”இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தற்போது ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 3ஆம் தரப்பிடம் சரணடைய விரும்பினார்,அவரை வடக்கு முதலமைச்சராக்க மஹிந்த ராஜபக்ச விரும்பினார் ” என்ற கட்டுக்கதையை தனது அரசியல் எதிரிகளான ராஜபக்சக்களுக்கு எதிராக அவிழ்த்து விட அதுவே ஒட்டுமொத்த தென்னிலங்கை அரசியல்வாதிகளையும் ”பிரபாகரன் இறுதிவரை போரிட்ட ஒரு வீரன்,சரணடையுமளவுக்கு அவர் கோழையல்ல”எனக் கூற வைத்துள்ளது”
கே.பாலா
விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும் இல்லாமல் இலங்கையில் எந்தவொரு சிங்களக் கட்சியோ சிங்கள அரசியல் தலைவரோ அரசியல் செய்ய முடியாது ,அரியணை ஏற முடியாது என்பது எழுதப்படாத விதி.அந்தளவுக்கு விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகவும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை பிரிவினைப் போராட்டமாகவும் சித்திரித்து இனவாதம் ,மதவாதம் மூலம் சிங்கள மக்களை உசுப்பிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் ஒரு இழி அரசியலைத்தான் இந்த சிங்கள அரசியல் கட்சிகளும் சிங்கள அரசியல் தலைவர்களும் அன்று முதல் இன்றுவரை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த இழி அரசியலின் ஒரு கட்டமாகவே தற்போது அரசியல் முகவரியற்று,இராணுவ மரியாதையுமற்று விரக்தி நிலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான இறுதிப்போரை வழிநடத்திய இலங்கை இராணுவத்தின் முன்னாள் இராணுவத்தளபதியும் தமிழ் மக்களை கொன்றொழித்ததற்கு நன்றிக்கடனாக 2010 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட எம்.பி.பதவியும் 2016 ஆம் ஆண்டு மைத்ரிபால சிறிசேன அரசில் அமைச்சர் பதவியும் வழங்கி அழகு பார்க்கப்பட்டவரும் பின்னர் 2020-08-05 – 2024-09-24வரை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யாக இருந்தவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு இலங்கை அரசியலில்தானும் இருக்கின்றேன் என்ற படத்தை கட்ட முற்பட்டுள்ளார்.
இறுதி யுத்தம் முடிந்து 17 வருடங்களுக்குப் பின்னர் அண்மையில் ஒரு ஊடக சந்திப்பை நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு வீடியோவை வெளியிட்டு,விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதலமைச்சர் பதவி வழங்க ராஜபக்சக்கள் திட்டமிட்டதாகவும் பிரபாகரன் 3 ஆம் தரப்பு ஒன்றிடம் சரணடையத் தயாராகவிருந்ததாகவும் கிளப்பி விட்டுள்ள புரளி தான் இன்று இலங்கை அரசியலில் சூடான விடயமாக பரபரப்பாகப் பேசப்படுவதுடன் அது தொடர்பிலான விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் மேலெழுந்துள்ளன.
கடந்த 18 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு வீடியோவை வெளியிட்டு கூறிய தகவல் இதுதான்.
”2009 மே 17ஆம் திகதி காலை, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .இதில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுப்புத் தெரிவித்ததுடன், ஒரு மூன்றாவது தரப்பிடம் மாத்திரமே சரணடைய விரும்புவதாகக் கூறினர். ஆனால், ராஜபக்சக்கள் அதனை ஏற்காது இராணுவத்திடமே சரணடையுமாறு வலியுறுத்தினர்.
இந்தச் சரணடைவுத் திட்டம் வெற்றியடைந்திருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் , பிரபாகரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருப்பார்.பிரபாகரன் தங்களிடம் சரணடைந்திருந்தால் அவரை வடக்கு மாகாண முதலமைச்சராக்கும் திட்டம் ராஜபக்சக்களிடம் இருந்தது அந்த நேரத்தில் நான் ன் சீனாவிற்குச் சென்றிருந்ததால் இந்தத் திட்டங்கள் குறித்து எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.இராணுவம் புலிகளை முற்றாக ஒழிப்பதற்கே திட்டமிட்டிருந்தது , அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் இராணுவத்திற்கு இருக்கவில்லை.விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்தமையினாலேயே, மே 19ஆம் திகதி அவர்களை முற்றாக ஒழிக்க இராணுவத்தால் முடிந்தது” என்பதுதான் அந்தத்தகவல்
இதனைக்கூறிய சரத் பொன்சேகா அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கும் இராணுவத்தளபதிகளில் ஒருவராக இருந்த சவேந்திர சில்வாவிற்கும் இடையில் 2009 மே 17ஆம் திகதி இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றின் காணொளியையும் இதன்போது அவர் ஆதாரமாக வெளியிட்டார்.இந்தக் காணொளியை பதிவு செய்த ஊடகவியலாளர் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அண்மையிலேயே இக்காணொளி தனக்குக் கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா எப்போதும் விடுதலைப் புலிகளின் தலைவரின் வீரத்தையும் அவரது உறுதியையும் நற்பண்புகளையும் ,அவர் விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்திய முறையையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினதும் போராளிகளினதும் ஒழுக்கத்தையும் பாராட்டியே கருத்துக்களை தெரிவித்து வந்தவர். அதுதொடர்பிலான சில உதாரணங்களைப் பார்ப்போம் .
சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. பிரபாகரன் எமது எதிரியாக இருந்தாலும், தப்பியோடாமல் இறுதி வரை சமரிட்டார்.அதற்குரிய கௌரவத்தை அவருக்கு நான் வழங்கி வருகின்றேன். போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை பிரபாகரன் போரிட்டார். எனவே, இந்த விடயத்துக்காக முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் பிரபாகரன் மீது எனக்கு எப்போதும் தனியான மரியாதை உள்ளது” என்றார்.
பிரபாகரன் மரணித்தது எவ்வாறு என்பது தொடர்பாக ,வன்னி இனப்படுகொலையின் பின்னான காலப்பகுதியில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும் பின்னர் ராஜபக்சக்களின் கைக்கூலியாகி தமிழினத் துரோகியானவருமான கருணா, ”பிரபாகரன் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்” எனக் கூறியிருந்தார்.ஆனால் பிரபாகரன் தற்கொலை செய்துகொள்ளவில்லை. தற்கொலை செய்யுமளவுக்கு பிரபாகரன் கோழையல்ல.போரில் இராணுவத்தின் மோட்டார் அல்லது பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என எக்ஸ்பிரஸ் நியூஸ் சேர்விஸ் என்ற இந்திய ஊடக முகவர் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
2022 ஆம் ஆண்டு சரத்பொன்சேகா சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யாக இருந்தபோது பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஈ.பி.டி.பி.யின் செயலாளரான அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா , விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று தெரிவித்தார் .ஆனால் இதனை மறுத்த சரத்பொன்சேகா ”இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடையவில்லை, அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரை போராடியே உயிரிழந்தார் .பிரபாகரனின் மரணத்தை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை.அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர். பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவர். எனினும், அவர் சிறந்த போர் வீரன். பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பின.அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்திருந்தன. எனினும், பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே மரணமடைந்தார் ”எனக்கூறினார்
இவ்வாறெல்லாம் கூறிய சரத் பொன்சேகாதான் தற்போது அரசியலில் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் , சிங்கள மக்களினால் மறக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அரசியல் புத்தொளி பெற பிரபாகரனையும் ராஜபக்சக்களையும் கையில் எடுத்து புதுக்கதைகளை கூறத்தொடங்கியுள்ளார். அந்தக் கதைகளில் தனது பரம வைரிகளான ராஜபக்சக்களை சிக்கலில் மாட்டிவிடவே அவர் தற்போது பிரபாகரன் 3 ஆம் தரப்பிடம் சரணடைய விரும்பினார். ராஜபக்சக்களிடம் சரணடைந்திருந்தால் அவர் இப்போது வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்திருப்பார் என்றெல்லாம் கூறத்தொடங்கியுள்ளார்.
ராஜபக்சக்களை மீண்டும் சிக்கலில் மாட்டி விடவே இறுதிப்போரின்போது பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, புலிகள் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தபோது சுடுமாறு உத்தரவிட்டதாக முன்னர் கூறிய சரத்பொன்சேகா தற்போது புலிகளை சரணடைய வைக்க ராஜபக்சக்கள் விரும்பியபோதும் இராணுவம் புலிகளை அழித்ததாக கூறுகின்றார். அத்துடன் யுத்த காலத்தில் கூட மஹிந்த ராஜபக்சவுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படவில்லை. அவ்வாறிருகையில் தற்போது அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் இல்லை என்கின்றார்.
