ரஷியாவின் ராணுவ எல்லைப் பகுதியைப் பிரிக்க முயன்றால் நேட்டோ மீது அணுஆயுத தாக்குதல் நடத்தப்படுமென புதின் மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ‘நேட்டோ’ ராணுவக் கூட்டமைப்பு அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, ஐரோப்பிய நாடுகளில் ரஷிய உளவு அமைப்புகள் திட்டமிட்ட வன்முறைகளையும், சதி வேலைகளையும் செய்து வருவதாக நேட்டோ நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இத்தகைய கடுமையான மோதலுக்கு இடையே, சர்வதேச அரங்கையே உலுக்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் தரப்பிலிருந்து ஒரு அதிரடி அணு ஆயுத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பால்டிக் கடல் பகுதியில், போலந்து மற்றும் லிது வேனியா நாடுகளுக்கு இடையே ரஷியாவின் ‘கலினின்கிராட்’ என்ற முக்கிய ராணுவ எல்லைப் பகுதி அமைந்துள்ளது.
முற்றிலும் ராணுவமயமாக்கப்பட்ட இந்தத் தனி நிலப்பகுதியை, ரஷியாவின் பிற பகுதிகளில் இருந்து துண்டித்து தனிமைப்படுத்த நேட்டோ நாடுகள் திட்டமிட்டு வருவதாக ரஷியா கருதுகிறது. இது தொடர்பாக நேட்டோ அமைப்புக்கு ரஷியா அனுப்பியுள்ள ரகசிய கடிதத்தில், “எங்கள் எல்லையோரப் பகுதியான கலினின்கிராட்டை பிரிக்க முயன்றால், அணுஆயுதங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படைகளையும் பயன்படுத்தத் தயங்கமாட்டோம்” என்று ரஷியா பகிரங்கமாக மிரட்டியுள்ளது. பனிப்போர் காலத்துக்கு பிறகு ரஷியா விடுத்துள்ள இந்த மிரட்டலுக்கு நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். “நேட்டோ என்பது ஒரு தற்காப்புக் கூட்டமைப்பு மட்டுமே தவிர, யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை. ரஷியா தனது தேவையற்ற அணு ஆயுத மிரட்டல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நேட்டோவை புதினால் ஒருபோதும் வெல்ல முடியாது என்பதால் இந்த வெற்று மிரட்டலை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான வார்த்தைப் போரினால், எந்த நேரத்திலும் ஒரு நேரடி அணு ஆயுதப் போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளன.