அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல். 12–8-2022 அன்று கனடாவில் வெளியிடபெற்ற தினத்திற்கு சில நாட்கள் முன்பாக……….
உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் மக்களால் விரும்பப்பெறும் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ எதிர்வரும் 12–8-2022 அன்று வெள்ளிக்கிழமை கனடாவில் வெளியிடப் பெறுகிறது.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழர் சங்கங்களின் சம்மேளனம் நடத்திய ‘பெட்னா’ விழாவில் முதற் தடவையாக வெளியிடப் பெற்ற இந்த நூல்,
கனடாவைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் வெளியிடப் பெறும்.
நூல் வெளியிடப்பெறும் நிகழ்வில் தொகுப்பாளராக விளங்கவுள்ள
எஸ். கே. ராஜன் அவர்கள் லண்டன் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்றி வருகின்றார்.
அவரைச் சந்தித்து உரையாடினோம்:
அவர் சொல்கிறார்…
இலங்கை வானொலியின் தொடக்கம், வானொலியின் ஆளுமையாளர்கள், அவர்களின் ஒலிபரப்புத் துறைப் பணிகள் என,
நாம் அறிந்திராத பல தகவல்கள் இந்த நூலில் உள்ளன.
ஒலிபரப்புத்துறையில் ஈடுபட்டுள்ள இன்றைய இளைய தலைமுறையினருக்கு மட்டும் அல்ல நாளைய புதிய தலைமுறைக்கும் உகந்த ஒரு நூல்.
லோகேந்திரலிங்கம் அவரிடம் பகிர்ந்த முதற் கேள்வி
“யாழ்ப்பாணத்தில் ஒரு விளம்பர ஒலிபரப்பாளராகப் பயணத்தைத் தொடங்கி,
தமிழ்நாட்டுத் தமிழர்களையும் வான்அலைகள் ஊடாக இணைத்துக் கொள்ளும் ‘இலங்கை வானொலியோடு தங்களை இணைத்துக் கொண்டீர்கள். அந்தப் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்.
எஸ்.கே. ராஜன்
“பாடசாலையில் மாணவனாக இருக்கும் பொழுதே ஒலி வாங்கியுடன் உறவாடல் ஏற்பட்டது.
கலை விழாக்கள், ஆலயத் திரு விழாக்களில் ஒலி வாங்கியில் அறிவிப்புகளை மேற்கொண்டேன்.
பின்னர் வட இலங்கையில் வாகன விளம்பர ஒலிபரப்பின் முன்னோடியான சி.சு.புனிதலிங்கன் அவர்களின் ‘மக்கள் குரல்’ விளம்பர சேவையில் சேர்ந்தேன்.
யாழ்.நவீன சந்தையில் ‘மணிக்குரல்’ விளம்பரசேவை ஒலிபரப்பாகியதை அடுத்து ‘மக்கள் குரல்’ விளம்பரசேவை இயங்கியது.
அதனை அடுத்து ‘விக்ரர் அன்ட் சன்’ விளம்பரசேவை ஒலிபரப்பானது.
நானும், மணிக்குரல் மேஜர் சண்ணும் பணியாற்றினோம்.
யாழ் பேருந்து நிலையத்தில் பெஸ்ரோன் ஒலிபரப்பைத் (1978) தொடங்கினோம்.
பல அறிவிப்பாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தேன்.
1982 தொடக்கம் , கொழும்பில் வாழ்க்கை தொடர்ந்தது.
1983 டிசம்பரில் இலங்கை வானொலியில் பணியாற்ற. வாய்ப்புகள் கிடைத்தன.
1983 ஜூலை கலவரம்,
கொழும்பு வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்திய நிலையில்
1984ம் ஆண்டில் புலம் பெயர்ந்து ஃபிரான்ஸ் நாட்டில் அடைக்கலம் பெற்றேன்.
1988ஆம் ஆண்டு ‘தமிழமுதம்’ என வாரத்தில் ஒரு மணி நேரம் வானொலி ஒலிபரப்பை நடத்தி வந்தேன்.
1997ஆம் ஆண்டு லண்டனில்
நாடகப் பேராசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் ஐபிசி தமிழ் வானொலியைத் தொடங்கும் பொழுது
அடியேனுக்கும் அழைப்பு விடுத்து இணைத்துக்கொண்டார்.
ஐரோப்பாவில் வானொலிக் கலைப்பயணம்
வெள்ளி விழாவைக் கடந்து செல்கின்றது.
