பாட்டும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

Share

தடை செய்யப்பட்ட ஒர் இயக்கத்தை மகிமைப்படுத்தும் பாடல்களைப் பாடியதற்காக சங்கீத்சன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. ஆனால் அவரைக் கைது செய்ததன்மூலம் அரசாங்கம் அவரை முன்பைவிட அதிகமாகப் பிரபல்யப்படுத்தியிருக்கிறது. குறைந்தளவு பிரபல்யத்தோடு பாடி வந்த ஒரு பாடகரைக் கைது செய்ததன்மூலம் அரசாங்கம் அவரை இலங்கை முழுவதும், அதற்கப்பாலும் பிரபல்யப்படுத்தியிருக்கிறது. இதை அதன் தர்க்கபூர்வ வார்த்தைகளில் சொன்னால், அவர் பாடிய அரசியலையும் கவனிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது; பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. அதன் தக்கபூர்வ விளைவாக மகிமைப்படுத்தியிருக்கிறது. எந்த அரசியலை மகிமைப்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டாரோ,அதே அரசியலை அவருடைய கைது பிரபல்யப்படுத்தியிருக்கிறது; கவனிப்புக்குரியதாக மாற்றியிருக்கிறது; மகிமைப்படுத்தியிருக்கிறது


விடுதலைப் புலிகள் இயக்கத்தை மகிமைப்படுத்தும் விதத்தில் ராப் பாடலைப் பாடியதற்காக கிளிநொச்சியில் வசிக்கும் பாடகர் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை அவர் விடுவிக்கப்படவில்லை. அவர் இதற்கு முன்னரும் இதுபோன்ற பாடல்களை உருவாக்கிப் பாடியிருக்கிறார். அண்மையில் வவுனியாவில் நடந்த வாகீசனின் இசை நிகழ்ச்சியில் சங்கீத்சன் பாடியிருக்கிறார். அவருடைய பாடல் தமக்குப் பிரச்சினையாக வரலாம் என்று கருதிய ஏற்பாட்டாளர்கள் அவரைப் பாட விடாமல் தடுத்திருக்கிறார்கள். மேலும்,பரந்தனில் உள்ள அரச புலனாய்வுத் துறை சங்கீத்சனை ஏற்கனவே எச்சரித்திருக்கிறது.பின்னர் போலீஸ் கைது செய்திருக்கிறது.

ராப் பாடல் எனப்படுவதே எதிர்ப்பு வடிவந்தான். ராப் மரபு எனப்படுவது ஒடுக்கப்பட்டவர்களின் குரலை;குரலற்றவர்களின் குரலை; தடை செய்யப்பட்டவர்களுக்கான நீதியைப் பிரதிபலிப்பது.

தடை செய்யப்பட்ட ஒர் இயக்கத்தை மகிமைப்படுத்தும் பாடல்களைப் பாடியதற்காக சங்கீத்சன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது.ஆனால் அவரைக் கைது செய்ததன் மூலம் அரசாங்கம் அவரை முன்பைவிட அதிகமாகப் பிரபல்யப்படுத்தியிருக்கிறது. குறைந்தளவு பிரபல்யத்தோடு பாடி வந்த ஒரு பாடகரைக் கைது செய்ததன் மூலம் அரசாங்கம் அவரை இலங்கை முழுவதும், அதற்கப்பாலும் பிரபல்யப்படுத்தியிருக்கிறது. இதை அதன் தர்க்கபூர்வ வார்த்தைகளில் சொன்னால், அவர் பாடிய அரசியலையும் கவனிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது; பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. அதன் தக்கபூர்வ விளைவாக மகிமைப்படுத்தியிருக்கிறது. எந்த அரசியலை மகிமைப்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டாரோ, அதே அரசியலை அவருடைய கைது பிரபல்யப்படுத்தியிருக்கிறது; கவனிப்புக்குரியதாக மாற்றியிருக்கிறது; மகிமைப்படுத்தியிருக்கிறது

