிப்படை விழுமியங்கள் மீதான உறுதிப்பாட்டைக் கொள்கையாகக் கொண்டிருப்போம்.
முன்னேற்றம் பெரும்பாலும் சிறிதுசிறிதாக நிகழும் என்பதையும், நலன்கள் வேறுபடும் என்பதையும், ஒவ்வொரு பங்காளியும் எமது விழுமியங்களைக் கொண்டிருக்க மாட்டார்களென்பதையும் புரிந்து கொள்வதில் நடைமுறைச் சாத்தியமாக இருப்போம். நாம் பரந்தளவில், மூலோபாய நோக்கத்துடன், திறந்த பார்வையுடன் ஈடுபாடுகொள்கிறோம். நாம் விரும்பும் உலகமாற்றம் வரும்வரை காத்திருக்காது, உலகத்தை அது இருக்கும் நிலையிலேயே எடுத்துக்கொள்கிறோம்.

உறவுகளின் ஆழம் எமது விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கனடா உறவுகளைத் திருத்தம் செய்துவருகிறது. உலக ஒழுங்கு மாறும் தன்மையுள்ளதாயிருப்பதாலும், இதன் காரணமான ஆபத்துகளாலும், அடுத்து வருவது என்னவென்பதாலும், எமது செல்வாக்கை உச்சமாக்கும் வகையில் விரிவான ஈடுபாட்டுக்கு முன்னுரிமையளித்துள்ளோம்.
இனிமேல் நாம் எமது விழுமியங்களின் பலத்தில் மட்டும் தங்கியிருக்காது, எமது பலத்தின் மதிப்பிலும் தங்கியிருப்போம்.

நாம் இந்தப் பலத்தை எமது நாட்டில் நாம் கட்டியெழுப்புகிறோம்.

எனது அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, வருமானம், மூலதன ஆதாயம், வணிக முதலீடு ஆகியவற்றின் மீதான வரிகளைக் குறைத்துள்ளோம், மாகாணங்களுக்கு இடையிலான வணிகத்திற்கான அனைத்து சமஷ்டித் தடைகளையும் அகற்றியுள்ளோம். எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI), இன்றியமையாத கனிமங்கள், புதிய வணிக வழித்தடங்கள் மற்றும் ஏனையவை மீது ஒரு ட்ரில்லியன் டொலர் முதலீட்டை விரைவுபடுத்தி வருகிறோம்.

எமது பாதுகாப்புச் செலவினத்தை 2030 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக்குவதுடன், உள்நாட்டுத் தொழிற்துறைகளைக் கட்டியெழுப்பும் வழிகளில் அதைச் செய்கிறோம்.
நாம் வெளிநாடுகளில் விரைவாகப் பன்முகப்படுத்தி வருகிறோம். ஐரோப்பாவின் பாதுகாப்புக் கொள்முதல் ஏற்பாடுகளான SAFE இல் இணைவது உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அனைத்தையும் உள்ளடக்கிய மூலோபாய கூட்டாண்மை ஒன்றுக்கு நாம் இணங்கியுள்ளோம்.
நாம் கடந்த ஆறு மாதங்களில் நான்கு கண்டங்களில் வணிகம், பாதுகாப்பு என்பன தொடர்பான மேலும் பன்னிரெண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

கடந்த சில நாட்களில் சீனாவுடனும், கட்டாருடனும் புதிய மூலோபாய கூட்டாண்மைகளை நாம் நிறைவுசெய்துள்ளோம்.

இந்தியா, ஆசியான், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், மேர்க்கசூர் (Mercosur) ஆகியவற்றுடன் சுதந்திர வணிக ஒப்பந்தங்கள் குறித்து நாம் பேரம்பேசலில் ஈடுபட்டுள்ளோம்.

உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் மாறும் வடிவங்களில் – விழுமியங்கள், நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு வெவ்வேறு கூட்டணிகளைப் பயன்படுத்துகிறோம்.

