நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, தாயகம் கொண்டுவர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், 700-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் எனும் பெருந்துயரச் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். திடீரென பெருக்கெடுத்த ஆற்று வெள்ளம் இருகரைகளில் இருந்த வீடுகளையும், அவற்றில் வசித்த மக்களையும், செயற்கை கட்டுமானங்களையும் மூழ்கடிக்கும் காட்சிகள் நெஞ்சைப் பதறச்செய்கிறது. எத்தனை அறிவியல் வளர்ச்சியை ஏற்படுத்தி, விண்வெளிக்கே சென்றாலும் மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை அவ்வப்போது இயற்கை நமக்கு உணர்த்தி வருகிறது. புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட காலநிலை மாற்றம், திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டி வரும் உலகின் மிகப்பெரிய அணை கட்டமைப்பிற்காக அழிக்கப்பட்ட மரங்களால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகள் என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்களை இயற்கை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படி பார்த்தாலும் இயற்கைக்கு எதிராக மனிதன் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் மனித இனத்திற்கு எதிராகத் திரும்பும், பேரழிவை ஏற்படுத்தும் என்பதை அவ்வப்போது நிகழும் இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் மூலம் நமக்கு உணர்த்தி வருகிறது.
மலையும், மரமும், மணலும், மழையும், ஆறும், அருவியும், காடும், கடலும் நன்றாக இருந்தால்தான் மனித இனம் நன்றாக இருக்க முடியும் என்ற பேருண்மையை, வளர்ச்சி என்ற பெயரில் அவற்றை அழித்து தொழிற்சாலைகளையும், வானூர்தி நிலையங்களையும் அமைக்க முயலும், நாட்டின் ஆட்சியாளர்கள் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையென்றால் அதற்காக மிகப்பெரிய விலையை உலகில் மானுட இனம் கொடுக்க நேரிடும். நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, தாயகம் கொண்டுவர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.