அவர் கைது செய்யப்பட முன் அவருடைய பாடல்களைப் பகிர்ந்தவர்கள், அவரைக் கவனித்தவர்கள் ஒப்பீட்டளவில் குறைவு. தமிழ்ப் பகுதிகளிலேயே அவரைக் கவனித்தவர்கள் குறைவு. இப்பொழுது கைது செய்யப்பட்டதால் அவர் நன்கு தெரிய வந்துவிட்டார்.எனவே அவரைக் கைது செய்ததன் மூலம் அரசாங்கம் அவரை அதிகம் கவனிப்புக்குரியவராக பிரபல்யப்படுத்தி விட்டது என்றுதான் கூற வேண்டும். அதாவது அரசாங்கம் எதைத் தடுக்க நினைத்ததோ, அது திமிறி கொண்டு மேலே வருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்த கவிஞர் மு.பொன்னம்பலம் புங்குடுதீவைச் சேர்ந்தவர். அவர் எழுதிய ஒரு கவிதையின் தலைப்பு “அதிகாரம் புரியாத சமன்பாடு” என்பதாகும். “அடக்குமுறைதான் விடுதலையைப் பிரசவிக்கும் மருத்துவிச்சி” என்று மு.பொன்னம்பலம் கூறுகிறார். இது இந்தப் பாடகரின் விடயத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?

அண்மை ஆண்டுகளாக ராப் பாடல்களைப் பாடுவோர் எண்ணிக்கை ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கிழக்கிலும் வடக்கிலும் குறிப்பிடத்தக்க பாடகர்கள் தோன்றி விட்டார்கள். எனினும் இவர்கள் எல்லாருமே புகழடைந்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது. கைது செய்யப்படும் வரையிலும் சங்கீத்சனும் அப்படித்தான்.ஆனால் இப்பொழுது அவர் நன்கு தெரிய வந்துவிட்டார்.

அவரைக் கைது செய்ததன் பின்னணியில் வேறு உள்நோக்கங்கள் இருக்கலாம். அவர் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் கொழும்பில் இரண்டு செய்திகள் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களை அதிகம் கோபத்துக்கு உள்ளாக்கியிருந்தன. முதலாவது செய்தி, முன்னாள் படைப்புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலே சம்பந்தப்பட்ட செய்தி. ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சுரேஷ் சாலே சிறைச்சாலையில் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவருக்கு ஒழுங்காக உணவு கொடுக்கப்படுவதில்லை என்றும்,உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவருடைய மகன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அவருடைய மனைவியும் தன் கணவனின் உடல்நிலை, மனநிலை தொடர்பாக கவலை தெரிவித்திருந்தார். உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள் சுரேஷ் சாலேயை வைத்து இனவாதத்தை உருவேற்றத் தொடங்கி விட்டார்கள். இது முதலாவது செய்தி. இரண்டாவது செய்தி, கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்திருப்பதாக வெளிவந்த ஒரு செய்தி. இந்த இரண்டு செய்திகளும் யுத்த வெற்றிவாதிகள் மத்தியில் மத்தியில் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கின்றன.அரசாங்கத்துக்கு எதிராக சிங்கள பௌத்த உணர்வுகளைத் தூண்டுவதற்கு எதிர்க்கட்சிகள் இந்த இரண்டு செய்திகளையும் பயன்படுத்துகின்றன.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்தான் கிளிநொச்சியைச் சேர்ந்த ராப் பாடகரான சங்கீத்சன் கைது செய்யப்பட்டார். அதுவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதுவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மகிமைப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டார். எனவே சுரேஷ் சாலே, கோத்தபாய தொடர்பாக சிங்கள கடும்போக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கொதிப்பான மனோநிலையைத் தணிக்கும் உள்நோக்கத்தோடு அரசாங்கம் கிளிநொச்சியில் சங்கீத்சனைக் கைது செய்திருக்கலாம்.

சங்கீத்சனைக் கைது செய்ததன் மூலம் அரசாங்கம், ஏனைய எல்லாப் பாடகர்களுக்கும் ஒர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. ஆயுதப் போராட்ட கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட தாயகப் பாடல்கள் என்று அழைக்கப்படுகின்ற பாடல்களை இனிப் பாட முடியாது என்பதுதான் அந்த எச்சரிக்கை.கடந்த பல மாதங்களாக தாயகத்தில் நடக்கும் இசை நிகழ்வுகளில் குறிப்பாக ஆலய இசை நிகழ்வுகளில் தாயகப் பாடல்கள் பாடப்பட்ட வருகின்றன.

