தேச வளர்ச்சி நிதியில் சீன ஆயுதங்கள்… பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் கண்டனம்

Share

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அரசு முடிவு செய்தது. இதன்படி அவர்கள் ஐரோப்பிய நாடுகள் உள்பட 33 நாடுகளுக்கு சென்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையை விளக்கினர். இதில், பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் லண்டன் நகரில் இங்கிலாந்து எம்.பி.க்களை நேரில் சந்தித்து நேற்று விளக்கம் அளித்தனர். அப்போது, தேச வளர்ச்சி நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தியது பற்றி இங்கிலாந்து எம்.பி.க்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்ததுடன், கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு அளித்த இந்தியாவின் பதிலடிக்கு, எம்.பி. லார்டு கரண் பிலிமோரியா, முன்னாள் எம்.பி. ஷைலேஷ் வரா உள்ளிட்ட ஒட்டுமொத்த எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது, பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியாவின் அமைதிக்கான விருப்பத்திற்கு ஆதரவு தெரிவித்த இதில், எம்.பி. பிளாக்மேன், சர்வதேச நாடுகளின் நிதியுதவியை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தியது பற்றி கேள்வி எழுப்பினார். நாட்டின் வளர்ச்சிக்கான நிதியை, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயலுக்கு, சீன ஆயுதங்களை வாங்க பயன்படுத்தி உள்ளதா? என எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>