– அநுர அரசிடம் சஜித் வேண்டுகோள்
“நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த சமயம் மக்கள் விடயத்தில் எவ்வாறு அக்கறையுடன் இருந்தீர்களோ, அப்படியே ஆட்சியில் இருக்கும்போதும் மக்கள் விடயத்தில் அக்கறையுடன் இருங்கள். இனியாவது கருணையுடன் செயற்பட்டு மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என இந்த அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மனிதர்களைப் போலவே விலங்கினங்களையும் பாதுகாத்து, நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் உடனடியாகத் தீர்வு வழங்குமாறும் அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் 06ம் திகதி அன்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:-
“நுவரெலியா மாவட்டம், கொட்டகலை பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன், கால்நடை மருத்துவத் துறையினர் தொழிற்சங்கப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர்களிடம் பேசி ரந்தென்பெல கால்நடை மருத்துவரை அனுப்பி அந்தச் சிறுத்தையைக் காப்பாற்ற முடிந்தது. இதற்கு உதவிய கால்நடை மருத்துவர்களுக்கும் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வனஜீவராசிகள் துறையில் 33 கால்நடை மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 17 பேரே உள்ளனர். குறைந்த வருமானம், அதிக வேலைப்பளு, உயிராபத்து மற்றும் விடுமுறை, அவசரகாலக் கொடுப்பனவுகள் இன்றி அவதிப்படும் இவர்களுக்குப் பதவி உயர்வுகள் கூட வழங்கப்படுவதில்லை. இவர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு சேவையை மதித்து முறையான நீதியையும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
பொல்துவ சந்திப் பகுதியில் இஸ்ரேல் வேலைவாய்ப்பு விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச ஒப்பந்தத்தின் பிரகாரம் 70% பேரை அரசு ஊடாக அனுப்ப 4 இலட்சம் செலவாகும் நிலையில், 30% பேரைத் தனியார் மூலம் அனுப்ப 45 இலட்சம் வரை செலவாகின்றது.
பெரும்பான்மையானவர்கள் தனியார் மூலம் அனுப்பப்படுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் பேசி, அரசு மட்டத்தில் அனுப்பும் தொகையை அதிகரிக்க வேண்டும்.
விவசாயிகளின் அறுவடைக்கு ரூபா 120 உத்தரவாத விலை வழங்கப்படுவது போதுமானதல்ல. விவசாய அமைச்சரே ஒரு கிலோவுக்கான உற்பத்திச் செலவு ரூபா 137 எனக் கூறுகின்றார். தேர்தல் காலத்தில் ரூபா 150 உத்தரவாத விலை வழங்கப்படுமெனக் கூறிய போதிலும், இன்று அது நடைமுறையில் இல்லை. எனவே, விவசாயிகளுக்கு முறையான உத்தரவாத விலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தொடர்ச்சியான பேரிடர்களை எதிர்கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் கடன் செலுத்தாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சொத்துகள் ஏலமிடப்படும் அபாயமும் எழுந்துள்ளது. எனவே, அவர்களின் கடன்களை மறுசீரமைத்து நிவாரணங்களை வழங்குங்கள்.” – என்றார்.