தொண்டா – அஷ்ரப் தீர்மானங்கள் தீர்க்கதரிசனமானவை என டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என்று தெரிவித்த ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
எமது தமிழ் மக்கள் சார்ந்த மூத்த தலைவர்களின் குறுகிய அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியதுடன், அனுபவங்களில் இருந்து நாம் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் புதிதாக தோன்றியுள்ள கட்சிகளின் கூட்டிணைவு என்பது சாத்தியமற்றவர்களின் இயலாமையைக் காட்டு இணைவு என்றும் அதில் நீதி மன்ற தண்டனை பெற்றவர்களும் உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வேலணை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளுக்கான கட்சி பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக தனித்தனியாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இதனை தெரிவித்த மூத்த தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தெரிவிக்கையில் –
“தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், தேர்தல் பின்னடைவுகளே கூட்டணி பற்றிய சிந்தனைகளை எமது தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.
70 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலே பரந்தளவான தமிழர் கூட்டணி உருவாக காரணமாக அமைந்தது.
ஆரம்பத்தில் அந்தக் கூட்டிணைவில் அப்போதைய மலையக மக்களின் தேசியத் தலைவரான சௌ. தொண்டமானும் முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவரான அஸ்ரப் அவர்களும் இணைந்திருந்தனர். எனினும், அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனைகள் காரணமாக பின்னாட்களில் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.
அவர்களின் தீர்மானம் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.
அதேபோன்று, பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்களும் சந்தர்ப்பவாத தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.
எம்மை பொறுத்தவரையில், மக்களின் நலன்களும் அபிலாசைகளுமே முதன்மைக்குரிய விடயங்களாகும். அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்” என்று தெரிவித்தார்.