‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கையை ஈழத்தமிழர் இதயத்தில் விதைத்த ‘விடுதலைக்குயிலின்’ மறைவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுத்துள்ள இரங்கற் செய்தி
தான் வாழ்ந்த தமிழ்நாட்டையும் தாண்டி அயல் தேசமாம் தமிழீழத்தின் மீதும் அதற்காகப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவருக்காகவும் போராளிகளுக்காகவும் மக்களுக்காகவும் தன் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவரும் இனிதான கம்பீரக்குரலால் எம்மையெல்லாம் கட்டிப்போட்டு உணர்வூட்டிய மரியாதைக்குரிய ‘பாசறைப் பாணர்’ தேனிசை செல்லப்பா அவர்களாவார்.. நாம் அவருக்குரிய இறுதி வணக்கத்தைச் செலுத்தி வழியனுப்பி வைத்தாலும் அவரது உடல் அக்கினிக்கு இரையாகிப் போய்விட்டாலும் அன்னாரது குரல் உலகத் தமிழர்கள் இதயங்களில் பதிந்த ஒன்றாக அவர்களுக்கு வழமையைப்; போன்று உணர்வூட்டும் பணியைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அத்துடன்'”நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கையை ஈழத்தமிழர் இதயத்தில் விதைத்த விடுதலைக்குயிலிற்கு உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் பெருமளவில் கடமைப்பட்டவர்களாக உள்ளார்கள். எனவே அவருக்கான மரியாதையை என்றும் செலுத்துகின்றவர்களாக நன்றியுடன் நாம் அவரைத் தொழ வேண்டும்”
இவ்வாறு கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயற்குழு விடுத்துள்ள இரங்கற் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களும் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேற்படி இரங்கற் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா கடந்த 28ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை சென்னையில் காலமானார் என்ற செய்தி உலகெங்கும் பரவத் தொடங்கியவுடம் ஒரே நேரத்தில் விழித்துக் கொண்டவர்கள் போல புலம் பெயர் தமிழ் மக்கள் அவருக்காகக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினர். தமிழ்நாட்டில் உள்ள உணர்வாளர்கள் சிலருடன் உரையாடி தங்கள் இரங்கலைப் பகிர்ந்து கொண்டனர். எத்தனையோ ஆண்டுகளாய் ‘பொருளை’த் தேடி ஓடாமல் ஈழத்தமிழ் மக்களின் வாழ்விலும் அவர்களது அரசியல் இருப்பிலும் உள்ள ‘இருள்’ நீங்கிவிட வேண்டும் என்பதற்கா தன் குரலை உயர்த்திப் பாடிய குயில்தான் ஐயா ‘பாசறைப் பாணர்’ தேனிசை செல்லப்பா அவர்களாவார்.
தமிழகத்தில் தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் பாடல்களைக் கேட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான பேபி சுப்பிரமணியம் அவர்களினால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்ற தேனிசைச் , செல்லப்பா,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பரப்புரைக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் எழுதப்பட்ட பத்து பாடல்களை ஆரம்பததில் பாடி அவற்றால் ஈர்க்கப்பெற்ற தலைவர் அவர்கள் தமது தேசத்தின் மக்கள் தேனிசை செல்லப்பா அவர்களின் இனிதானதும் உணர்வை தட்டி யெழுப்பும் ஆற்றல் கொண்ட அவரது குரலை நேரடியாகக் கேட்டு மகிழ வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து மக்கள் முன்னிலையில் அவரது பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,
அதன்பிறகு உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் தேனிசை செல்லப்பாவின் குரலும் இனிதான விடுதலைப்பாடல்களும் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்ததன. அவர் இறுதிவரைக்கும் இனத்தின், மொழியின் உணர்வெழுச்சிப்பாடல்களே போதும் என்று வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
அவரது பெயர் தேனிசை செல்லப்பா என்று பெயர் இருந்தாலும், அவர் வெறும் தேனிசை பாடுபவராக அல்லாமல் இன எழுச்சி . பாடகராக மொழிப்பற்றையும், மான உணர்வையும் கொண்டு சேர்த்தார் என்பதும் உலகத் தமிழர்கள் ஏற்றுக்கொண்ட உண்மையே..
ஐயா அவர்கள். அடக்குமுறைகளுக்கும் வழக்குமுறைக்கும் அஞ்சாமல், ஒரு போர் வீரனாகவே வாழ்ந்து மறைந்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பக் காலத்தில் நிதி திரட்டுவதற்காகப் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று அவர் பாடிக்கொண்டிருக்கையில் மக்கள் நிதியை அள்ளிக் கொடுத்தார்கள் என்பது ஒரு வரலாறு.. அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் . தலைவர் பிரபாகரன்அவர்களாலும் மக்களாலும் பேரன்பு கொண்டு நேசிக்கப்பட்ட தேனிசைச் செல்லப்பா அவர்களுக்காக உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் இல்லங்களில் அவருக்காக விளக்கேற்றி வைக்கும் வண்ணம் வேண்டுகின்றோம்”
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களும் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது