நூற்றாண்டு காலக் கல்விப் பாரம்பரியமும் ஒரு நூற்றாண்டு கால அரசியலும்

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் சுமந்திரனுக்கு காட்டப்பட்ட எதிர்ப்பானது அவர் பழைய மாணவர் அல்ல என்ற காரணத்தால் என்று கூறப்படுகிறது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள 75 வயதான ஒரு கட்சியின் பதில் செயலாளராக இருப்பவர், ஏறக்குறைய கட்சியின் தலைவரைப் போல செயல்படுகிறவர், மதிக்கப்படும் ஒரு சட்டத்தரணி, அவருக்கு அவருடைய சொந்த சமூகத்தில் காணப்படும் மதிப்பின் குறியீடாகவும் அந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாமா? இதை இன்னும் ஆழமாகக் கேட்டால்,தமிழ் அரசியலின் குறியீடாகவும் அதை எடுத்துக் கொள்ளலாமா? இருப்பதில் பெரிய கட்சி தன் கட்சிக்காரருக்கு எதிராகவே வழக்கு போடும் ஒரு நிலைமையில் இருக்கிறது. பெரும்பாலான ஆலய அறக்கட்டளைகளுக்குள் மோதல்கள். அந்த மோதல்கள் போலீஸ் நிலையம் வரை செல்கின்றன. அல்லது நீதிமன்றம் வரை செல்கின்றன. நவீன யாழ்ப்பாணத்தை செதுக்கிய திருச்சபைகளில் முக்கியமானது, தென்னிந்திய திருச்சபை. அதுவும் நீதிமன்றத்தில் நிற்கிறது. இதுதான் தற்போதைய ‘தமிழ்ச் சமூகத்தின் இருபபு’

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதன் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த வைபவத்தை முன்னிட்டு ஒரு நடைபவனி ஒழுங்கு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனை விருந்தினராக அழைத்திருந்தார்கள். அதனை பழைய மாணவர்கள் எதிர்த்தார்கள். பாடசாலை பழைய மாணவர் ஒருவரைத்தான் அவ்வாறு பிரதம விருந்தினராக அழைக்க வேண்டும் என்றும்,பழைய மாணவர் அல்லாத ஒருவரை அழைக்கக்கூடாது என்று பழைய மாணவர்கள் எதிர்ப்புக் காட்டியதை அடுத்து சுமந்திரன் அழைக்கப்படவில்லை.

சுமந்திரன் அங்கே அழைக்கப்படக் காரணம் பழைய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் பிரதேச சபை தவிசாளர் என்றும் கூறப்படுகிறது. சுமந்திரனை அந்த வைபவத்துக்கு அழைத்தது அவர்தான் என்றும் கூறப்படுகிறது. கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவே முன்னிட்டு நடக்கும் நிகழ்வுகளின் இறுதி நிகழ்வில் அமைச்சர் சந்திரசேகரனும் நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்த ராஜாவும் முதலில் அழைக்கப்பட்டார்கள். அரச பிரதிநிதிகளை அந்த கொண்டாட்டங்களுக்கு அழைக்கலாம் என்றால் அதனை சமப்படுத்துவதற்கு தமிழரசு கட்சியை சேர்ந்த சுமந்திரனையும் அழைக்க வேண்டும் என்று பழைய மாணவர்களில் சிலர் விரும்பியதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுபோன்ற நிகழ்வுகளில் பழைய மாணவர்களை அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டிய பழைய மாணவர்கள் சுமந்திரன் அந்த வைபவத்துக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்படுவதற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். அதனால் சுமந்திரன் நடைபவனிகள் கலந்து கொள்ளவில்லை.இறுதி நாள் நிகழ்வில் அரச பிரதிநிதிகளும் அழைக்கப்படவில்லை என்று தெரிகிறது.

