தமிழ் நாட்டு முதலமைச்சர் எழுதிய கடிதம் : தமிழகத்தை நொதிக்கச் செய்தல்

Share

தமிழ் தேசிய அரசியலை தேர்தல் அரசியலுக்கு வெளியே போராட்ட அரசியலாக நொதிக்க வைத்தால் மட்டும்தான் தமிழகம் நொதிக்கும். தமிழகம் நொதித்தால்தான் பிராந்தியம் நொதிக்கும். அப்பொழுதுதான் இந்திய மத்திய அரசின் வெளியுறவு முடிவுகளில் அது தாக்கத்தைச் செலுத்தும்.

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார். “இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி” எழுதப்பட்ட அக்கடிதத்தில்,1985இல் முன்வைக்கப்பட்ட திம்புக் கோட்பாடுகளின் அடிப்படைக் “கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்த ஒரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும் இது மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ் நாட்டு முதலமைச்சர் அவ்வாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியமை என்பது தமிழ் தேசிய பேரவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கடந்த மாதம் மேற்கொண்ட தமிழக விஜயத்தின் விளைவு என்பதில் சந்தேகம் இல்லை.இந்தியாவை மீறி இலங்கை இனப் பிரச்சினைக்கு எந்தவோர் வெளியேரசோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ தீர்வை தர முடியாது என்பதற்கு கடந்த 42 ஆண்டுகள் சான்று. இந்திய மத்திய அரசை அசைக்க வேண்டும் என்றால் தமிழகம் நொதிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. எனவே இந்தியாவை கையாள்வது என்பது ஈழத்தமிழ் நோக்கு நிலையில் முதலில் தமிழகத்தை வெற்றிகரமாக கையாள்வது தான். மிகக்குறிப்பாக கட்சி பேதங்களைக் கடந்து தமிழகத்தை கையாள்வதுதான்.

தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருக்கத்தக்கதாக ஈழத் தமிழர்கள் அனாதைகளாக கை விடப்பட்டிருக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது என்று அண்மையில் கஜேந்திரக்குமார் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார். கடந்த 13 ஆம் தேதி நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடந்த ஒரு அரசியல் கருத்தரங்கில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவை கையாள வேண்டும் என்று கூறிய விமர்சகர்களையும் செயற்பாட்டாளர்களையும் இந்தியாவின் ஆட்கள், முதுகெலும்பில்லாதவர்கள், அவர்களுக்கு பசிக்கும் போது சோறு தேவை என்பதற்காக இந்தியாவிடம் சம்பளம் வாங்குபவர்கள் என்று திட்டித் தீர்த்த ஒரு கட்சியின் தலைவர், இப்பொழுது இந்தியாவை கையாள வேண்டும் தமிழகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருப்பது திருப்பகரமான மாற்றம்தான். ஆனால் இந்த மாற்றம் ஏற்படுவதற்கிடையில் கடந்த 16 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன? அந்த மாற்றங்களின் விளைவாக தமிழ் தேசிய அரசியலானது அதன் பேர பலத்தை இழந்துவிட்டது. அனைத்துலக அளவிலும் அது பலமாக இல்லை உள்நாட்டிலும் பலமாக இல்லை. அதன் விளைவாக தனக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று கூறும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கமானது தான் விரும்பிய ஒரு தீர்வை தமிழ் மக்களின் மீது திணிக்க கூடிய ஆபத்து அதிகமாக உள்ள ஒரு காலகட்டம் இது என்பதை தனது மேற்படி மேற்படி உரையில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

அதாவது ஈழத் தமிழர்கள் ராஜதந்திரத்தை கற்றுக் கொள்வதற்கிடையில் தாயகத்தில் தமிழ் மக்கள் தமது பேர சக்தியை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள் என்பதுதான குரூரமான கள யதார்த்தம் ஆகும். இந்த யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை தமிழகத்தை கையாள்வது என்ற முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் அதிக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும் தமிழரசு கட்சியானது அவ்வாறான முடிவை எடுத்திருக்கிறதா?

சிறீதரன் தமிழகத்தை நோக்கி தொடர்ச்சியாக சென்று வந்திருக்கிறார். அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமந்திரன் போயிருக்கிறார். சாணக்கியன் போயிருக்கிறார்.ஆனால் இவர்கள் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் பெருமளவுக்கு சந்தித்ததில்லை. அல்லது அவ்வாறு தமிழகத் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒரு கட்சியாக முடிவெடுத்து, கட்சி தூதுக்குழு ஒன்று தமிழகத்திற்கு செல்லவில்லை.

தமிழகத்தை நீக்கும் ஓர் அரசியல் அணுகுமுறை தமிழரசு கட்சியிடம் இருந்தது என்ற பொருள்பட திவ்ய ஜீவனத்தில் நடந்த கருத்தரங்கில் கஜேந்திரக்குமார் உரையாற்றினார்.நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள தமிழ் பிரதிநிதிகள் பெரும்பாலானவர்கள் சமஸ்டி கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டவர்கள்.அவர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை மீறிப் போகாமல் இருப்பதற்கு தமிழகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பொருள்கொள்ளத்தக்க விதத்தில் கஜனின் உரை அமைந்திருந்தது.

