ஒருபகுதி என்பிபி ஆதரவாளர்கள் விஜயின் வெற்றியையும் என்பிபியின் வெற்றியையும் ஒப்பிடுகிறார்கள். இரண்டும் ஒன்று அல்ல.என்பிபிக்கு அடித்தளமாக இருக்கும் ஜேவிபிக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு.அது ஓர் இயக்கம்.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, நசுக்கப்பட்ட இயக்கம். 2018 ஆம் ஆண்டு அது தன்னை தேசிய மக்கள் சக்தியாகக் கட்டமைத்துக் கொண்டது. எனவே என்பிபியின் வெற்றியும் விஜயின் வெற்றியும் ஒன்றல்ல. ஏனென்றால் என்பிபியின் வரலாறும் விஜய்யின் வரலாறு ஒன்றல்ல. அவற்றை ஒப்பிட முடியாது.வேண்டுமானால் அர்ஜுனாவோடு ஒப்பிடலாம். அல்லது என்பி பிக்கு வாக்களித்த தமிழ் வாக்காளர்களின் மனோநிலையோடு ஒப்பிடலாம்.
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார பலமிக்க ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வரக்கூடிய ஒருவரின் தேர்தல் வெற்றியை அவருடைய குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் சிறியவர்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் விசில் ஊதிக் கொண்டாடிய காட்சி என்பது தமிழகத்தில் மட்டும்தான் இடம் பெறுமா? அல்லது உலகில் வேறு எங்காவது உண்டா?
விஜய் வென்றுவிட்டார்.எனினும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர் சட்ட சபையில் தன்னுடைய அறுதிப் பெரும்பான்மையை எப்படி நிரூபிக்கப் போகிறார் என்பது இறுதி முடிவெடுக்கப்படவில்லை.. கட்சியை தொடங்கிய 29 மாதங்களில் அடைந்த வெற்றி அது. மிக விரைவான வெற்றி. பொருத்தமான கட்டமைப்புகள் இல்லாமல் அந்த வெற்றியை அவரால் எப்படி அடைய முடிந்தது? ரசிகர்களை எப்படி அவர் வாக்காளர்களாக மாற்றினார்? அந்த 29 மாதங்களிலும் அவர் அவ்வாறு மாற்றினாரா? அல்லது சில தசாப்தங்களாக தனது திரைப்படங்களின் ஊடாக தனது ரசிகர்களை தயார்படுத்தி வந்தாரா? இந்தக் கேள்விகளுக்கு விடை முக்கியம்.
தமிழ்நாட்டில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழர் சொன்னார்,தான் வாழும் இடத்துக்கு அருகில் உள்ள ஒரு கடையில் இரண்டு தமிழ் நாட்டவர்களை அவர் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களித்தீர்கள்” என்று. விசிலுக்குத்தான் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உங்களுடைய தொகுதியில் யார் வேட்பாளர்? என்று கேட்டிருக்கிறார்.இருவருக்குமே யார் என்று சொல்லத் தெரியவில்லை.
இதுபோல பல உதாரணங்களைக் கூறலாம் அதாவது விஜய் என்ற ஒரு நாயக பிம்பத்துக்கு பெரும்பாலானவர்கள் வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது. தனது திரைப்படங்களில் தன்னுடைய நாயக பிம்பத்தை அவர் பல தசாப்தங்களாக கட்டியெழுப்பி வந்துள்ளார்.ஆனால் அந்தத் திரை நாயக பிம்பத்தை பிம்பத்தை எப்படி குறுகிய காலத்தில் அரசியல் தலைமையாக அவரால் மாற்றமுடிந்தது? அல்லது தமிழ்நாட்டு மக்கள் திரை நாயக பிம்பத்துக்கும் அரசியல் தலைமைத்துவ பிம்பத்துக்கும் இடையே அதிகம் வித்தியாசங்களைத் தேடவில்லையா?
இந்தியாவில் உள்ள பலமான மூத்த அரசியல் விமர்சகர்கள் பலராலும் விஜயின் வெற்றியை எதிர்வுகூற முடியவில்லை. மிக அரிதாகவே சில ஊடகங்கள் அதை எதிர்வுகூறின.வேறு ஒரு கட்சிக்காக உள்ளூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனராகிய தங்கர் பச்சான் தனது முகநூலில் இந்த மாற்றத்தை முன் உணர்ந்து எழுதியிருந்தார். சில ஊடகங்கள்,சில விமர்சகர்கள் தவிர பெரும்பாலானவர்கள் விஜய் அலையை ஏன் மணந்து பிடிக்கத் தவறினார்கள்?
ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவர்களுடைய அரசியல் விருப்பங்கள் காரணமாக அல்லது குருட்டு விசுவாசம் காரணமாக உண்மையை கண்டுபிடிக்க தவறினாரா?அல்லது இதுவரையிலும் இருந்துவந்த ஆய்வு முறைமைக்குள்,ஆய்வுப் பரப்புக்குள் அடங்காத வேறு ஏதோ ஒன்று அதற்குக் காரணமா? இந்த விடயங்களை ஆழமாக ஆராய வேண்டும்.
