விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக ஒவ்வொரு கட்சியாக அழைத்து பேசிக் கொண்டிருக்கிறது. எங்களையும் அழைத்து பேசுவார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடையும் வகையில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. நாளுக்குநாள் புதிய கட்சிகள் இணைந்து கூட்டணியை வலிமைப்படுத்தி கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழகத்தில் இன்னும் மாற்று கூட்டணி உருவாகவில்லை. தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். புகழ்பெற்ற நடிகர் என்பதால் ஊடகங்கள் கூடுதலான முக்கியத்துவத்தை தந்து கொண்டு இருக்கின்றன. அவரால் தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறப் போகிறது என்ற தோற்றத்தை திட்டமிட்டே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு மக்கள் மற்ற மாநிலங்களை ஒப்பிட்ட வரைவில் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள். கடந்த காலத்தில் சினிமா என்ற ஒரு மயக்கத்தில் தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்ததுபோல், தற்போதைய சூழ்நிலையில் அப்படி வாக்களிக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.