தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

Share

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே இன்று வரையிலும் ஒரு சமூக உடன்படிக்கை எழுதப்படவில்லை. கதிர்காமத்துக்கு பாதயாத்திரை போன சுப்பிரமணியனின் விடயத்தில் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் நிகழ்ந்த வெறுப்பு மிகுந்த வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, இரண்டு சமூகங்களும் எந்த அளவுக்குப் பிளவுண்டிருக்கின்றன என்பதை உணர முடிந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது சமூகங்களுக்கிடையிலான அரசியல் உடன்படிக்கையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதனை ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை அதன் தீர்வு முன்மொழிவில் கூறியிருக்கிறது. தமிழ் சட்டத்தரணிகள் சங்கமும் அதனை ஏற்றுக் கொள்கிறது. தமிழ்த் தேசிய பெரு மன்றும் ஏற்றுக்கொள்கிறது. தமிழ் தேசிய பேரவையும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இங்கே பிரச்சனை, அவ்வாறான ஒரு சமூக உடன்படிக்கைக்கான உரையாடல்கள் இதுவரை தொடங்கப்படவில்லை என்பதுதான். ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய அந்த இடையூடாட்டத் தளம் அவ்வாறான உரையாடல்களுக்குரிய ஒரு தளமாக விரிவடையுமா? தமிழ்த் தேசியப் பேரவையைத் தவிர்த்துவிட்டு அதைச் செய்யப் போகிறார்களா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை தமிழ்நாட்டுக்கு இரண்டாவது தடவையாக பயணத்தை மேற்கொண்டு திரும்பியிருக்கும் ஒரு பின்னணியில், தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வேகமாக முன்னெடுக்கப்படாத ஓர் அரசியல் சூழலில்,

இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுக்கு உரிய முன்மொழிவை வரையும் நோக்கத்தோடு புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்களும் தாயகத்தில் உள்ள சிவில் அமைப்புகள் சிலவும் இணைந்து “ஈழத்தமிழர்கள் உரிமைகள் பெரு மன்று ” என்று ஓர் அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பானது திருக்கோணமலையில் ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டிருக்கும் ஒரு பின்னணியில்,

தமிழ்த் தேசியப் பேரவையானது ஒரு தொகுதி சிவில் சமூகங்களோடு இணைந்து யாப்புருவாக்கத்திற்கான ஒரு நிர்ணய சபையை உருவாக்கியிருக்கும் ஒரு பின்னணியில்,

தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்,

புலம்பயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களின் பின் பலத்தோடு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டை முன்வைத்து அந்தத் தீர்மானத்தின் இலக்குகளை நோக்கி தமிழ் அரசியலை முன்னெடுத்தும் நோக்கத்தோடு ஒரு மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கும் ஒரு பின்னணியில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை,கொழும்பில், தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள் இணைந்து ஓர் ஒருங்கிணைப்பு முயற்சியை அறிவித்துள்ளன.

அதுதொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளும் மலையகக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து இணக்கம் ஒன்றுக்கு வந்துள்ளன.

இதுபோன்ற ஓர் இணக்கத்துக்கு வர வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராகிய மனோ கணேசன் பல காலமாக கூறி வருகிறார். தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு இடையே இணைந்து செயல்படலாம், அல்லது தமிழ் பேசும் சமூகங்களைப் பிரதிபலிக்கும் கட்சிகள் தங்களுக்கு இடையில் ஏதோ ஓர் இணக்கத்துக்கு வரலாம் போன்ற கோரிக்கைகளை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். எனினும் அவ்வாறான இணக்கத்தை, ஒரு கூட்டை உருவாக்க முடியவில்லை. இப்பொழுதும் இந்தக் கூட்டில் அவர் அங்கம் வகிக்கிறார். அதேசமயம் அது தொடர்பாக அவர் தெரிவித்த ஒரு கருத்து மிகவும் தெளிவானதும் இந்த இணக்கத்தின் சாராம்சத்தை வெளியே கொண்டு வருவதுமாகும். மனோ கணேசன் பின்வருமாறு கூறினார் “இது மேடைதான் அரசியல் தேர்தல் கூட்டணி அல்ல”