யுக்றெய்னைப் பொறுத்தவரை, விருப்பமுள்ள நாடுகளின் கூட்டணியில் நாம் மைய உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதுடன், அந்நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படையில் உச்ச பங்களிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறோம்.

ஆர்க்டிக் இறையாண்மை விடயத்தில், நாம் கிறீன்லண்டுடனும், டென்மார்க்குடனும் உறுதியாக நிற்பதுடன், கிறீன்லண்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அவர்களது தனித்துவமான உரிமையை முழுமையாக ஆதரிக்கிறோம். 5 ஆம் சரத்து மீது நாம் கொண்டுள்ள உறுதிப்பாடு அசைக்க முடியாதது.

அடிவானத்திற்கு அப்பால் உள்ளவற்றைக் கண்காணிக்கும் ரேடார், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், படையினரின் எண்ணிக்கை ஆகியவற்றில் கனடா செய்த முன்னொருபோதும் செய்யப்படாத முதலீடுகள் மூலமாகவும், நேட்டோ அமைப்பின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மேலும் பாதுகாப்பதற்கு எமது நேட்டோ நட்பு நாடுகளுடன் (நோர்டிக் போல்ட்டிக் 8 உடனும்) நாம் சேர்ந்து செயலாற்றுகிறோம். கிறீன்லண்ட் விடயத்தில் இறக்குமதி வரிகளைக் கனடா கடுமையாக எதிர்ப்பதுடன், ஆர்க்டிக்கின் பாதுகாப்பு மற்றும் செழிப்புத் தொடர்பான கூட்டு நோக்கங்களை அடைவதற்கு அவை குறித்த பேச்சுகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

பன்முக வணிகத்தில், 1.5 பில்லியன் மக்களைக் கொண்ட புதிய வணிகத் தொகுதி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ட்றான்ஸ் பசுபிக் கூட்டாண்மைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் ஒரு பாலத்தை உருவாக்கும் முயற்சிகளை நாம் முன்னின்று செயற்படுத்துகிறோம்.
இன்றியமையாத கனிமங்களைப் பொறுத்தவரை, உலகம் செறிவான விநியோகத்தில் இருந்து விலகிப் பன்முகப்படுத்தும் நோக்கத்துடன், G7 அமைப்பில் அடிப்படையைக் கொண்ட கொள்வனவாளர் குழுக்களை நாம் உருவாக்குகிறோம்.

செயற்கை நுண்ணறிவு விடயத்தில் மேலாதிக்கவாதிகள், அல்லது ஹைப்பர்ஸ்கேலேர்ஸ்களில் (hyperscalers) ஒன்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலைமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு ஒருமித்த எண்ணம் கொண்ட ஜனநாயக நாடுகளுடன் நாம் ஒத்துழைக்கிறோம்.

இது அப்பாவித்தனமான பன்முகத்தன்மை அல்ல. இது பலமிழந்துவிட்ட நிறுவனங்களில் தங்கியிருப்பதும் அல்ல. சேர்ந்து செயற்படுவதற்குப் போதுமான பொதுவான நிலைப்பாடுகளைக் கொண்ட பங்காளிகளுடன் இணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, செயற்படும் கூட்டணிகளை அமைப்பதே இது. சில சந்தர்ப்பங்களில் மிகப் பெரும்பான்மையான நாடுகள் இவற்றில் இடம்பெறும்.

வணிகம், முதலீடு, கலாச்சாரம் ஆகியவற்றில் இது நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட வலையமைப்புகளை உருவாக்குவதுடன், எதிர்கால சவால்களையும், வாய்ப்புகளையும் எதிர்கொள்ள நாம் இவற்றைப் பயன்படுத்த முடியும்.

