தொல்லியல் சட்டம், கொள்கையை மாற்றாது கூட்டங்களில் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உபதேசம் செய்வதால் பயனில்லை

Share

– தவிசாளர் நிரோஷ் கண்டனம்

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு தொல்லியல் சட்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வாருங்கள். அதற்கு உங்கள் அரசாங்கத்திற்கு முழு பலமும் பாராளுமன்றத்தில் காணப்படுகின்றது. அதனை நீங்கள் செய்யாது தொல்லியல் திணைக்கள சாதாரண உத்தியோகத்தர்களை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் அழைத்து எச்சரிப்பது தீர்வல்ல. என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இந்த வாரம் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கோட்டை பகுதியில் தொல்லியல் திணைக்களம் கல் தூண்களை நடுவது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட ஆளும் கட்சி எம்.பிக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்ட உத்தியோகத்தரை கடுமையாக சாடினர்.

இந் நிலையில் கருத்தத் தெரிவித்த பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , தொல்லியல் திணைக்களம் எவருக்கும் கட்டுப்படாததாக இன முரண்பாடுகளையும் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை விஸ்தரிக்கும் திணைக்களமாகவே உள்ளது. வரலாற்று ரீதியில் தொல்லியல் திணைக்களத்திற்கு நாட்டில் அளிக்கப்பட்டுள்ள மிகவும் மிலேச்சத்தனமான சட்டங்களின் வாயிலாக திட்டமிட்ட பௌத்த பேரினவாத அணுகுமுறை முன்னெடுக்கப்படுகின்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக் கூடிய அரசாங்கத் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க் கட்சியில் இருப்பவர்கள் போல சாதாரணமாக தொல்லியல் உத்தியோகத்தர்களைக் கண்டிக்கின்றீர்கள். இதனை நீங்கள்; தமிழ் மக்களிடத்தில் அரசியலுக்காகவோ அல்லது நீங்கள் ஆளும் கட்சி என்பதை மறந்தோ செய்யலாம். இதனால் அடக்கு முறையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு பயன் விளையப் போவதில்லை.
சட்டங்களின் வாயிலாகவும் சுற்றுநிருபங்களின் வாயிலாகவும் அர கொள்கைகளின் வாயிலாகவும் தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆக்கிரமிப்புக்களைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.

இதனைத் தடுப்பதற்கு பாராளுமன்றில் மிகப் பெரும்பான்மை உள்ள அரசாங்கம் பொறுப்புடன் இன முரண்பாடுகளை விளைவிக்கும் சட்டங்களையும் சுற்றுநிருபங்களையும் அரச கொள்கைகளையும் மாற்றவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>