தப்பு செய்ய மாட்டேன், மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டேன்- முதலமைச்சர் விஜய் பேச்சு

Share

முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு விஜய் பேசியதாவது:  என்ன சொல்றது, எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியலை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடையனும் என்று இருந்த ஒரு சாதாரண உதவி இயக்குனருக்கு பிறந்த ஒரு பிள்ளையாக, எனக்கும், வாழ்க்கையில் வறுமை என்றால் என்ன என்று நல்லாவே தெரியும். பசி என்றால் என்ன என்று எனக்கு நல்லாவே தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை. உங்களை மாதிரித்தான் உங்களில் ஒருத்தன் மாதிரித்தான், உங்கள் குடும்பத்தில் ஒருத்தன் மாதிரிதான், உங்கள் பிள்ளை மாதிரி தான், உங்கள் மகன் மாதிரி தான், உங்கள் அண்ணன் மாதிரி தான், உங்கள் தம்பி மாதிரிதான்… அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் எனக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுத்தீர்கள். இப்படி அதையெல்லாம் விட்டு விட்டு உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்த உங்கள் விஜய்யை, இந்த விஜய்யை நீ வா விஜய், நாங்கள் எல்லாம் இருக்கிறோம், பார்த்துக்கிறோம், விஜய் தம்பி நீ வா நாங்க இருக்கோம், விஜி தம்பி நீ வா நாங்க இருக்கோம், அண்ணா நீ வாண்ணா நாங்க இருக்கோம், நண்பா நீ வா நண்பா நாங்கலெ்லாம் இருக்கிறோம் என்று சொல்லி அவ்வளவு அன்பா, அவ்வளவு உறவா, என்னை ஏற்றுக் கொண்டீர்கள். இந்த நேரத்தில் இதை நான் சொல்லணும்.. இந்த பயணத்தில் எனக்கு எவ்வளோ கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தாலும், எனக்காக கூட நின்ற உங்களுக்கும் அதே மாதிரி கஷ்டங்கள், அவமானங்கள், அதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் என்னோட வலிகளை, என்னோட வேதனைகளை உங்களோடதா நினைத்து என் கூடவே நின்னு இன்றைக்கு சி.ஜோசப் விஜய் எனும் நான்… அதை உண்மையாக்கி இருக்கிறீர்கள்.

உண்மையிலேயே என்ன சொல்றது என்று எனக்கு தெரியலை. என்னுடைய உறவுகளே, என்னுடைய சொந்தங்களே நான் ஒன்றும் தேவன் கிடையாது. நானும் ஒரு இயல்பான வாழ்க்கை வாழும் சாதாரணமான மனிதன்தான். நான் முன்னாடியே சொன்ன மாதிரி அதை செய்வேன், இதை செய்வேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியமோ அதை மட் டும்தான் நான் செய்வேன். உடனடியாக உங்கள் மனதில் கேள்வி ஒன்று வரலாம். அப்ப சாத்தியம் இல்லாததை செய்ய மாட்டிங்களா? செய்ய முடியாதா? என்று கேள்வி வரலாம். இத்தனை கோடி மக்கள் என் கூட இருக்கும் போது எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை என் மனதில் இருக்கிறது.

இன்னொரு விஷயமும் நான் இங்கு சொல்லணும். இன்றைக்கு நமது தமிழ்நாடு அரசு இருக்கிற அந்த நிலைமையைப் பற்றி நான் உங்களிடம் சொல்லணும். கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வச்சிட்டு போயிருக்கிறப்போ, தமிழ்நாடு கஜானாவை சுத்தமாக துடைச்சி வழிச்சி வச்சிட்டு போயிருக்கிறப்போ, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்து விட்டு போயிருக்கிறப்போ, அப்படிப்பட்ட ஒரு நிலைமையில்தான் இந்த பொறுப்பை நாம் கையில் எடுத்திருக்கிறோம். உடனே நீங்கள் என்னடா இவர் பொறி வச்சு பேசுகிறாரே என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்று கிடையாது. உள்ளே போய் பார்த்தால்தான் எது என்ன நிலைமையில் இருக்கிறது? எது எது என்ன நிலைமையில் இல்லை என்று தெரியும். அதையெல்லாம் பார்த்து விட்டு உங்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கையாக அதை வெளியிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு வெளிப்படையான அரசாக, இன்றைக்கு நமது தமிழ்நாடு அரசு இந்த நிலையில்தான் இருக்கிறது என்கிறதை உங்களிடம் சொல்லி விட்டு, அதை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதைத்தான் முதலில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் யாரையாவது போய் சந்திக்கணும் என்றால் மூஞ்சை மூடிக் கொண்டு போய் சந்திப்பதோ, மறைமுகமா உங்களுக்கு தெரியாமல் போய் சந்திக்கிறதோ அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன்.