ஒருபகுதி என்பிபி ஆதரவாளர்கள் விஜயின் வெற்றியையும் என்பிபியின் வெற்றியையும் ஒப்பிடுகிறார்கள். இரண்டும் ஒன்று அல்ல.என்பிபிக்கு அடித்தளமாக இருக்கும் ஜேவிபிக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு.அது ஓர் இயக்கம். இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, நசுக்கப்பட்ட இயக்கம். 2018 ஆம் ஆண்டு அது தன்னை தேசிய மக்கள் சக்தியாகக் கட்டமைத்துக் கொண்டது. எனவே என்பிபியின் வெற்றியும் விஜயின் வெற்றியும் ஒன்றல்ல. ஏனென்றால் என்பிபியின் வரலாறும் விஜய்யின் வரலாறு ஒன்றல்ல. அவற்றை ஒப்பிட முடியாது. வேண்டுமானால் அர்ஜுனாவோடு ஒப்பிடலாம். அல்லது என்பி பிக்கு வாக்களித்த தமிழ் வாக்காளர்களின் மனோநிலையோடு ஒப்பிடலாம்.
அப்படியொரு மனோநிலை தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதா?திராவிடக் கட்சிகள் மீதான கசப்புணர்வு ஒரு மாற்றுத் தலைமையை நோக்கி அவர்களைத் தள்ளியதா? திராவிடக் கட்சிகளுக்கு விஜய் ஒரு மாற்றா இல்லையா என்ற விவாதத்தைப் பின்னர் வைத்துக் கொள்ளலாம். வரும் ஐந்து ஆண்டுகளில் அவர் அதனை நிரூபிக்க வேண்டி இருக்கும். ஆனால் திராவிடக்கட்சிகள் மீது ஏற்பட்ட வெறுப்பும் விஜய்க்கு ஆதரவாக மாறியிருக்கிறது என்று தெரிகிறது. திராவிடக் கட்சிகள் மீது வெறுப்பு,அதிருப்தி அதிகரித்து விடுவதை ஏன் பிரதான பலமான ஊடகங்கள் அல்லது விமர்சகர்கள் கணிக்கத் தவறினார்கள்? அல்லது இந்த ஊடகங்களும் விமர்சகர்களும் ஏதோ ஒரு விதத்தில் கட்சிகளுக்கோ அல்லது நலன்களுக்கோ விசுவாசமாக இருந்த காரணத்தால் உண்மையைக் கண்டறிய முடியவில்லை?
எதுவாயினும் தமிழக மக்கள் இப்பொழுது விஜய்க்கு ஏனைய கட்சிகளைவிட அதிக வாக்குகளைக் கொடுத்திருக்கிறார்கள். தான் ஒரு திரை கதாநாயகன் மட்டுமல்ல, தனக்கு வாக்களித்த மக்களுக்குப் பொறுப்புக்கூறும் ஒரு தலைவனுந்தான் என்பதனை விஜய் நிருபிக்க வேண்டியிருக்கும்.
அவர் அதை நிரூபிப்பாரா இல்லையா என்பது அவரைப் பொறுத்த விடயம். அவரைத் தொடர்ந்தும் ஆள்வதற்கு திராவிடக் கட்சிகள் விடுமா இல்லையா என்பதும் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல். இதில் அயலவர்களாகிய ஈழத்தமிழர்கள் புதிய தமிழ்நாட்டு அரசாங்கம் தொடர்பாக என்ன முடிவை எடுக்கலாம் ?
யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழத் தமிழர்கள் அவரோடு தமது நலன் சார்ந்து இடையூடாட வேண்டும். தமிழகத்துக்கு யார் முதலமைச்சர் என்பது தமிழக மக்களின் விருப்பம். அந்த விருப்பத்தை ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரோடு ஈழத்தமிழர்கள் தமது நலன்சார் நோக்கு நிலையில் இருந்து இடையூடாட வேண்டும்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் இந்திய மாநிலம் ஒன்றின் முதலமைச்சர். அவர் இந்தியாவின் அரைச் சமஷ்ரி அரசியலமைப்புக்கு உட்பட்டவர். இந்தியாவின் அரசியலமைப்பின்படி அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் எதுவரை தலையிடலாம் என்பதில், எதுவரை செல்வாக்குச் செலுத்தலாம் என்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. எனவே ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கைகளில் ஒரு தமிழ்நாட்டு முதலமைச்சர் எந்தளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தலாம்?
இதற்கு எம்ஜிஆர் ஒரு சிறந்த உதாரணம்.எம்ஜிஆர் செய்யமுடியாத ஒன்றை எந்த ஒரு முதலமைச்சரும் ஈழத் தமிழர்களுக்கு செய்து விட முடியுமா ?
