திருமங்கலாய் சிவன் கோவில் -1209

Share

சைவசமயம் திராவிட மக்களின் பழம்பெரும் சமயமாகக் காணப்படுகின்றது.  “பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் ” என்பது, பேராசிரியர் மறைமலை அடிகளாரின் ஆராய்ச்சி முடிவு. இன்றைய உலகிலே எத்தனையோ சமயங்கள் காணப்பட்டாலும், அவைகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது சைவ சமயமேயாகும். ஏத்தனையோ பழம்பெரும் சமயங்கள் இந்நாளில் மறைந்தொழிந்து போய்விட்டன. அவ்வாறில்லாமல் சுண்ணாம்புக் கற்காலம் எனக் கூறப்படும் சிந்தனைக்கெட்டாத காலம் முதல் ஏறத்தாழ இருபதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இன்றளவும் நின்று நிலைபெற்று உயிர்ப்பாற்றல் மிக்க நிலையில் சைவசமயம் விளங்கி வருகின்றது. இதனை சேர் ஜோண் மார்ச்சல் போன்ற மேல்நாட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலே தோன்றிய பல மதங்களின் காலத்தையும், அம் மதங்கள் யாரால் ஏற்படுத்தப்பட்ட தென்பதையும் நிச்சயித்துக் கூறமுடியும். ஆனால் சைவசமயத்தின் காலத்தையோ, அன்றி யாரால் தாபிக்கப்பட்டது என்ற வரையறையையோ கூற முடியாது. சைவசமயம் அநாதியானது. மனிதன் வாழ்வு நெறியை ஆரம்பித்தபோது, இயற்கையாக மலர்ந்த வாழ்வு நெறியாக சைவசமயத்தைக் கருதமுடியும். பிற்காலத்தில் சிந்துப் பள்ளத்தாக்கினூடாக வந்த மேலைத்தேசத்தவர்கள் இம்மதத்தை இந்து மதம் என்றும், அதனைப் பின்பற்றியோரை இந்துக்கள் என்றும் காரணப் பெயரால் அழைத்தனர். பின்னாளில் இப்பெயரே நிலைத்து, சைவசமயம் என்ற பொதுப் பெயர் மறைந்து, சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவோரை மட்டுமே குறிக்கும் பெயராக தற்கால வழக்கிலே போற்றப்படுகின்றது.

பிற்காலத்தில் இந்துமதத்திலே பிளவும், கருத்து வேற்றுமையும் ஏற்பட்டு, தத்தம் சமயமே முதற்சமயம் என்ற கொள்கையும் வலுப்பட்டு, ஒவ்வொரு சமயத்தவர்களும் ஒன்றோடொன்று முரண்பட்ட வேளையில், அவற்றை ஒருநிலைக்குக் கொண்டு வந்து காப்பாற்ற சில நெறிமுறைகளைக் கையாண்ட ஸ்ரீ சங்கரர், சைவம், சாக்தம், வைணவம், காணபதியம், கௌமாரம், சௌரம் என்ற பிரிவுகளைக் கொண்டதாக இந்துமதத்தை வகுத்தார். இதன்படி சைவத்தின் முழுமுதற் தெய்வமாக சிவனையும், சாக்த மதத்தின் முழுமதற் தெய்வமாக சக்தியையும், வைணவத்தின் முழுமுதற் தெய்வமாக திருமாலையும், காணாபதியம் என்ற மதத்தின் முழுமுதற் தெய்வமாக கணபதியையும், கௌமாரம் என்ற மதத்தின் முழுமுதற் கடவுளாக முருகனையும், சௌரம் என்ற மதத்தின் முழுமதற் கடவுளாக சூரியனையும் வகுத்தார். இவ்வாறான அறுவகைச் சமயங்களும் ஒன்றிணைந்து இந்து சமயம் எனப் போற்றப்பட்டது. ஆயினும் சைவசமயத்தினுள் ஏனைய சமயங்கள் சங்கமமான நிலையிலேயே தற்கால வணக்கமுறை காணப்படுகின்றது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலே ஈழத்திலே சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்ட சைவசமயம் எழுச்சி பெற்றுக் காணப்பட்டுள்ளது. ஈழத்திலே வாழும் சிங்கள இனத்தவர்களுடைய வரலாறு கி.மு 543 ஆம் ஆண்டிலே கலிங்கதேசத்திலிருந்து நாடுகடத்தப்பட்டு ஈழம் வந்த விஜயனுடன் ஆரம்பமாகின்றது. அக்காலத்திலேயே சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட பஞ்ச ஈஸ்வரங்களான முன்னேஸ்வரம், திருக்கேசீச்சரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய பஞ்ச ஈஸ்வரங்கள் சிறப்போடு விளங்கியுள்ளன.

வழிபாட்டிலே முதன்மையான வழிபாடாக சிவ வழிபாடு வரலாற்றுக் காலம் முதல் போற்றப்பட்டுள்ளது. சிவம் என்பதற்கு மங்கலம், சுபம், நன்மை, பேரானந்தம், உண்மை, மேன்மை எனப் பல பொருள்கள் உள் அடங்கிக் காணப்படுகின்றன. சிவ வழிபாட்டின் பெருமையை அதன் கருத்தே புரிய வைத்தள்ளது.

சைவம் சிவத்தடன் சம்பந்தமாகுதல்
சைவந் தன்னையறிந்தே சிவஞ் சாருதல்’

எனத் திருமந்திரத்திலே கூறப்பட்டுள்ளது.

ஆரியர் வருகை காரணமாக, இவ்வாறான சிறப்புப் பெற்ற சைவத்துடன், பிற்காலத்தில் பல்வேறு உப தெய்வங்களும் இணைக்கப்பட்டு, சிவவழிபாடு பின்தள்ளப்பட்டது. ஆயினும் சைவசமயிகள் சிவனையே முழுமுதற் கடவுளாகவும், ஏனைய தெய்வங்களை அடுத்தநிலையிலே வைத்து எண்ணும் மரபும் பலரிடையே காணப்படுகின்றது. “உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்” என்ற தத்துவார்த்தமான உண்மையைப் புரிந்து கொண்டால், மனிதரிடையே காணப்படும் சமய பேதங்கள் அகன்றுவிடும்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ்மன்னர்கள் பலர் ஈழத்தை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் பல சைவஆலங்களைக் கட்டிப் பேணி வளர்த்துள்ளனர். காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பு, உள்நாட்டுப் போர்கள் என்பனவற்றின் காரணமாக, பழமையான பல கோவில்கள் அழிந்தாலும், அவற்றின் சுவடுகள், சைவமக்களாகிய தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களை இனங்காட்டுவதாகக் காணப்படுகின்றது.

இவ்வாறான கோவிலாகத் திருக்கரைசையம்பதி திருமங்கலாய் கோவில் காணப்படுகின்றது.
மன்னர்கள் கட்டிய கோவில்கள் பல ஈழமெங்கும் காணப்படுகின்றன. பல மண்ணோடு மண்ணாகப் புதைந்து கிடக்கின்றன. இவ்வாறு கட்டப்பட்ட திருக்கோவில்களுள் ஒன்றாக திருக்கரைசையம்பதி திருமங்கலாய் சிவன்கோவில் காணப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாபுரப்பற்றிலுள்ள மூதூரிலிருந்த பதினாறு கிலோமீற்றர் தூரத்தில் கிளிவெட்டி என்ற சைவக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு திருக்கரசையம்பதி திருமங்கலாய் சிவன்கோவில் காணப்படுகின்றது.

வளரும்…

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>