தமிழக சட்டசபை தேர்தல் வரும் 15ந் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Share

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில், தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி நாளை (11-ந் தேதி) திருச்சியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். அவர், டில்லி திரும்பிய பிறகு 5 மாநில தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற அதிகம் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>