இப்படி ஒர் இணக்கம் ஐந்தாண்டுகளுக்கு முன் 2021ஆம் ஆண்டும் அதன் பலவீனமான நிலையில் கருக்கட்டியது. அப்பொழுது அந்த இணக்க முயற்சிகளை முன்னெடுத்தது டெலோ அமைப்பு. யாழ்ப்பாணம், திண்ணை விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பின்போது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு அப்பால் சென்று அந்த நிலைப்பாட்டைக் கொண்டிராத தமிழ் பேசும் சமூகங்களை பிரதிபலிக்கின்ற கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டை உருவாக்குவதற்கு திண்ணை சந்திப்பில் முயற்சிக்கப்பட்டது. ஆனால் அன்றைக்கு அந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்து கொள்ளவில்லை. அந்தச் சந்திப்புக்களின் விளைவாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமானது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது ஆகும். அந்தச் சந்திப்பு அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ந்து செல்லவில்லை. அதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று தமிழரசுக் கட்சி அதில் ஒத்துழைக்கவில்லை என்பது.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 கட்சிகள் இணைந்து ஒரு பொதுத் தளத்தில் வேலை செய்வது என்று இணங்கி இருப்பதாக தெரிகிறது.50 ஆண்டுகளுக்கு முன்பு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னெடுத்த ஒருங்கிணைப்பு முயற்சிகளை இது நினைவுபடுத்துகிறது.

பத்திரிகையாளர்களுக்கு ஆறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால், மூன்று முக்கிய விடயங்களின் மீது அவர்கள் கவனத்தைக் குவிப்பார்கள் என்று தெரிகிறது.முதலாவது, இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வந்தால் அதை எப்படி இணைந்து எதிர்கொள்வது என்பது. இரண்டாவது, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது. மூன்றாவது, காணிப் பிரச்சினையும் உட்பட, தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளில் பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய பொதுவான ஒர் இடையூடாட்டத் தளமாக அதனைப் பயன்படுத்துவது.

தமிழ் பேசும் கட்சிகள் தங்களுக்கிடையே பொதுவாக உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர வேண்டியது அவசியம். இலங்கைத் தீவுக்குள் பிரிவினை அல்லாத ஏதாவது ஒரு தீர்வை தமிழ் மக்கள் நாடுவார்களாக இருந்தால் அது உச்சபட்ச சமஷ்டியாக இருந்தாலும் கூட, தமிழ் பேசும் சமூகங்களுக்கு இடையில் உரையாடல் வேண்டும். தமிழ் பேசும் சமூகங்கள் தங்களுக்கு இடையே ஏதோ ஒரு பொது உடன்படிக்கைக்கு வரவும் வேண்டும். அந்த அடிப்படையில் இந்த முயற்சிகளை எடுத்த எடுப்பில் நிராகரிக்க தேவையில்லை.

இந்த முயற்சியில் தமிழ்த் தேசிய பேரவைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதற்குரிய விளக்கத்தை இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளை முன்னெடுத்தவர்கள் தர வேண்டும்.

அதேசமயம்,இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலப் பின்னணி தொடர்பில் இக்கட்டுரையின் முதல் பந்தியில் கூறப்பட்டதை சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்த முதலாவது பந்தி மிகவும் நீண்டது. அதைத் தொடர்ச்சியாக வாசிக்கும் போது, பகுத்தறிவுள்ளவருக்கு ஒருவிடயம் இயல்பாகவே பொறி தட்டும். அது என்னவென்றால், ஒரு புதிய யாப்பை நோக்கியும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கியும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடும் கட்சிகளையும் சிவில் சமூகங்களையும் ஒருங்கிணைத்தும் எத்தனை முயற்சிகள் சமகாலத்தில் முன்னெடுக்கப்படுகின்றன? ஒரே நோக்கத்தை கொண்ட வெவ்வேறு முயற்சிகள். அத்தனை முயற்சிகளும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்குள் இடம் பெறுபவை. இந்த எல்லா முயற்சிகளின் பின்னணியில்தான் இப்புதிய முயற்சியும் தொடக்கப்பட்டிருக்கிறது.ஆயின் இப்புதிய முயற்சியானது ஏற்கனவே தொடங்கப்பட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கிலானதா? இல்லையா?

