தி.மு.க. கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைகோ தலைமையில் நடந்த ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தை சீர்காழி எம்.எல்.ஏ. புறக்கணித்தார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக அறிவித்துள்ளது.
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிட்டது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதுவும் அவர்களுக்கு தி.மு.க.வின் உதயசூரியன் சின்னமே ஒதுக்கப்பட்டது. இது ம.தி.மு.க. தொண்டர்களி டையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. 4 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளர்கள் கடையநல்லூர், சீர்காழி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றிபெற்றனர். சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. அணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடு தலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவை தெரிவித்தன. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சர வையிலும் இடம் பெற்றன. அதே நேரம் ம.தி.மு.க.வும் த.வெ.க.வுடன் நெருங்கி வந்தது. ஆனால் ம.தி.மு.க.வை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், நேரடியாக ஆதரவு தரமுடியவில்லை.
தேர்தலின்போது தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பை வைகோவும் வெளிப்படுத்தினார். இதற்கிடையே, முதலமைச்சர் விஜய்யை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினார். எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமை தாங்கினார். இதனிடையே ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறி த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைப்பது, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தி.மு.க. கூட்டணி வேண்டாம் என ஒருமனதாக தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த ம.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.