பயங்கரவாத தடைச்சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வலி கிழக்கு பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம்

Share

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமும் வேண்டாம் புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

26ம் திகதி அன்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கொண்டு வந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதில் அரசினால்கொண்டுவரப்படவுள்ள அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது இந் நாட்டில் மக்களை ஒடுக்குகின்ற மனித உரிமைகளை நிராகரிக்கின்ற காட்டுமிராண்டிச் சட்டம். அச் சட்டம் உள்ளிட்ட மக்களை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்குகின்ற சட்டங்களை நீக்கவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று புதிய வடிவத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை முன்வைக்கின்றது. அடிப்படையில் இந் நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டதினால் தமிழ் மக்கள் சொல்லெணாத் துயங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டிலிருந்து எம்மை ஒடுக்குவதற்காக மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் அதிக அதிகாரங்களை வழங்குதல் மற்றும் சித்திரவதைகள் ஊடாக குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுதல், விசாரணையின்றித் தடுத்துவைத்தல் என அதிகமான அதிகாரங்களை குவித்துள்ள கீழ்த்தரமான சட்டமாகும். இனப்பிரச்சினையுள்ள நாட்டில் இனம்சார் எதிர்ப்புக்கொள்கையை நடைமுறைப்படுத்தவதற்கு அரசாங்கத்திற்கு சட்ட அங்கீகாரமளித்துள்ளது.

பயங்கரவாதம் என்ற வரைவிலக்கத்திற்கு பரந்த அளவில் பொருள்கோடல் வழங்க புதிய சட்டம் முயற்சிக்கின்றது. ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள், ஊடக சுதந்திரம், கைதுசெய்பவர்களை நீதிமன்றங்களின் முன் நிறுத்தாமல் தடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றது. இந் நிலையில் எமது மக்கள் பிரதிநிதிகள் சபை பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் மாற்றுச்சட்டமும் வேண்டாம் என தீர்மானத்தினை முன்வைக்கின்றது. தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட இப் பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த சகல உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.

அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவர் சபையில் இருந்து வெளியேறியதுடன் சபையில் பிரசன்னமாகியிருந்த ஏனைய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

இந் நிலையில் 25 வாக்குகளால் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய சகல கட்சிகளினதும் ஆதரவுடன் இப்பிரேரனை நிறைவேறியமை குறிப்பிடத்தக்கது.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>