நமது எழுத்தாளர் தீபச்செல்வன் தனது எழுத்துப் பயணத்தில் பல இடர்பாடுகளை எதிர்கொண்டு, தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒரு படைப்பாளி. “

Share

கனடாவில் ‘சயனைட்’ நாவல் அறிமுக விழாவில் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி புகழாரம்

“இலங்கைத் தீவில் இருந்து எழும் எழுத்தாளர்கள் பலர், பல்வேறு கட்டுப்பாடுகளையும், அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையும் மீறி தங்கள் குரலை எழுப்பி வருகிறார்கள். அவர்களின் அனுபவங்களும் பார்வையும் அனைத்துலகத்திலும் உள்ள வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்கு அப்பால் தாயகத்தில் அவர்கள் அனுபவிக்கும் சவால்கள் மற்றும் அரச பயங்கரவாதத்தின் மிரட்டல்கள் மற்றும் எச்சரிக்கைகள் ஆகியவற்றையும் தாங்கிய வண்ணம் உள்ளார்கள். இங்கு முக்கியமாக நமது எழுத்தாளர் தீபச்செல்வனும் இந்நெறியில் பல இடர்பாடுகளை எதிர்கொண்டு, எழுத்துப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒரு முக்கியமான படைப்பாளி. எனவே புலம் பெயர் தமிழர்கள் அவரது படைப்பிலக்கியப் பணியை ஊக்குவிக்கும் வகையில் உதவிட வேண்டும்.”

இவ்வாறு கனடா வாழ் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரும் கணக்காளருமான நிமால் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

கடந்த 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்ற தாயக எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களது ‘சயனைட்’ என்னும் போர்க்கால நாவல் அறிமுக விழாவில் சிறப்புரையாற்றிய அவர் தெரிவித்தார்.

திரு பொன்னையா விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் எழுத்தாளரும் கவிஞருமான சா. வே. பஞ்சாட்சரம் அவர்கள் நூலை வெளியீட்டு வைத்தார். எழுத்தாளரும் திரைப்பட இயக்குனரும் அரசியல் செயற்பாட்டாளருமான ரஞ்சித் அவர்களும் எழுத்தாளர் தீபச்செல்வன் தொடர்பான அறிமுக உரையை ஆற்றினார். விமர்சகர்களான ‘அன்பு’ மற்றும் காலம் செல்வம் ஆகியோர் ஆய்வுரைகளுக்காக அழைக்கப்பெற்றிருந்தனர். இவர்களுள் விமர்சகர் ‘அன்பு’ அவர்கள் நாவலை முற்றாக வாசித்த அனுபவத்தோடு தனது முழுமையான உரையை திறந்த மனதோடு வழங்கிச் சென்றார். எனினும் அவரது எதிர்மறையான விமர்சனங்கள் சபையோரை முகஞ்சுழிக்கச் செய்தன என்பது உண்மையே!. ஆனால் எழுத்தாளர் காலம் செல்வம் அவர்களது ஆய்வுரையை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்த வண்ணம் “இவர் ‘சயனைட்டை’ கையில் கூட எடுத்திருக்க மாட்டார்’ என்று தமது ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டனர். நாவலின் பிரதிகளை பல இலக்கிய அன்பர்கள் விருப்புடன் வந்து பெற்றுச் சென்றனர்.

அங்கு திரு நிமால் விநாயகமூர்த்தி தொடர்ந்து உரையாற்றுகையில்

“கலையும் இலக்கியமும் ஒரு சமூகத்தின், மற்றும் ஒரு தேசத்தின் பண்பாட்டையும், மொழியையும், வாழ்வியலையும், வரலாற்றையும் வடிவமைத்து நிலைநாட்டும் முக்கியமான கூறுகளாக உள்ளன. அந்த வகையில், காலத்தின் சுவடுகளை பதிக்கும் படைப்பாளிகளின் எழுத்துப் பணிகளுக்கும், கலைஞர்களின் கலைப் பணிகளுக்கும் நாம் தார்மீக ஆதரவை வழங்குவதே ஒரு சமூகக் கடமையாகும்.

இலங்கை போன்ற நுட்பமான வரலாற்று பின்னணியைக் கொண்ட நாட்டில், இலக்கியங்கள் கடந்த கால அவலங்களின் சாட்சியாக மட்டுமின்றி, எதிர்கால நம்பிக்கையின் கனலாகவும் இருந்து வருவதை நாம் ஊக்கமளித்து இன்னும் படைப்புக்கள் வெளிவர உதவியாக இருக்க வேண்டும்..

அந்த அடிப்படையில், எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் என்ற நாவல் அறிமுக விழாவில் பங்கேற்பது எனக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கின்றது.

இந்நிகழ்வில் மட்டும் அல்ல; கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி, தமிழ் நாட்டில் பிரசாத் லேப் எனும் மண்டபத்தில், தமிழ் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் மருது தலைமையில் இந்த நாவல் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் பல பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். எழுத்தாளர் தீபச்செல்வனும் உரையாற்றினார். அந்த அருமையான இலக்கிய நிகழ்வில் நானும் உரையாற்றியதையே நான் பெருமையாக நினைக்கிறேன்.

. அதுபோன்று, தீபச்செல்வன் போன்ற படைப்பாளிகளின் பணியுக்கும் நாம் உறுதியான ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதன் மூலம் நாம் எமக்கான வாழ்வியலையம் வரலாறையம் பிரதிபலிக்கும் செழுமையான இலக்கியங்களை உருவாக்கமுடியும்.

இவ்வளவு சவால்களும், இடர்களும் நிறைந்த சூழ்நிலையிலிருந்து உருவாகும் ஒரு இலக்கியப் படைப்பு சாதாரண நிகழ்வல்ல. இது ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கும் வரலாற்றுக்கும் இடையே நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்த வல்லன.

.எமது இலக்கியங்களும் கலைகளும் நீதிக்கான போரில் நெஞ்சோசையாக இருக்கின்றன. அவை எங்களது உரிமைக்கும் விடுதலைக்குமான குரலை எழுப்புகின்றன.” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியில் கிளிநொச்சியிலிருந்து எழுத்தாளர் தீபச்செல்வன்’ தனது பதிலுரையை இணைய வழி ஊடாக வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

-சத்தியன்- கனடா

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>