பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் முதன்முறையாக இலங்கைப் பெண் கடற்படை அதிகாரிகள் கைது

Share

போரின் இறுதிக்கட்டத்தில் திருகோணமலை பகுதியில் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தமிழ்ப் பெண்கள், கிழக்கு பிராந்தியத்தின் உயர் கடற்படை செயற்பாட்டு தலைமையகத்தில் இருந்த நிலத்தடி சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டு கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெண் கடற்படை அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நபர்களைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சித்திரவதைகளை மேற்கொண்டு காணாமலாக்கிய குற்றச்சாட்டில் கடற்படை பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

திருகோணமலை, கிண்ணியா வீதியில் உள்ள பாலையூற்று பகுதியில் வசித்து வந்த உறவுமுறைச் சகோதரிகளான மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இருவரும் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான கன்சைட் நிலத்தடி சிறையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் லெப்டினன் கமாண்டர் கோதாகொட ஹேவாவிதாரண தீபிகா சந்தமாலி மற்றும் இளநிலை அதிகாரி மிஹிந்துகுலசூரியகே அருணி தினூஷா காவுஸ் ஆகிய இரு கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு அமைய, இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்துள்ளன. மேலும், அந்தக் காலப்பகுதியில் குறித்த பெண் அதிகாரிகளிடம் பல சந்தர்ப்பங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

நீதவானிடம் இரகசிய வாக்குமூலம்

தமிழ்ப் பெண்கள் இருவரையும் கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் சில கடற்படை அதிகாரிகளும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

“மேரி டெல்சியா மற்றும் தேன்மொழி ஆகிய இருவரும் 2008.05.13 அன்று இந்த வழக்கின் 6, 7, 13 மற்றும் 14 ஆம் இலக்க சந்தேகநபர்கள் மற்றும் சந்தேகநபர்களான பெண்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், இதுவரை அந்த இரு பெண்களும் காணாமல் போயுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனுடன் கடற்படையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குறித்த இரு பெண்களும் கன்சைட் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது,” என 2018 ஆம் ஆண்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாட்சியாளரின் பெயர் குறிப்பிடப்படாமல் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களான கடற்படை அதிகாரிகள் மில்ல விதானச்சிகே கோசல சமிந்த மற்றும் பொல்வத்த விதானலாகே சம்பத் ஜனக குமார ஆகியோராவர்.

தமிழ் பெண்கள் இருவரும் கன்சைட் நிலத்தடி முகாமின் சிறை அறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களை தினூஷா காவுஸ் மற்றும் தீபிகா சந்தமாலி ஆகியோரே தடுத்து வைத்திருந்ததாகவும், அப்போது தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத கைதி ஒருவரும் சாட்சியமளித்துள்ளதாக குற்றப் புலனாய்வாளர்கள் திருகோணமலை நீதவானிடமட சமர்ப்பித்துள்ள மற்றுமொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் கண்ட சாட்சி

“தமிழ்ப் பெண்கள் இருவர் அங்கு இருந்ததாகவும், அந்த இருவரும் அக்கா மற்றும் தங்கை என குறிப்பிடப்பட்டதாகவும், அவர்கள் தனித்தனியான சிறை அறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லொக்கு குமார, பொடி குமார, ரத்நாயக்க லசந்த, ரணசிங்க சேர், சின்னா, முரளி, காமினி, பண்டார ஆகியோரும், தர்ஷன சேர், அபேகோன், அமரசிங்க, உபுல் ஆகியோரும், பெண் கடற்படை அதிகாரிகளான சந்தமாலி மற்றும் காவுஸ் ஆகியோரும் அந்த சந்தேகநபர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தமாலி மற்றும் காவுஸ் ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகவும், மேற்குறிப்பிடப்பட்ட இரு பெண்களும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சிறை அறைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படவில்லை என்றும்…” அந்தக் கைதி வழங்கியுள்ள நீண்ட வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த இரு தமிழ் பெண்களின் சகோதரர்கள் மற்றும் சில உறவினர்களும் அதே காலப்பகுதியில் கன்சைட் நிலத்தடி சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரவதை முகாமின் விபரங்கள்

இந்த இரண்டு கடற்படை பெண் அதிகாரிகளும், கன்சைட் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்த கமாண்டர் (ஓய்வுபெற்ற) ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்கவின் கீழ் பணியாற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரது உத்தரவின் கீழ் இயங்கிய கடற்படையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால், கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து கப்பம் பெறுவதற்காக கடத்திவரப்பட்ட தமிழர்களையும், போர்க்காலத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களையும் காவலில் வைத்துப் பாதுகாக்கும் பணி இந்த இரு பெண் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கன்சைட் நிலத்தடி சிறைகளை கொண்ட வளாகம் தொடர்பில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, இந்த சந்தேகநபர்களான பெண் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மேலும் பல குற்றச் செயல்கள் மற்றும் சில நபர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியமான ஒரு சம்பவமாக, அலவ்வ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் அலவ்வ வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2010 ஜூலை 26 ஆம் திகதி அதிகாலை காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்திருந்த, கேகாலை மல்வத்த கந்த, எகிரியகல பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான கனேராளாலகே சாந்த சமரவீர தொடர்பான விசாரணை காணப்படுகிறது.

அவர் வைத்தியசாலையில் இருந்தபோது சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கடற்படைக் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், கன்சைட் நிலத்தடி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் பல்வேறு சாட்சியங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

போரின் இறுதிக் காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தந்தை மகன் நால்வர் உள்ளிட்ட பதினொரு ஆண்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவமும், அவர்கள் கன்சைட் சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த குற்றச்செயல் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளவர்களில் முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஆகியோரும் அடங்குகின்றனர்.

பெண் கடற்படை அதிகாரிகளின் பாலியல் சித்திரவதை

16 ஆண்டுகளுக்கு முன்னர் சாந்த சமரவீர காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வாரம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அருணி தினூஷா காவுஸ் மற்றும் தீபிகா சந்தமாலி ஆகிய இரு பெண் கடற்படைஅதிகாரிகளும், கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் சிறப்பு புலனாய்வுப் பணிப்பாளருமான கமாண்டர் (ஓய்வுபெற்ற) ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க, கமாண்டர் சுமித் ரணசிங்க உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து மேலும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, குற்றப் புலனாய்வு விசாரணைகள் குறித்து அறிந்த, தனது பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களான குறித்த இரு பெண் அதிகாரிகளும், தங்களை கன்சைட் நிலத்தடி சித்திரவதை முகாமின் சிறைகளிலிருந்து வெளியே அழைத்து வந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், ‘சரத்தை கழற்றி, சுயஇன்பத்தில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி, ‘கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கும் அவமானத்திற்கும்’ உள்ளாக்கியதாகவும் கைதிகளின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்களை மேற்கோள்காட்டி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>