எதுவா இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவுமறைவு இல்லாமல் தான் நான் செய்வேன். இவ்வளவு ஒரு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளீர்கள். அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் அவகாசம் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நான் சொன்னதையெல்லாம் படிப்படியாக நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன், நிறைவேற்றுவேன். அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் எனக்கு உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்கும். இது உங்களுடைய ஆட்சி, பெண்கள் பாதுகாப்பை ரொம்ப கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பேன்.

போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கணுமோ, என்னென்ன முயற்சிகள் எடுக்கணுமோ அதை இன்று முதல் எடுப்பேன். நமது பசங்களை அதில் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது அரசின் பொறுப்பு. அதே போல் சட்டம்-ஒழுங்கில் எல்லோருக்குமான பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப் படுத்தியவர்களாகவே இருந்தாலும், என்னை கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களும் என் மக்கள் தானே. நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தானே. அதே போல் அடிப்படை விஷயங்களான கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதிகளில்தான் எனது முழு முதல் கவனத்தை செலுத்தணும் என்று தோணுகிறது. நான் முன்னாடியே சொன்ன மாதிரி மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட நான் தொட மாட்டேன்.

எனக்கு அது அவசியமும் இல்லை. அது உங்களுக்கு நல்லாவே தெரியும். இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான். தப்பு பண்ணவும் விட மாட்டான். அது யாராக இருந்தாலும் சரி. என்னோட அரசாங்கத்தில் என் கூடவே இருக்கிறவர்கள் ஆனாலும் சரி விட மாட்டேன். ஒருவேளை யாருக்காவது அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால், நாம் ஜெயித்து விட்டோம், ஒரு ஆட்டம் ஆடி பார்க்கலாம் அப்படிங்கிற எண்ணம் யாருக்காவது இருந்தால் இப்பவே, இந்த நிமிடமே அதை அழித்து விடுங்கள். இங்கு ஒரே மையம்தான். என் தலைமையில் உண்டான மையம். இந்த ஒரு பக்கம் ஒரு மையம், அந்த பக்கம் ஒரு ஆற்றல்மிக்க மையம் அதெல்லாம் கிடையவே கிடையாது. அதை இப்பவே சொல்லி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் நமது சமரசமில்லாத அடிப்படை கோட்பாடு. சிறுபான்மை சகோதரர்களே உங்களுக்காக நமது டி.வி.கே. அரசு கூடவே நிற்கும். உங்களுக்கு அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜய்யின் முகம்.

அதில் 100 சதவீதம் நீங்கள் இந்த விஜய்யை நம்பலாம். உண்மையான, மத சார்பற்ற சமூக நீதியுடன் புதிய சகாப்தம் இப்போது தொடங்குகிறது. மக்கள் நலன்களை மட்டுமே லட்சியமாக கொண்ட நமது அரசுக்கு பக்கபலமாக நின்று ஆதரவை வழங்கியுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் எனது சகோதரர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, என்னுடைய நண்பர் பிரவீண் சக்கரவர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, மாநில செயலாளர் பி.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நமது அரசுக்கு ஆதரவு வழங்கி உள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் அண்ணன் திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற குழு தலைவர் வன்னிஅரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் எம்.வீரபாண்டியன், தமிழ்நாடு முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர்மொய்தீன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகிய அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கிறேன். இந்த மாதிரி நேரத்தில் எனக்காக நீங்கள் குரல் கொடுத்ததற்கும், எனக்காக ஆதரவு அளித்து கூடவே நின்றதற்கும் உங்கள் எல்லோருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் மீண்டும் சந்திப்போம். இவ்வாறு விஜய் பேசினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>