இனப்பிரச்சினைக்கு ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட த தீர்வை பெறுவதற்கு தமிழகம் தேவையில்லை. இதை கஜனின் வார்த்தைகளில் சொன்னால், தமிழ் தேசிய நீக்கம் செய்ய விரும்பும் சக்திகளுக்கு தமிழகம் தேவையில்லை. தமிழ் தேசிய நீக்கம் என்பது இனப்பிரச்சினை அரசியலைப் பொறுத்தவரை தமிழக நீக்கமும்தான்.

கடந்த 16 ஆண்டுகளில் குறிப்பாக சம்பந்தரின் காலத்தில் அவரிடம் இனப் பிரச்சினையை அனைத்துலக மய நீக்கம் செய்யும் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்தது. வெளித்தரப்புகளின் அழுத்தமானது சிங்கள மக்களை பயமுறுத்துவது. அதனால் உள்நாட்டு தீர்வு ஒன்றை பெற முடியாது என்றும் சம்பந்தர் நம்பினார்.

ஆனால் இனப்பிரச்சினை எனப்படுவது சாராம்சத்தில் ஓர் அனைத்துலக பிரச்சினைதான்.அதற்கு அனைத்து உலக தீர்வுதான் உண்டு என்ற மிக அடிப்படையான ஒரு உண்மையை சமன்பாட்டை சம்பந்தர் விளங்கிக் கொள்ளவே இல்லை. அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை. நிலை மாறு கால நீதியின் கீழான யாப்புருவாக்க முயற்சிகளில் அவருடைய நடவடிக்கைகள் அதை நிரூபித்தன.அந்த நடவடிக்கைகளை அவர் முழுக்க முழுக்க நம்பினார்.அந்த நம்பிக்கையினால்தான் அவர் ஒவ்வொரு நல்ல நாள் பெருநாளுக்கும் தீர்வு வரும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

ஆனால் மூன்றாவது தரப்பொன்றின் அழுத்தம் இல்லாமல் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வுக்கு வர முடியாது என்ற கசப்பான யதார்த்தம் அவருடைய முகத்தில் அறைந்த பொழுது ஒரு தோல்வியுற்ற தலைவராக அவர் இறந்தார்.அவருடைய யாப்புருவாக்க முயற்சியின் பங்காளிகளில் ஒருவராகிய மைத்திரியே அந்த முயற்சியை காட்டிக் கொடுத்தார். ஏனென்றால் மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தமோ கண்காணிப்போ அங்கே இருக்கவில்லை. நிலைமாறு கால நீதியின் கீழ் ஐநாவின் மனித உரிமைகள் பேரவை ஆனது அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்க கூடிய ஒரு தரப்பாக இருக்கவில்லை.

எனவே ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வை பெறுவதற்கான தமிழ்த் தேசிய நீக்க அரசியல் என்பது அதன் நடைமுறை அர்த்தத்தில் தமிழக நீக்கமும் தான். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு ஒரு நாடாளுமன்றம் தரக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படையான சமஸ்டியாக இருக்காது என்பதே கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலான அனுபவம். அதை இன்னொரு விதமாகச் சொன்னால் தன்னை சமஷ்டிக் கட்சி என்று அழைத்துக் கொள்ளும் தமிழரசுக் கட்சியின் அனுபவம் என்றும் கூறலாம்.

எனவே இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத்துக்கு ஊடாக கிடைக்கும் எந்த ஒரு தீர்வும் அப்படித்தான் இருக்கும். நாடாளுமன்றத்துக்கு வெளியே மூன்றாவது தரப்பொன்றின் அழுத்தம் இருக்க வேண்டும்.

அவ்வாறு மூன்றாவது தரப்பு ஒன்றும் அழுத்தம் இருந்த காரணத்தால் தான் இந்திய இலங்கை உடன்படிக்கை சாத்தியமாகியது.ரணில்- பிரபாகரன் உடன்படிக்கை சாத்தியமாகியது.

மூன்றாவது தரப்பு உள்ளே வர வேண்டும் என்றால் தமிழ் மக்கள் போராட வேண்டும்.தமிழ் மக்கள் போராடினால்தான் ஒரு மூன்றாவது தரப்பை தமக்கு சாதகமாக அரங்கில் இறக்கலாம். தமிழகத்தை கையாள்வதற்கும் அதுதான் முன் நிபந்தனை. தமிழ் மக்கள் தாங்கள் கொந்தளிக்காமல் தமிழகம் தங்களுக்காக கொந்தளிக்கவில்லை என்று கேட்பது பொருத்தமில்லை. தமிழ் தேசிய அரசியலை தமிழ் கட்சிகள் நொதிக்க வைக்கவில்லை என்றால் தமிழகம் எப்படி நொதிக்கும்?

எனவே முதலில் தமிழ்த் தேசிய பேரவையும் உட்பட தமிழ் கட்சிகள் அனைத்தும் தமிழரசியலை நொதிக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தையிட்டியில் நொதிப்பதால் மட்டும் தமிழரசியலை தொடர்ச்சியாக நொதிக்க வைக்க முடியாது.அதற்குமப்பால் தமிழ் தேசிய அரசியலை தேர்தல் அரசியலுக்கு வெளியே போராட்ட அரசியலாக நொதிக்க வைத்தால் மட்டும்தான் தமிழகம் நொதிக்கும். தமிழகம் நொதித்தால்தான் பிராந்தியம் நொதிக்கும். அப்பொழுதுதான் இந்திய மத்திய அரசின் வெளியுறவு முடிவுகளில் அது தாக்கத்தைச் செலுத்தும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>