எம்ஜிஆர் தமிழகத்தின் பலமான ஒரு முதலமைச்சராக இருந்தவர். அவருடைய காலத்தில்தான் முதலாங் கட்ட ஈழப்போர் நடந்தது. அக்காலகட்டத்தில்தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தமிழ்நாடு பின்தளமாகத் திறக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது. அது ஓர் அரசியல் உறவு என்பதற்குமப்பால் தனிப்பட்ட நெருக்கமாக வளர்ந்தது. எம்ஜிஆர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு என்னென்ன உதவிகள் செய்தார் என்பதனை அந்த இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் வெளிப்படையாக சொன்னால்தான் தெரிய வரும்.தமிழகத்தின் முதலமைச்சராக அவர் தன்னுடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு உத்தியோகப்பற்றற்ற விதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அள்ளி வழங்கியதாகத் தகவல்கள் உண்டு. அவருக்கும் அந்த இயக்கத்துக்கும் இடையிலான தனிப்பட்ட நெருக்கந்தான் பின்னாளில் அந்த இயக்கத்துக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையிலான உறவின் தன்மையையும் தீர்மானித்தது என்று சொல்லலாம்.
முதலாங்கட்ட ஈழப்போரின் முடிவில், இந்திய – இலங்கை உடன்படிக்கை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில்,எம்ஜிஆர் நோயாளியாகிவிட்டார். எழுந்து நடக்கச் சிரமப்பட்டார். இந்திய – இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட பின் அது தொடர்பான எதிர்ப்புக்கள்,சர்ச்சைகள்,விமர்சனங்களின் மத்தியில் தமிழகத்தில் ஒரு பெரிய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.அக்கூட்டத்திற்கு எம்ஜிஆர் அழைத்துவரப்பட்டிருந்தார். மேடையில் பேசிக்கொண்டிருந்த ராஜீவ் காந்தி ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை கைத்தாங்கலாக மக்கள் முன் அழைத்து வந்தார். எம்ஜியாருடைய கையை தன்னுடைய கையினால் தூக்கி, உயர்த்திப் பிடித்து இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எம்ஜிஆரும் சம்மதம் என்று பொருள் கொள்ளத்தக்க விதத்தில் எம்ஜிஆரின் கையை தன்னுடைய கையோடு சேர்த்து அசைத்தார்.
தான் மிகவும் நேசித்த ஓர் இயக்கம்,தன்னால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஓர் இயக்கம், தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய நாட்டுப் படையினரோடு மோதும் ஒரு நிலைமை உருவாகி வருவதை எம்ஜிஆர் தடுக்க முடியாதவராக பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கட்சியை சேர்ந்தவர்களே அவரைப் போல விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமாகச் சிந்திக்கவில்லை.
யாழ் நகரம் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் வீழ்ச்சியுற்ற இரண்டு மாதங்களில், 1987 டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆர் உலகை நீத்தார். எம்ஜிஆரைப் போன்ற ஒரு பலம்மிக்க முதலமைச்சராலேயே இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பில் ஒரு கட்டத்துக்குமேல் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. அந்த உடன்படிக்கையின் பின்னரான விளைவுகளைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. எம்ஜிஆரால் செய்யமுடியாத ஒன்றை இனி யாரால் செய்ய முடியும்?
எம்ஜிஆருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் அபூர்வமானது. ஈழத்தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஓர் ஆயுதப்போராட்ட இயக்க தலைவருக்கும் தமிழகத்தின் தலைவருக்கும் இடையில் அப்படி ஒரு நெருக்கம் அதற்கு முன்னரும் இருந்ததில்லை; அதற்குப் பின்னரும் இருந்ததில்லை.ஒரு தமிழக முதலமைச்சர் ஈழத் தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவலாம் அல்லது ஈழத்தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்கு எம்ஜிஆர் ஓர் உதாரணம்.
இந்தியாவின் அரைச் சமஸ்டிக் கட்டமைப்புக்குள் ஒரு முதலமைச்சரால் உத்தியோகபூர்வமாக செய்யக்கூடியது அவ்வளவுதான். அதேசமயம் தமிழ்நாட்டு வெகுசனம் கொந்தளித்தால், அது அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்கும். அது புதுடில்லி மீது தமிழகம் கொடுக்கக்கூடிய நிர்பந்தங்களைத் தீர்மானிக்கும். ஆனாலும் அங்கேயும் இந்தியாவின் அரைச் சமஸ்டிக் கட்டமைப்புக்குள் ஒரு முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய வரையறைகளை எம்.ஜி.ஆரை ஓர் அளவுகோலாக வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்கள் வாசிக்க வேண்டும்.
இந்த வரலாற்று அனுபவத்தின் பின்னணியில் வைத்துத்தான் தமிழகத்தின் இனிவரக்கூடிய எந்த ஒரு முதலமைச்சரையும் அணுகவேண்டும். விஜயையும் அணுக வேண்டும்.