நீங்கள் பேச்சு மேசையில் இல்லையென்றால், உண்ணப்படுவீர்கள் என்பதால் இடைநிலை சக்திகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

பெரிய சக்திகள் தனியாகச் செயற்படலாம். அவர்களிடம் சந்தை அளவு, படைத்துறை வலிமை, அவற்றின் விருப்பங்களை விதியாக்கும் திறன் என்பன உள்ளன. இடைநிலை சக்திகளிடம் இது இல்லை. ஆனால் நாம் தனியாக ஒரு மேலாதிக்க சக்தியுடன் இருதரப்புப் பேரம்பேசலைச் செய்யும்போது பலவீனமான நிலையில் இருந்து பேரம்பேசுகிறோம். எமக்கு வழங்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்வோம். யார் அதிகம் அனுசரித்துப் போவதென எமக்கிடையில் நாம் போட்டியிடுவோம்.

இது இறையாண்மை அல்ல. இது கீழ்ப்படிவை ஏற்றுக்கொண்டு இறையாண்மையை செயல்படுத்துவது.

பெரும் சக்திகளுக்கு இடையில் போட்டி நிலவும் உலகில், இடையில் உள்ள நாடுகளின் முன் ஒரு தெரிவு உள்ளது: சலுகைகளைப் பெறுவதற்கு ஒன்றுடன் ஒன்று போட்டியிடலாம் அல்லது தாக்கமுள்ள மூன்றாவது பாதையை உருவாக்க ஒன்றிணையலாம்.

சட்டபூர்வம், ஒருமைப்பாடு, விதிகள் ஆகியவற்றின் சக்தி, நாம் ஒன்றுபட்டு இவற்றைப் பயன்படுத்தினால் பலமாகவே இருக்குமென்ற விடயத்தை, கடின சக்தியின் எழுச்சி எம்மிடம் இருந்து மறைக்க நாம் அனுமதிக்கக் கூடாது..

இது ஹவெலிடம் மீண்டும் அழைத்துச் செல்கிறது.

இடைநிலை சக்திகள் “உண்மைக்குள் வாழ்வது” என்பது எப்படியானதாக இருக்கும்?
யதார்த்தத்தைப் பேசுவதே இதன் பொருள். “விதிகளின் படியான சர்வதேச ஒழுங்கு” தற்போதும் அதே அர்த்தத்தில் செயற்படுவதைப் போன்று பேசுவதை நிறுத்துங்கள். இந்தக் கட்டமைப்பை அதன் உண்மையான அர்த்தத்தில் வர்ணியுங்கள்: தீவிரமடையும் பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டிக் காலம், அங்கு மிகப் பலமானவர்கள் அவர்களது நலன்களுக்காகப் பொருளாதார ஒருங்கிணைப்பைக் கட்டாயப்படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதன் அர்த்தம், ஒரு சீராகத் தொடர்ந்து செயற்படுவது. தோழமைச் சக்கிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் ஒரே தராதரங்களைப் பயன்படுத்துவது. இடைநிலை சக்திகள் ஒரு திசையிலிருந்து வரும் பொருளாதார அச்சுறுத்தலை விமர்சித்து, மற்றொரு திசையிலிருந்து அது வரும்போது அமைதியாக இருப்பது, யன்னலில் அறிவிப்பை வைத்திருப்பதற்குச் சமனானது.
அதாவது, நாம் நம்புவதாகக் கூறுவதைக் கட்டியெழுப்புவது. பழைய ஒழுங்கு மீள உருவாக்கப்படும்வரை காத்திருப்பதற்குப் பதிலாக, விவரிக்கப்படும் வகையில் செயற்படும் நிறுவனங்களையும் ஒப்பந்தங்களையும் உருவாக்குவது.

கட்டாயப்படுத்தப்படுவதைச் சாத்தியமாக்கும் வல்லமையைக் குறைப்பதும் இதன் அர்த்தமாகும். பலமான உள்நாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது எப்போதும் ஒவ்வொரு அரசாங்கத்தினதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். சர்வதேச அளவில் பன்முகப்படுத்துதல் என்பது வெறும் பொருளாதார விவேகம் மட்டுமல்ல, அது நேர்மையான வெளியுறவுக் கொள்கைக்கான முக்கிய அடித்தளமுமாகும். பழிவாங்கப்படும் பலவீனத்தைக் குறைப்பதன் மூலம் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடுகளைப் பேணும் உரிமையை நாடுகள் பெறுகின்றன.

