பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனருமான ஆர்.பி. சௌத்ரி ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் காலமானார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பும்போது, அவர் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். குறிப்பாக விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார் போன்ற பல முன்னணி இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர்.
இவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள், நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் நடிகர் விஜய் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜய்யை பார்த்ததும் கதறி அழுத நடிகர் ஜீவாவையும் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.