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி எனப்படுவது கடந்த நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் இந்து அறக்கட்டளைகளுக்கும் இடையிலான போட்டி, மோதல் என்பவற்றின் விளைவாகத் தோன்றிய பள்ளிக்கூடங்களில் ஒன்று. ஆறுமுக நாவலரின் இந்து மறுமலர்ச்சிச் செயற்பாடுகளின் விளைவாக,சுழிபுரம் ஆங்கில இந்து கல்லூரி என்ற பெயரில் அது முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் 1892 அரச உதவிகளைப் பெறும் ஆங்கில பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நூற்றாண்டு காலப்பகுதிக்குள் நவீன யாழ்ப்பாணத்தை செதுக்கிய காரணிகளில் முக்கியமானது, பாடசாலைகளைக் கட்டும் மதங்களுக்கு இடையிலான போட்டியாகும். திருச்சபைகளுக்கும் இந்து மறுமலர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஒரு வித மோதல் அல்லது போட்டி காரணமாக கட்டியெழுப்பப்பட்ட பாடசாலைகளின் விளைவுதான் இப்போதுள்ள நவீன யாழ்ப்பாணம்.

ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் யாழ்.பரி.யோவான் கல்லூரி,யாழ் மத்திய கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி,உடுவில் மகளிர் கல்லூரி, புனித சம்பத்திரிசியார் கல்லூரி, விக்டோரியா கல்லூரி…. போன்றன தமது நூறாவது ஆண்டு நிறைவை அல்லது 150ஆவது ஆண்டு நிறைவை அல்லது 200 வது ஆண்டு நிறைவை கொண்டாடின, கொண்டாடுகின்றன. கிளிநொச்சி மத்திய கல்லூரி போன்றன வரும் ஆண்டில் நூறாவது ஆண்டைக் கொண்டாடவிருக்கின்றன. இவை யாவும் தமிழ் மக்களின் கல்வி பாரம்பரியத்தின் செழிப்பைக் காட்டுபவை.

இவ்வாறு பல முன்னணிப் பாடசாலைகள் 100 ஆவது ஆண்டு நிறைவை, 150ஆவது ஆண்டு நிறைவை, 200ஆவது ஆண்டு கால நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் கடந்த ஒரு நூற்றாண்டு கால அரசியல் எங்கே வந்து நிற்கிறது? தனது நூறாண்டு கால கல்வி பாரம்பரியத்தின் விளைவாக உலகம் வியக்கும் சான்றோர்களை உற்பத்தி செய்த ஒரு சமூகத்தின் அரசியலானது இப்பொழுது எங்கே வந்து நிற்கிறது?

இருப்பதில் பெரிய கட்சி தன் கட்சிக்காரருக்கு எதிராகவே வழக்கு போடும் ஒரு நிலைமையில் இருக்கிறது. பெரும்பாலான ஆலய அறக்கட்டளைகளுக்குள் மோதல்கள். அந்த மோதல்கள் போலீஸ் நிலையம் வரை செல்கின்றன. அல்லது நீதிமன்றம் வரை செல்கின்றன.நவீன யாழ்ப்பாணத்தை செதுக்கிய திருச்சபைகளில் முக்கியமானது, தென்னிந்திய திருச்சபை.அதுவும் நீதிமன்றத்தில் நிற்கிறது.

விக்டோரியா கல்லூரியில் சுமந்திரனுக்கு காட்டப்பட்ட எதிர்ப்பானது அவர் பழைய மாணவர் அல்ல என்ற காரணத்தால் என்று கூறப்படுகிறது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள 75 வயதான ஒரு கட்சியின் பதில் செயலாளராக இருப்பவர், ஏறக்குறைய கட்சியின் தலைவரைப் போல செயல்படுகிறவர், மதிக்கப்படும் ஒரு சட்டத்தரணி, அவருக்கு அவருடைய சொந்த சமூகத்தில் காணப்படும் மதிப்பின் குறியீடாகவும் அந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாமா? இதை இன்னும் ஆழமாகக் கேட்டால், தமிழ் அரசியலின் குறியீடாகவும் அதை எடுத்துக் கொள்ளலாமா?

கடந்த இருநூறு ஆண்டுகளிலும் படிப்படியாகச் செதுக்கப்பட்ட நவீன யாழ்ப்பாணமானது அதன் அரசியலில் எங்கே நிற்கிறது? கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கைத் தீவில் முதலில் தோன்றிய இளையோர் அமைப்பு ஆகிய யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரசானது நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலை பகிஷ்கரித்தபோது ஒரு சிங்களத் தலைவரான பிலிப் குணவர்த்தன. “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” என்று வியந்து கூறினார். ஆனால் தமிழ் தேசிய அரசியல் இப்பொழுது அவ்வாறு கூறத்தக்க நிலையில் உள்ளதா ?