லோகேந்திரலிங்கம் அடுத்த கேள்வியுடன் தொடர்கின்றார்
“வானொலிக்கலை தங்களை ஈர்த்தது எப்படி?
காரணமாக இருந்தவர்கள் யார்?
எஸ்.கே. ராஜன்
– அறிவிப்பாளர்களின் குரல்கள் தான் என்னை வானொலியின் பக்கம் ஈர்த்தன.
எஸ்.பி.மயில்வாகனன், எஸ்.கே.பரராஜசிங்கம்,
ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம், பி.எச். அப்துல் ஹமீத்,
ராஜேஸ்வரி சண்முகம்,நடராஜ சிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ,
விமல் சொக்கநாதன்,
சரா இம்மானுவேல், கே.எஸ்.ராஜா,கோகிலா சிவராஜா, புவனலோஜனி போன்ற பல அறிவிப்பாளர்களின் குரல்களும்,
வி.ஏ. கபூர், எஸ்.புண்ணியமூர்த்தி, சுந்தரலிங்கம், சற்சொரூபவதிநாதன், வி.பி.தியாகராஜா, என்.சிவராஜா, நடேச சர்மா,
சில்வஸ்ரர் பாலசுப்ரமணியம், வி.என்.மதி அழகன்
போன்ற செய்தி வாசிப்பாளர்களின் குரல்களும்,
வானொலிக் கலை ஈடுபாட்டுக்குத் தூண்டுதலாக அமைந்தன.
லோகேந்திரலிங்கம்- மூன்றாவது கேள்வியாக:
வானொலித் துறையில் வெறுமனே செய்திகள் மாத்திரம் அடங்குவதில்லைதானே? கலை-இலக்கியம் தொடர்பான விடயங்களும் இடம்பெறுகின்றன. தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் கவிஞர்களோடு எவ்வாறான தொடர்பைப் பேணி வந்தீர்கள்?
எஸ்.கே. ராஜன்
ஈழத்துக் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் கலைஞர்களுடன் எனது தொடர்பாடல் மிக நீண்டது. வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் என வலம் வருவோருடன் தொடர்புகள் கொண்டேன்.
கலைப்பெருமகன் ஏ.ரகுநாதன் போன்ற மூத்தவர்கள் முதல், இன்றைய இளைய தலைமுறையினர் வரை கலைஞர்கள் தொடர்பு நிறைவாகவே உள்ளது.
இலக்கியத் துறை சார்ந்தவர்களும் அவ்வாறே.
முதுபெரும் எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் முதல்,
இன்றைய இளைய தலைமுறையினர் வரை தொடர்புகள் நீண்டு செல்கின்றன”
தொடர்ந்து லோகேந்திரலிங்கம்:
கனடா பயணத்தில் எவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க உள்ளீர்கள்?
எஸ்.கே. ராஜன்
‘தமிழோசை-சினி மீடியா சிறிகாந்தா அவர்களின் அழைப்பு.
அவர் நடத்தும் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கின்றேன்.
2020ல் கனடாவுக்கு வருகைதந்த பொழுதிலும், சிறிகாந்தா அவர்களின் நிகழ்ச்சியிலேதான் பங்கேற்றேன்.
லோகேந்திரலிங்கம்:
அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களுடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது?
எஸ்.கே. ராஜன்
“எனது முதல் மரியாதைக்குரிய மூத்த ஒலிபரப்பாளர், அன்புச் சகோதரர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்களுடன் தொடர்பு
நான்கு தசாப்தங்களுக்கு மேலானது.
அவர், ஒலிபரப்புக் கலையின் பல்கலைக் கழகம்.
அங்கே அவரிடத்தில் நான் ஒரு மாணவனாக, ஒலிபரப்புக் கலை நுணுக்கங்களைத் தொடர்ந்து கற்று வருகின்றேன்.
அவரை முதன் முதலில் கலை நிகழ்ச்சி நடத்த பரிஸ் நகருக்கு 1988ஆம் ஆண்டு அழைத்தேன்.
அடுத்தடுத்த ஆண்டுகளில், கலைக்குழுவாகவே ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்கள் அமைந்தன.
31.07.2004ல் லண்டன் மாநகரில் அவருக்கு ஒரு பாராட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
நாடகர் ஏடகர் ஊடகர் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்வாறு எமது கலைப்பயணம் தொடர்கின்றது”
எஸ். கே. ராஜன் அவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி அவரை வழியனுப்பி வைத்தோம்.