உலகத்திற்குத் தேவையானதைக் கனடா கொண்டுள்ளது. நாங்கள் சக்தித்துறையில் ஒரு வல்லரசு. எங்களிடம் இன்றியமையாக் கனிமங்களின் பெருமளவு இருப்புக்கள் உள்ளன. உலகில் கல்வியறிவு மிகக் கூடிய மக்கள் எம்மிடம் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரியவையும், அதிநவீனமானதுமான முதலீட்டாளர்களில் எமது ஓய்வூதிய நிதியங்கள் அடங்குகின்றன. எம்மிடம் மூலதனமும், திறமையும், தீர்க்கமாகச் செயற்படத்தக்க, மகத்தான நிதி வல்லமை கொண்ட அரசாங்கமும் உள்ளது.

அத்துடன் பலர் அடைய விரும்பும் விழுமியங்களும் எம்மிடம் உள்ளன.

கனடா பன்முகத்தன்மை கொண்ட, செயற்படும் ஒரு சமூகம். எங்கள் பொது அரங்கம் உரத்தும், பன்முகத்தன்மையுடனும், சுதந்திரமாகவும் உள்ளது. கனடியர்கள் நீடித்திருக்கும் தன்மைக்குத் தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளார்கள்.

நாங்கள் நிலையான, நம்பகமான ஒரு பங்காளியாக – இப்படியான நிலைமை இல்லாத ஒரு உலகில் – நீண்ட காலநோக்கத்தில் உறவுகளை உருவாக்கி மதிப்பளிக்கும் ஒரு பங்காளியாக விளங்குகிறோம்.

கனடாவிடம் வேறொன்றும் உள்ளது: அது என்ன நடக்கிறதென்பதைப் புரிந்து, அதற்கேற்ப செயல்படுவதற்கான உறுதிப்பாடு.

இந்தத் தகர்வு, இசைவாக்கத்தை விடவும் அதிகமானவற்றைச் செய்யவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளதென்பதை நாம் புரிந்துகொள்கிறோம். உலகம் தற்போது எப்படியிருக்கிறதென்பது தொடர்பான நேர்மையை இது கோருகிறது.

பழைய ஒழுங்கு மீள உருவாகப்போவதில்லை. அதற்காக நாம் துக்கம் கடைப்பிடிக்கக்கூடாது. பழங்காலம் மீதான நாட்டம் ஒரு மூலோபாயம் அல்ல.

ஆனால் தகர்விலிருந்து, சிறந்ததும், பலமானதும், அதிகம் நியாயமானதுமான ஒன்றை நாம் கட்டியெழுப்பலாம்.

கோட்டைகளின் உலகத்தில் அதிகம் இழப்பவையும், உண்மையான ஒத்துழைப்பு நிலவும் உலகத்தில் அதிக அனுகூலமடைபவையுமான இடைநிலை சக்திகளின் பணி இது.

சக்திவாய்ந்தவர்களிடம் அவர்களின் சக்தி உண்டு. ஆனால் எம்மிடமும் ஒன்று உள்ளது – பாசாங்கு செய்வதை நிறுத்தி, யதார்த்தத்தை அவ்வாறே அழைத்து, உள்நாட்டில் எமது பலத்தை உருவாக்கி, ஒன்றாகச் செயல்படுவதற்கான வல்லமையே அது.

இதுவே கனடாவின் பாதை. இதை நாங்கள் வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் தெரிவு செய்கிறோம்.

அத்துடன், இந்தப் பாதை, எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் எந்தவொரு நாட்டிற்கும் முழுமையாகத் திறந்திருக்கும்.

இவ்வாறு கனடியப் பிரதமர் தனது உரையை பலரும் ரசிக்கும் வகையில் ஆற்றினார் என்றால் அது மிகையாகாது. அனால் அமெரிக்க அதிபருக்கு மட்டும் எமது பிரமரின் உரை கசப்பாகவே இருந்திருக்கும் என்பதும் உண்மை!

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>