பரந்தூரில் விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என்பதே மக்களின் நிலைப்பாடென வேல்முருகன் கூறியுள்ளார்

Share

பரந்தூர் மக்களின் போராட்டத்தை, சிலர் தவறாக புரிந்து கொள்ள முயல்கின்றனர். அவர்கள் விமான நிலையத்திற்கு மாற்றாக சிப்காட் கேட்கவில்லை. விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடு. எங்கள் விளைநிலங்களை பறிக்காதீர்கள். எங்கள் நீர்நிலைகளை அழிக்காதீர்கள். எங்கள் தலைமுறைகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்காதீர்கள் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கை. விவசாயியின் நிலம் என்பது வெறும் சொத்து அல்ல. அது அவர்களது உயிர், அடையாளம், வரலாறு, எதிர்காலம். அந்த மண்ணில் அவர்களது முன்னோர்களின் வியர்வையும், அடுத்த தலைமுறையின் நம்பிக்கையும் புதைந்திருக்கிறது. அந்த மண்ணை தொழிற்சாலைகளுக்காகவோ, விமான நிலையங்களுக்காகவோ மாற்றுவது வளர்ச்சி அல்ல. மக்களை அவர்களின் வேர்களில் இருந்து பிடுங்கி எறியும் அநீதியாகும். ஏற்கனவே விமான நிலையம் என்ற பெயரில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அச்சத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் வாழ்ந்து வரும் பரந்தூர் பகுதி விவசாயிகளுக்கு, தற்போது சிப்காட் அமைக்கும் திட்டம் குறித்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு திட்டத்திற்கு பதிலாக மற்றொரு திட்டத்தைக் கொண்டு வந்து மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்க, எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் அனைவரின் கோரிக்கை என்பது, விவசாயம் செய்யும் நிலங்களும், வாழும் கிராமங்களும் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் விரும்பாத எந்தத் திட்டமும் அவர்கள்மீது திணிக்கப்பட கூடாது என்பதுதான். அதே நேரத்தில், எங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே தரமான பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்கள் அமைத்துத் தாருங்கள். அனைத்து நவீன வசதிகளும் கொண்ட அரசு மருத்துவமனைகளை உருவாக்கித் தாருங்கள். எங்கள் பகுதிகளின் உயிர்நாடியாக விளங்கும் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி, புனரமைத்து, பாதுகாத்து தாருங்கள். விவசாயத்தை பாதுகாக்கும் பாசன வசதிகளை மேம்படுத்துங்கள். இயற்கையோடு இணைந்து, தற்சார்பான பொருளாதாரத்துடன், எங்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கி தாருங்கள் என்பதே மக்களின் உண்மையான எதிர்பார்ப்பு. வளர்ச்சி என்ற பெயரில் மக்களை இடம்பெயர வைப்பது எளிது. ஆனால் மக்கள் வாழும் இடத்திலேயே கல்வி, மருத்துவம், குடிநீர், பாசனம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே உண்மையான வளர்ச்சி. அதுவே சரியான சமூகநீதியின் அடையாளம். எனவே, பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் இந்த நியாயமானப் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து உறுதுணையாக நிற்கும். மக்களின் வாழ்வுரிமை, விவசாய உரிமை, நில உரிமை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் இந்த அறப்போராட்டத்தில், இறுதி வரை களத்தில் நிற்போம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>