மாத்தளை வடிவேலனின் “வல்லமை தாராயோ” என்ற சிறுகதை தொகுதி தமிழ் நாட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மலையக மக்களின் வாழ்கையின் அவலங்களை மிக யாதார்த்தமாக சித்தரிக்கும் இலக்கிய தொகுப்பாக இந்த சிறுகதை தொகுதி தமிழ் அறிஞர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்திற்கு அடையாளமாக “தாய்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் முனைவர் டாக்டர் குமார் ராஜேந்திரன் விஷேட இலக்கிய விருதாக மாத்தளை வடிவேலனின் “வல்லமை தாராயோ” என்ற சிறுகதை தொகுப்பிற்கு இலங்கை நாணயத்தில் ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கி கௌரவிக்க உள்ளார்.
தமிழகத்தின் மிகச் சிறந்த நடுவர்கள் குழு, மலையக மக்களின் வாழ்க்கையை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறந்த சிறுகதை நூலாக இலங்கையில் வெளிவந்த “வல்லமை தாராயோ” என்ற தொகுதி இடம்பெறுகின்றது என்று புகழ் பூத்த ஊடகவியலாளரும், துக்ளக், குமுதம், ஜெயா, விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றியவரும் தற்போது தற்போது “தாய்” “தாய்” சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியருமான மணா தெரிவித்துள்ளார்.
லண்டனில் இருந்து பேராசான் மு.நித்தியானந்தன் இந்த தொகுதிக்கு வழங்கிய முன்னுரை, மாத்தளை வடிவேலனின் எழுத்தாற்றலை தமிழக வாசகர்களுக்கு கொண்டு செல்வதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. பதிப்பாளரும் எழுத்தாளருமான எச்.எச்.விக்கிரமசிங்க (மாத்தளை செல்வா) அவர்களின் பெரும் முயற்சியில் தொகுக்கப்பட்டு, கலை ஒளி முத்தையா பிள்ளை ஞாபகார்த்தக்குழு வெளியிட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைகழக தமிழ் கற்கைகள் துறை மாதாந்த இலக்கிய நிகழ்வில் பேராசிரியர் சி.சந்திரசேகரன் தலைமையில் அறிமுகம் செய்தது, மாத்தளை வடிவேலனுக்கு மற்றுமொரு கெளரவம் ஆகும்.
சாரல் நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’, டாக்டர் குமார் ராஜேந்திரன் அனுசரணை வழங்கிய சி.வி. வேலுப்பிள்ளையின் “மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்’, மு. நித்தியானந்தனின் “மலையக சுடர்மணிகள்’, ‘மலையக மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாரயோ’ ஆகிய நூல்கள் வரிசையில் இலங்கையில் புகழ் பூத்த எழுத்தாளர் சாலிய குணவர்த்தன சிங்கள மொழியில் மொழி பெயர்த்த 14 சிறுகதைகளை, மத்தளை மலரன்பன் தமிழில் மொழி பெயர்த்த “அமைச்சர்களின் முகம்” என்ற பிறமொழி சிறுகதைகளும், “தெளிவத்தை ஜோசப் கதைகள்” 59 கதைகள், 557 பக்கங்களில் விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் ‘மலையகம் 200’ முழு நாள் ஆய்வரங்கில் மாத்தளை வடிவேலனின் ஒரு இலட்ச ரூபாய் இலக்கிய விருதினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்க உள்ளார்.