பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு

Share

பயங்கரவாதத் தடைச் சட்டம்

ந.லோகதயாளன்.

இலங்கையில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

இதற்குரிய முதற்கட்ட மற்றும் சட்டரீதியான ஏற்பாடுகளை நீதி அமைச்சு தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் சபையில் வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு மிக முக்கியமான அறிவிப்பை விடுத்தார்.

அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றியதாவது:

“எமது நாட்டின் வரலாற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்புகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். நீண்டகாலமாகவே இந்த நியாயமான கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் எமக்கு விடுக்கப்பட்டு வருகின்றது.

மக்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கைக்கு மதிப்பளித்து, இந்த வருடத்துக்குள்ளேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூல வரைவுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகளை நீதி அமைச்சு தற்போது உத்தியோகபூர்வமாகத் தயாரித்து வருகின்றது.

அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எழக்கூடிய பாதுகாப்புத் தேவைகள் குறித்தும் நாம் ஆராய்ந்துள்ளோம். இதற்கமைய, பாரிய குற்றக் கும்பல்கள் மற்றும் திட்டமிட்ட ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விபரீதமான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும், தடுப்பதற்காகவும் சர்வதேசத் தரத்துக்கு இணையான புதிய சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும்.

நாம் கொண்டுவரவுள்ள இந்தப் புதிய சட்டமானது, மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை முழுமையாக உறுதிப்படுத்தும் வகையிலேயே மிகத் துல்லியமாக வடிவமைக்கப்படும். இது எமது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை நிச்சயம் பாதுகாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது நாட்டின் சாதாரண மக்களை ஒடுக்குவதற்காகவோ, அவர்களது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவதற்காகவோ இத்தகைய கடுமையான சட்டங்களை எமது அரசு ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது, இனி பயன்படுத்தப் போவதுமில்லை.” – என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>