சிறிய மக்கள் கூட்டமாகிய தமிழ் மக்கள் மத்தியில் எத்தனை ஒருங்கிணைப்பு முயற்சிகள்? எத்தனை அரசியல் தளங்கள்? எத்தனை மேடைகள்? எத்தனை முன்மொழிவு முயற்சிகள் ? எத்தனை பிரகடனங்கள் ? எத்தனை தீர்மானங்கள்? எத்தனை உள்ளோட்டங்கள்? தனியோட்டங்கள்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கும் ஆறு கட்சிகளின் கூட்டு இப்படி பத்தோடு பதினொன்றாக மாறுமா? அல்லது தமிழ் பேசும் சமூகங்களுக்கு இடையே பொதுவான விடயங்களை பேசி தீர்க்கும் ஒரு பயன் பொருத்தமான களமாக மாறுமா?

குறிப்பாக இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் தொடர்பாக கட்சித் தலைவர்கள் உத்தியோகபூர்வமாக தெரிவித்த தகவல்களின்படி ஒரு புதிய யாப்பை நோக்கி மேற்படி கட்சிகள் இணைந்து செயல்படும் விடயம் இதுவரை செல்லும் ?

ஏற்கனவே 2015ல் இருந்து 2018 வரையிலும் அவ்வாறு இக்கட்சிகள் இணைந்து செயல்பட்டன.அதன் விளைவாக ஓர் இடைக்கால வரைவும் உருவாக்கப்பட்டது. அது ஒற்றையாட்சித் தீர்வு என்றும், அதை அமுல்படுத்துவதுதான் சுமந்திரனின் உள்நோக்கம் என்றும் கஜேந்திரக்குமார் குற்றச்சாட்டுகிறார். அவ்வாறான ஒற்றையாட்சித் தீர்வை எதிர்ப்பதற்கான பிராந்தியச் சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தோடுதான் தமிழ்த் தேசியப் பேரவை இரண்டு தடவைகள் தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது.

அண்மை மாதங்களாக கட்சிகளும் பொதுமக்கள் அமைப்புகளும் முன்வைக்கும் பிரகடனங்கள், தீர்மானங்களில் ஒருவிடயம் பொதுவானதாகக் காணப்படுகிறது. அதுதான் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சமூக உடன்படிக்கை ஆகும். அதாவது இனங்களுக்கு இடையிலான ஒரு சமாதான உடன்படிக்கை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே இன்றுவரையிலும் ஒரு சமூக உடன்படிக்கை எழுதப்படவில்லை. கதிர்காமத்துக்கு பாதயாத்திரை போன சுப்பிரமணியனின் விடயத்தில் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் நிகழ்ந்த வெறுப்பு மிகுந்த வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, இரண்டு சமூகங்களும் எந்த அளவுக்குப் பிளவுண்டிருக்கின்றன என்பதை உணர முடிந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது சமூகங்களுக்கிடையிலான அரசியல் உடன்படிக்கையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதனை ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை அதன் தீர்வு முன்மொழிவில் கூறியிருக்கிறது. தமிழ் சட்டத்தரணிகள் சங்கமும் அதனை ஏற்றுக் கொள்கிறது. தமிழ்த் தேசிய பெரு மன்றும் ஏற்றுக்கொள்கிறது. தமிழ் தேசிய பேரவையும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இங்கே பிரச்சனை, அவ்வாறான ஒரு சமூக உடன்படிக்கைக்கான உரையாடல்கள் இதுவரை தொடங்கப்படவில்லை என்பதுதான். ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய அந்த இடையூடாட்டத் தளம் அவ்வாறான உரையாடல்களுக்குரிய ஒரு தளமாக விரிவடையுமா? தமிழ்த் தேசியப் பேரவையைத் தவிர்த்துவிட்டு அதைச் செய்யப் போகிறார்களா?

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>