அவரது மூன்று நூல்கள் மற்றும் இசைப்பேழை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம்
” கனடாவில் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா என்னும் தமிழ்ப் புலமையாளர் சாதாரணமானவர் அல்ல. அவரது உழைப்பும். ஈடுபாடும் தேடலும் போற்றுதலுக்கும் பாராட்டுக்களுக்கும் உரித்தானவை. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவர் தன் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்து பயணிப்பவர் அல்ல. தன் பணியை கண்ணியமாகவும் நேர்த்தியாகவும் ஆற்றி எம் மொழியையும் இலக்கியத்தையும் கவிதையையும் எம் மத்தியில் நிலைக்கச் செய்ய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். இந்த வகையில் தமிழ் மொழி சார்ந்த அனைத்துத் தளங்களிலும் அர்ப்பணிப்பும் இதயசுத்தியும் நிறைந்தவராய் நின்று செயற்படுபவர் என ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா அவர்களுக்கு புகழாரம் சூட்டுவோம்”.
இவ்வாறு ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா அவர்களின் மூன்று நூல்களான ‘கம்பனின் கருவூலம் திறந்து’ , எது சரி, ஏன் சரி?” மற்றும் ‘முனையிலே முகத்து நில்; ஆகியவை மற்றும் இசைப்பேழை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் சூட்டினார்கள்.
அன்றுவெளியிடப்பெற்ற மூன்று நூல்களும் கனடிய கலை இலக்கியப் பெரு ஏடான ‘தாய்வீடு’ இதழ்களில் பிரசுரமாகியதோடு அதன் வெளியீடாகவும் அமைந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விழாவின் ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய அவரது புதல்வரும் ரொறன்ரோ மாநகரசபையின் உறுப்பினருமான நீதன் சண்முகராஜா தன் பணியைச் சிறப்பாக ஆற்றினார். அவரைத் தொடர்ந்து தொகுப்பாளராக வந்த கவிஞர் சுகந்தனும் உரையாளர்களையும் விமர்சகர்களை ஏற்றவகையில் அழைத்து விழாவை நகர்த்திச் சென்றார்.
அன்றைய விழாவிற்கு தலைமை தாங்கிய பாவலர் அகணி சுரேஸ் அவர்கள் தொடர்ந்து ஆய்வரங்கத்தை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். தொடர்ந்து இசைப்பேழை வெளியீட்டுப் பகுதியை திருமதி ராஜ்மீரா இராசையா தொகுத்து வழங்கினார். தகமையும் பண்பும் நிறைந்த உரையாளர்கள் பலர் அங்கு உரைகளை வழங்கி விழாவின் தரத்தையும் உயர்த்தியவர்களாய் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா அவர்களின் ஆற்றல். கற்றல். தேடல். கற்பித்தல். மரபுக்கவிதை மீது கொண்ட அவரது நாட்டம் ஆகிய ஆற்றல்கள் சங்க இலக்கியத்தின் மீதான பற்றுதலுடன் அவற்றை கற்றுத் தேர்ந்த திறமை ஆகியவை சார்ந்து தங்கள் உரைகளை ஆற்றினார்கள்.
மொத்தத்தில் கலையும் இலக்கியமும் தமிழ்மொழியின் மேன்மையும் தமிழின் சுகந்தமும் மண்டபத்தில் நிறைந்திருந்த ஒன்றாக அன்றைய விழா நிறைவு பெற்றது.