ந.லோகதயாளன்.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு மழைக்கவசத்துடனும், காலில் காலுறை அணிந்தவாறும் சிறுவனின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
கடந்த 25ம்திகதி வெள்ளிக்கிழமை அன்றைய அகழ்வின் போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்படட்ட 9 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 478 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 464 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அன்றைய தினம் சிறுவனின் ஒரு என்புத் தொகுதி மழைக்காலத்தில் அவனது உடலோடு ஒட்டிய நிலையில் மழைக்கவசத்துடனும், காலில் காலுறை அணிந்தவாறும் காணப்பட்ட காட்சி அங்கு நின்றிருந்த அனைவரின் மனங்களை உலுக்கியது என்று எமது சய்தியாளர் அறிவித்துள்ளார். அந்த என்புத் தொகுதியைச் சூழ சவப்பெட்டியின் அடையாளங்களும் காணப்படுகின்றன.
மேலும் அன்றைய அகழ்வில் என்பு எச்சங்கள் குவியல்களாக மூன்று அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு 35, 36, 37 என இலக்கமிடப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆணிகள் மற்றும் சீமெந்திலான தட்டைப் பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சான்றுப் பொருளாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 140 சான்றுப்பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது