வட மாநிலம், தென் மாநிலம் என்னும் பிரிக்கும் சூழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட வேண்டாம் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”தமிழக முதல்-அமைச்சர் பீகாரை பற்றி பேசியதைதான் பிரதமர் மோடியும் பேசி இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர்தான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார். அவர் வட மாநிலம், தென் மாநிலம் என்னும் பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். அவருக்கு தோல்வி பயம் வந்துள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்திலும் பொய்யையே பேசி வருகிறார். இந்த ஆட்சியே பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பல உயர்வு கொண்டு வரப்பட்டு மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். தேர்தல் வர இருப்பதால் இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கூட கொடுப்பார்கள். தி.மு.க. ஆட்சி பழி வாங்கும் ஆட்சியாக இருக்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற நிலை இருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மரியாதை செலுத்தியது குறித்து நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.