ஆலய நிகழ்வுகளில் மட்டுமல்ல,அரசியல் நிகழ்வுகளிலும் தாயகப் பாடல்கள் அண்மை மாதங்களாக பாடப்பட்டு வந்தன. குறிப்பாக தாயகப் பாடல்களை முன்பு பாடிய பாடகர்களில் ஒருவராகிய பார்வதிநாதசிவம் அண்மையில் சில மேடைகளில் தனது புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். குறிப்பாக வீரசிங்க மண்டபத்தில் நடந்த ஒரு மகளிர் தின நிகழ்விலும் அதன்பின் யாழ்ப்பாணத்தில் டில்கோ ஹோட்டலில் நடந்த “போராளிகள் நலன்புரி அமைப்பின்” ஒன்று கூடலிலும் அவர் தனது பாடல்களைப் பாடினார். டில்கோவில் நடந்த அந்த நிகழ்வில் அவர் மட்டுமல்ல ஏற்கனவே தாயகப் பாடல்களைப் பாடிய வேறு சில பாடகர்களும் பாடினார்கள்.சாந்தனின் மகனும் பாடினார்.அந்த நிகழ்வில் இசையமைப்பாளர் கண்ணன், ரங்கன், பார்வதிநாசிவம், சாந்தனின் மகன் உட்பட இசைஞர்களுக்கும் பாடகர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டது.

இவ்வாறாக கடந்த சில மாதங்களாக தாயகத்தில் தாயக எழுச்சி பாடல்களை மேடைகளில் பாடும் ஒரு போக்கு படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்தப் போக்கை இப்படியே விட்டால் ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்ட எல்லாப் பாடல்களும் மேடைக்கு வந்துவிடும் என்று அரசாங்கம் உஷாரடைந்திருக்கலாம்.

மாவீரர் நாட்களின்போதும் திலீபனின் நினைவு நாட்களின்போதும் தடை செய்யப்பட்ட அமைப்பை நினைவுகூரும் விடயங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை உண்டு. அதற்குள் ஒருதொகுதி பாடல்களும் அடங்கும். ஆனால் அண்மைக் காலங்களில் வாகீசனைப் போன்றவர்கள் மறைமுகமாக இறந்த காலமொன்றைப் போற்றும்; மகிமைப்படுத்தும் ராப் பாடல்களின் மூலம் பிரபல்யமானார்கள். ஆலய நிகழ்வுகளிலும் அரசியல் நிகழ்வுகளிலும் தெரிந்தெடுக்கப்பட்ட தாயகப் பாடல்களைக் கேட்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் தமக்கு ஆபத்துக் குறைவு என்று ஒருதொகுதி பாடகர்கள் கருதியிருக்கலாம்.

அவ்வாறு கருத்தியதற்கு அரசாங்கமும் பொறுப்பு.எப்படியென்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது என்பிபியின் தமிழ் வேட்ப்பாளர்களில் சிலர் மறைமுகமாக விடுதலிப்புலிகள் அமைப்பைப் போற்றும் பாடல்களைத் தயாரித்ததாக அவதானிக்கப்பட்டுள்ளது. அதை மனோகணேசன் அண்மையில் சமூக ஊடக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளாக இருப்பவர்களில் சிலர் அவ்வாறான பாடல்களை பிரச்சாரக் கவர்சிக்காகப் பயன்படுத்தலாம் என்றால் அந்த வகைப் பாடல்களை தாமும் ஏன் பாடக்கூடாது என்று பாடகர்கள் யோசித்திருக்கலாம். அதனாலும் அண்மைக் காலங்களில் கோவில் நிகழ்வுகளிலும் ஏனைய மேடைகளிலும் தாயகப் பாடல்களைக் கேட்கக்கூடியதாக இருந்தது.இதனால் அரசாங்கம் உஷாரடைந்து விட்டது.