கடந்த இரண்டு நூற்றாண்டு காலக் கல்வியின் விளைவாக தற்போது உள்ள தமிழ் அரசியல் உள்ளதா? நீங்கள் நாவலர் வீதி வழியாகப் போனால் ,அதன் சுற்றயல் வீதிகளில் காணப்படும் தனியார் கல்வி நிறுவனங்களின் பெயர்களை வாசியுங்கள்.” விஞ்ஞான மண்டபம்”, “விஞ்ஞான உலகம்”, “விஞ்ஞான அருவி”, “விஞ்ஞான சமுத்திரம்”, “ஞானம்”,”தொழில் நுட்ப உலகம்” .. இந்த அளவுக்கு விஞ்ஞானத்தின் மீதும் கணிதத்தின் மீதும் தாகமுடைய ஒரு சமூகம், தனது நிகழ்கால வாழ்வையும் எதிர்கால வாழ்வையும் தீர்மானிக்கும் அரசியலில் விஞ்ஞானபூர்வமாகவும் கணிதபூர்வமாகவும் முடிவுகளை எடுக்கின்றதா?

விடயங்களை விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக, தர்க்கபூர்வமாக அணுகும் ஒரு சமூகம் தனக்குள் தானே மோதிக் கொண்டிருக்குமா? தானே தனக்கு எதிராக வழக்கு போட்டுக் கொண்டிருக்குமா? கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான தமிழ் அரசியலை தொகுத்து பார்த்தால் என்ன தெரிகிறது?

தமிழ் மக்கள் ஏன் தங்கள் அரசியல் இலக்குகளை வெற்றி கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்? செழிப்பான ஒரு கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு சமூகம் ஏன் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக வெற்றிபெற முடியாத ஒரு சமூகமாகக் காணப்படுகிறது?

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் 1985 இல் தொடங்கி 2009 வரையிலுமான 24 ஆண்டு கால பகுதிக்குள் ஒரு கருநிலை அரசு நிலவியது. பின்னர் 2009இல் அதுவும் தோற்கடிக்கப்பட்டது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படைத்துறை வெற்றிகளுக்கும் அப்பால் தமிழ்மக்கள் தங்கள் இறுதி இலக்குகளை அடைய முடியாத மக்களாகவே தொடர்ந்தும் காணப்படுகிறார்கள்.

கடந்த மாதம் வட்டுக் கோட்டை தீர்மானத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு நினைவு கூறப்பட்டது.கடந்த 50 ஆண்டுகளிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து போராடிய தமிழ் மக்கள் அத்தீர்மானத்தின் இறுதி இலக்கை அடைய முடியவில்லை.வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய மிதவாத தலைவர்களில் ஒரு பகுதியினர் இயற்கை மரணமடைந்தார்கள். ஒரு பகுதியினர் கொல்லப்பட்டார்கள். அந்தத் தீர்மானத்தை முன்வைத்து பெறப்பட்ட மக்களானையைப் பின்பற்றி ஆயுதம் ஏந்திப் போராடிய இயக்கங்களின் பிரதான தலைவர்கள் யாருமே இப்பொழுது பூமியில் இல்லை.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து,கடந்த 50 ஆண்டுகளையும் தொகுத்து ஆராய்ந்தால், தமிழ்த் தேசிய அரசியலின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் அதற்குரிய காரணங்களையும் கற்றுக்கொள்ளலாம். கல்விச் செழிப்பு மிக்க ஒரு சமூகம், உலகம் வியக்கும் சான்றோர்களை உற்பத்தி செய்த ஒரு சமூகம், முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு போராட்டத்தை நடாத்திய சமூகம், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அதன் அரசியல் இலக்குகளை முழுமையாக அடைய முடியாது தடுமாறுகிறது.இந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சமூகத்தில் உள்ள சான்றோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் படைப்பாளிகளுக்கும் உண்டு.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>