தந்தை எனும் தெய்வம்

Share

இதயத்தில் நிறைந்த எம்முயிரே என்தந்தையே
உதயமும் வரும்போது உம்முகம்தான் முன்னெழும்
அன்போடு எமைக்காத்து அரவணைத்து வளர்த்தவரே
இன்முகம் காணவில்லை எங்கென்று தேடுகின்றோம்

பரிசென்று தந்தீர்கள் பகிர்ந்தீர்கள் உம்வாழ்வை
உரிமையுடன் காத்தவரே ஊக்கமூட்டிப் பார்த்தவரே
தாங்கிடும் தூணாகக் தாங்கியே நின்றீர்கள்
தீங்கிலா வாழ்வாலே தீமையின்றி வளர்த்தீர்கள்

ஈர்த்திடும் ஆடையின்றி இளமையைத் தொலைத்தீர்கள்
வேர்த்திட உழைத்து வெறுமையாய் உழைத்தீர்கள்
வார்த்தைகளால் பேசாது வசந்தமாய் வாழ்ந்தவரே
கார்காலக் கனவாக காத்தெம்மைத் தேற்றினீர்கள்

உறவுகள்தான் வாழ்வென்று உணர்வுடன் வாழ்ந்தவரே
அறனெறியில் உம்வாழ்வை அருமையாகக் கொண்டவரே
பட்டறிவுப் பாடமதில் பாண்டித்தியம் பெற்றீர்கள்
கிட்டநின்று எமைக்காத்தீர் கேடின்றி வாழ்கின்றோம்

வேதனையில் நாங்கள் வெருண்டிடும் நேரத்தில்
போதனை தந்தெம்மைப் போற்றியே பாதுகாத்தீர்
மெச்சிய எம்தந்தை மென்மையுடன் தூக்கினீர்கள்
உச்சம் தலைதன்னில் உயர்த்தியே காட்டினீர்கள்

மனத்துயரை உள்வைத்து மறைத்து வாழ்ந்தவரே
கனவினில் நின்றும்கூட காத்தீர்கள் குடும்பத்தை
சினமதனை அன்பாலே சிதறவிட்ட தந்தையே
நனவிலும் எம்நினைவால் நல்வாழ்வு வாழ்ந்தீரே

சிறப்பாக வாழ்ந்தவரே சிந்தையிலே நிறைந்தவரே
உறவுகளாய்த் தேடுகின்றோம் உயிரற்ற உடலங்களாய்
பிரிவாலே இறையெம்மைப் பிரித்தாலும் நீங்களென்றும்
உரிமையாய் எம்முள்ளே உடனிருக்க வேண்டுகிறோம்.

இறைவனின் பாதத்தில் இன்னுயிரை ஈந்தவரே
உறைவிடமாய் ஆண்டவனில் உறைந்துள்ள எம்தந்தாய்
நிறைவோடு வாழ்கவே நீடுழி வாழ்கவே
குறையின்றி இறைவனும்மை கோபுரமாய்க் காத்திடுவார்.

Dr. புட்பா கிறிட்டி, Canada

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>