தலைவர்: பழ. நெடுமாறன்
26.07.2026 – ஞாயிறு அன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் முழு உருவச்சிலையை பல்கலைக்கழகத்தின் முகப்பில் நிறுவவேண்டும் என்பதும் ஒன்றாகும்!
26.07.26 ஞாயிறு அன்று மாலையில் நடைபெற்ற பொது அரங்கத்திற்குத் தலைமை தாங்கிய உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச் செயலாளர் திரு. ந.மு. தமிழ்மணி அவர்கள் கீழ்க்கண்ட தீர்மானங்களை முன்மொழிய அவையினர் அவற்றை கைதட்டி வரவேற்று நிறைவேற்றினர்.
தீர்மானம்-1
இந்தியாவிலேயே முதன்முதலாக மொழிக்கென்றே முதன்முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் தஞ்சையில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் தொடக்கிவைக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்களும், அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளும், தமிழ்நாட்டின் மூத்த தமிழறிஞர்கள், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், இந்திய-தமிழக அமைச்சர்கள் மற்றும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்து வாழ்த்த பெரும் கோலாகலத்துடன் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொடக்கவிழா சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.
தமிழுக்கென்று தனியானதொரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும் என்ற தமிழர்களின் நீண்டகால விருப்பம் அன்று நிறைவேறியது. அதன் முதலாவது துணைவேந்தராக முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் பதவியேற்றார். அனைவரின் எதிர்ப்பார்ப்புக்கேற்ப இப்பல்கலைக்கழகத்தை உலகளாவிய ஒன்றாகவும், உயராய்வு மையமாகவும் திட்டமிட்டு வளர்த்தார். அறிவாற்றலும், திறமையும் மிக்கத் தமிழறிஞர்களைப் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுத்துப் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தினார்.
இலக்கியம், இலக்கணம், வரலாறு, தொல்லியல், அறிவியல், அகராதியியல், சுவடியியல், சித்த மருத்துவயியல், நாட்டுப்புறவியல், சிற்பவியல் போன்ற 24 துறைகளை உருவாக்கி மிகத் தேர்ந்த பேராசிரியர்களை ஒவ்வொன்றுக்கும் தலைமைப் பொறுப்பில் அமர்த்தி சிறந்த உயராய்வுகளைத் தொடரச் செய்தார்.
உலக மொழிகளின் ஆய்வுகளில் நிலவிவரும் புதிய போக்குகளையும் நெறிகளையும் உணர்ந்து நமது மொழியின் ஆய்வுகளில் புதிய நெறி காண வழிகாட்டினார். அவர் பதவி வகித்த ஐந்தாண்டுக் காலத்திற்குரிய வேலைத் திட்டத்தை முன்னதாகவே திட்டமிட்டு, வகுத்து, அச்சிட்டு, பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனைவரிடமும் கொடுத்து அது நிறைவேற்றப்படுவதை ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்து எவ்விதக் குறையுமின்றி நிறைவேற வழிவகுத்தார்.
அனைத்துத் துறைகளிலும் தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதற்காகப் பலதுறைகளுக்கும் குழுக்களை உருவாக்கினார்.
சுருங்கக் கூறின் தஞ்சையில் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக உயர்த்தவேண்டும் என்பதும், மிகச்சிறந்த உயராய்வுத் தமிழ் மையமாக உருவாக்கப்படவேண்டும் என்பதுமே அவரது குறிக்கோளாக இருந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தன்னிலிருந்து வேறாக அவர் பார்த்ததில்லை. அவர் மறைந்த பிறகுகூட, அவரது சாம்பலை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் தூவவேண்டும் என எழுதி வைத்துவிட்டுச் சென்ற ஒரு மாமனிதருக்கு அவரது இலட்சியக் கனவான தமிழ்ப் பல்கலைக்கழகம் அவர் விரும்பியவண்ணமே தொடர்ந்து இயக்கப்படவேண்டும். அதற்கானவற்றைத் தமிழக மக்களும் அரசும் செய்ய முன்வரவேண்டும்.
அம்மாமனிதரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் இவ்வேளையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவர் விரும்பியவண்ணமும், அவர் வகுத்துக் கொடுத்தத் தடத்தில் தொடர்ந்து செல்ல உரியவற்றைக் குறித்து ஆராய்ந்து செயல்படுத்துவதற்காக இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க முன்வருமாறு தமிழக அரசை இவ்விழாக்குழுவும், உலகத் தமிழர் பேரமைப்பும் வேண்டிக்கொள்கின்றன.
தீர்மானம்: 2
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் பொறுப்பினை ஏற்று அனைவரும் போற்றும் வண்ணம் செயல்பட்டு அதை உருவாக்கிய சிற்பியான முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் முழு உருவச்சிலை ஒன்றினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முகப்பில் நிறுவவேண்டும் என இவ்விழாக்குழுவும், உலகத் தமிழர் பேரமைப்பும் தமிழக அரசை வேண்டிக்கொள்கின்றன.
தீர்மானம்: 3
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தினையும், அதன் கட்டடத்தையும் திட்டமிட்டு வடிவமைத்து ஆய்வாளர்களுக்குரிய உயர் நூலகமாக மிளிரச் செய்த முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் பெயரை நூலகத்திற்குச் சூட்டவேண்டும் என்று இவ்விழாக்குழுவும், உலகத் தமிழர் பேரமைப்பும் தமிழக அரசை வேண்டிக்கொள்கின்றன.
அன்புள்ள,
(பழ. நெடுமாறன்)
தலைவர்.