இதன் விளைவாக புலனாய்வுத் துறை சங்கீத்சனை எச்சரித்திருக்கிறது. அதன்பின் அண்மையில் உரும்பிராயில் ஒர் ஆலய நிகழ்வில், மேடையில், தாயகப் பாடல் இசைக்கப்படுக்கையில் போலீஸ் அதைத் தடுத்து நிறுத்தியது. அந்தப் பாடலைப் பாடியவர் சாந்தனின் மகனாகும். அவ்வாறு தடுக்கப்பட்ட சில வாரங்களின் பின் சங்கீத்சன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

எனவே சங்கீத்சனைக் கைது செய்தமை என்பது திடீரென்று நடக்கவில்லை. அதற்கு ஒரு தொடர்ச்சி உண்டு. விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் பாடல்களைப் பகிரங்கமாகப் பாட அனுமதித்தால் அது அந்த இயக்கத்தை மீளுருவாக்குவதில் முடியலாம் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அரசாங்கத்தின் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட தமிழர்கள் உருவாக்கிய பாடல்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மகிமைப்படுத்தும் வரிகள் காணப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல,மைத்திரியின் கட்சியும் அதைச் செய்தது. அது நடந்தது கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்.அதில் யாழ்ப்பாணத்தில் அதிகளவு வாக்குகளைப் பெற்ற அங்கஜன் தனது தேர்தல் பிரச்சார தேவைகளுக்காக தாயகப் பாடல்கள் சிலவற்றை தெரிந்து எடுத்துப் பயன்படுத்தியது அவதானிக்கப்பட்டது. குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் வாக்காளர்களைக் கவர்வதற்கு அவர் அந்தப் பாடல்களைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அதாவது தென்னிலங்கை மையக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் தமது தேர்தல் தேவைகளுக்காக, வாக்குகளைத் திரட்டும் பிரச்சார உத்தியாக ஆயுதப் போராட காலப் பாடல்களைப் பயன்படுத்துகின்றார்கள். அல்லது ஆயுதப் போராட்டத்தை மறைமுகமாகப் போற்றும் பாடல்களைத் தயாரிக்கின்றார்கள். அதைப் போன்ற பாடல்களை ஆலய இசை நிகழ்ச்சிகளில் பாடும்போது, இப்பொழுது அதைத் தடுக்கிறார்கள்; சங்கீத்சனைக் கைது செய்தார்கள்.

அதாவது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதை பயன்படுத்தலாம் என்று தென்னிலங்கை மையக் கட்சிகள் நம்புகின்றன. இதில் உள்ள கொடுமை என்னவென்றால், சிங்கள பௌத்த கட்சிகள் மட்டுமல்ல, சில தமிழ்த் தேசிய அரசியல் வாதிகளும்கூட ஆயுதப் போராட்ட நினைவுகளைத் தமது தேர்தல் வெற்றிகளுக்காகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது கடந்த 17 ஆண்டுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எந்த அரசியலை வைத்து வாக்குகளைத் திரட்டுகிறார்களோ, அந்த அரசியலுக்கு அவர்கள் உண்மையாகவும் விசுவாசமாகவும் இல்லை என்பதைத்தான் கடந்த 17 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. தமிழ்த் தேசியவாத அரசியலைப் பேசும் அரசியல் வாதிகளில் சிலரே அவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் நினைவுகளை தேர்தல் தேவைகளுக்காகத் துப்பிரயோகம் செய்யலாம் என்றால், அந்த உதாரணத்தை சிங்கள பௌத்த கட்சிகளும் பின்பற்றும். அதுதான் கடந்த 17 ஆண்டுகளிலும் நடந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் அதைத்தான் செய்தது.

இவ்வாறு தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகள் சிலராலும், தென்னிலநகைக் கட்சிகளாலும் அந்தப்பாடல்கள் தேர்தல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகையில் அது ஒரு விவகாரமாக சட்டப்பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் அதையே கோவில் மேடைகளில் பாடும்போதும் சமூக ஊடக வலைத்தளங்களில் பகிரும்போதும் அது ஒரு சட்டப்பிரச்சினையாக மாறுகிறது.பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் அடித்தளமாகக் காணப்படும் ஜேவிபி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்று கேட்டுத் தமிழ்க் கட்சிகளோடு இணைந்து போராடியிருக்கிறது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்கப்போவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளையெல்லாம் அவர்கள் மறந்து விட்டார்கள். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை, பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றன அகற்றப்படும் அறிகுறிகள் தெரியவில்லை. மட்டுமல்ல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகளும் தொடர்கின்றன. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து 21 மாதங்களாகி விட்டன. தமிழ் மக்களுக்கு அவர்கள் காட்டும் மாற்றம் இதுதானா?

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>