மஹிந்த ராஜபக்சக்கள் மீது ஒருபோதும் புலிகள் தாக்குதல்கள் நடத்த விரும்பியிருக்கவில்லை . 2005ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதாக மஹிந்த கூறினார். அத்தோடு யுத்தத்தை நான் அனுமதிக்க மாட்டேன். யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது என்பதே மஹிந்த சிந்தனையில் காணப்பட்டது.எனவே விடுதலைப் புலிகளுக்கு மஹிந்த மீது எந்த கோபமும் இல்லை. 2005இல் விடுதலைப் புலிகளுக்கு தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அவர் பணமும் வழங்கியிருக்கின்றார்.மஹிந்தவுக்கு விடுதலைப் புலிகளுடன் ஆழமான தொடர்பு காணப்பட்டது. நாம் வேண்டாமென தடுத்த போதிலும் 2009 ஜனவரி 31ஆம் திகதி மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதன் போது இராணுவத்தின் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரபாகரன் உள்ளிட்டவர்கள் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் போர் நிறுத்தத்தை அறிவித்தார். என்று கூறியுள்ளார்
சரத் பொன்சேகாவின் இந்தக்கருத்து தென்னிலங்கையில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தான் ”பிரபாகரன் ஒருபோதும் சரணடைய விரும்பியிருக்கவில்லை”” பிரபாகரன் கோழையல்ல வீரன்”என சிங்கள இனவாதிகளே கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை அதை மறுத்தவர். சரத் பொன்சேகாவின் பேச்சு முன்னுக்குப் பின் முரணானது என முன்னாள்பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதியும் பக்கா இனவாதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூடக் கூறியுள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்த அறிக்கையால் தனது அரசியல் பிரதிபிம்பத்துக்கே களங்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில், கோத்தபாய ராஜபக்ச, புலிகள் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தபோது சுடுமாறு உத்தரவிட்டதாக கூறுகிறார்.ஆனால் இப்போது ,கோத்தபாய புலிகளை சரணடையச் சொல்லியபோது தான் அவர்களை அழித்ததாக தெரிவிக்கிறார். மேலும், விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச சரணடையுமாறு கூறியபோது தான் அவர்களை அழித்ததாக கூறுகிறார். பொன்சேகா காட்டிய வீடியோவில் ஷவேந்திர சில்வாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து அல்ல.அது வேறு ஒரு தரப்பின் பரிந்துரையாக இருக்கக்கூடும். வெளிநாட்டு தொடர்புகளை கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய முப்பது ஆண்டு யுத்தத்தின் இறுதியில் ‘சரணடைதல்’ என்பது ஒரு படைத் தளபதியின் மட்டத்தில் தீர்மானிக்கப்படக் கூடிய எளிய செயல் அல்ல அது அரசியல் மற்றும் சர்வதேச இடைதரகர்களின் உயர்மட்டத் தீர்மானமாகும்”என்றும் சரத் வீரசேகர கூறுகின்றார்
சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்துக்கள் தொடர்பில் விமர்சனம் வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வாளர் அஜித் பரக்கும் , ”சரத் பொன்சேகா கூறுவதைப் போன்று, பிரபாகரனை முதலமைச்சராக்க முடியாது. ஏனெனில் அவர் சரணடைந்து கைது செய்யப்பட்டிருந்தால், அவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனைகளை அனுபவிப்பதற்காக அவர் உடனடியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் பின்னணியில் உள்ள மனோநிலையை அவதானித்தால், அவரிடம் இன்றும் போர்க்குற்றங்களை இழைப்பதற்கான ஒரு தார்மீகத் தூண்டுதல் அல்லது போக்கு காணப்படுவதாகவே தெரிகிறது”என்கின்றார்
இதேவேளை முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே என்று ராஜபக்சக்களின் கட்சியான பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.”சரத் பொன்சேகா மக்களுக்காக அரசியல் செய்பவர் அல்லர் அவர் தனிப்பட்ட பகைமையைத் தீர்க்கும் அரசியலையே முன்னெடுத்து வருகின்றார். யுத்தம் நிறைவடையும் போது இராணுவத் தளபதியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே சரத் பொன்சேகாவை நாம் மதிக்கின்றோம். அதனைத் தாண்டி அரசியல் ரீதியாக அவர் ஒரு பெறுமதியற்ற நபர். அவர் மக்களின் நலனுக்காக அரசியல் செய்யாமல், தனது தனிப்பட்ட கோபங்களையும் பகைமைகளையும் தீர்த்துக் கொள்வதற்காகவே அரசியலைப் பயன்படுத்துகின்றார். சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே ” என்றும் பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது
சரத் பொன்சேகாவின் இந்த கருத்து தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் மகனும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான நாமல் ராஜபக்ச கூறுகையில், ”இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச உத்தரவிட்டதாக கூறும் பொன்சேகா, பிறிதொரு சந்தர்ப்பத்தில் மஹி்ந்த, விடுதலைப் புலிகள் தப்பிக்க உதவியதாக கூறுவது வேடிக்கையானது.போர் சூழலில் இராணுவத்திடம் சரணடையுமாறு அழைப்பது அபூர்வமான ஒன்றல்ல .அதேவேளை போரின் போது வழங்கப்பட்ட உத்தரவுகள் குறித்து சரத் பொன்சேகா பல்வேறு காலங்களில் முரண்பட்ட கருத்துகளையே வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர் .குறைந்தளவு உயிரிழப்பு சொத்திழப்புடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே மகிந்த ராஜபக்சவின் நோக்கமாக இருந்தது. சில அரசியல் குழுக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, மகிந்த ராஜபக்ச “இரத்தத்திற்காக ஏங்கிய கொலைகாரர்” அல்ல என்பது குறித்து சரத் பொன்சேகா விளக்கம் அளித்ததற்காக அவருக்கு நன்றி ”என்கின்றார்.
ராஜபக்சக்களை சிக்கலில் மாட்டிவிட சரத் பொன்சேகா .பிரபாகரன் சரணடைய விரும்பியதாகவும் அவரை வடக்கு முதலமைச்சராக்க மஹிந்த ராஜபக்ச விரும்பியதாகவும் கூறிய நிலையில் அதுவே ”பிரபாகரன் சரணடையுமளவுக்கு கோழையல்ல.அவர் இறுதிவரை போரிட்ட வீரன். இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடையவில்லை, அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரை போராடியே உயிரிழந்தார்”என சிங்கள அரசியல் தலைவர்களும் படைத்தளபதிகளும் சிங்கள இனவாதிகளும் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.