பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடம் ‘அடியோடு’ இரத்து!

Share

– ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க 2 மாதங்களில் புதிய சட்டமூலம் வருகின்றது என்கின்றார் பிரதி அமைச்சர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதில் ஆச்சரியமேதுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் 1ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

“அரசியல் அநாதைகளாக இருந்தவர்கள் தற்போது சுரேஷ் சலேவின் விவகாரத்தைக் கையில் எடுத்து, அவருக்குச் சார்பாகப் பேசி வருகின்றார்கள். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி ஒரு தரப்பினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்காக விசாரணைகளை நிறுத்திவிட முடியாது. அவ்வாறு செய்தால், சட்டத்தின் மீது நாட்டு மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பார்கள்? சட்டத்தின் முன் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படமாட்டாது.

சுரேஷ் சலேவுக்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், மக்களுக்குப் போலியான விவரங்களைக் கூறாமல் நீதிமன்றத்தை நாடலாம். அங்கு தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து நீதியைப் பெற்றுக்கொள்ளலாம். இதில் எங்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும். தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மட்டுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டிருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களும் போதைப்பொருள் வர்த்தகமும் இன்னும் நீடிக்கவே செய்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

இதற்கமையவே, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கவும் அரசு கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.” – என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>