சிவா பரமேஸ்வரன்
மூத்த பன்னாட்டுச் செய்தியாளர், லண்டன்
அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.
பிறருடைய துன்பத்தை தனது துன்பம் போன்று புரிந்து அதற்கு ஏற்றவகையில் செய்ற்படுவதன் தேவையை வலியுறுத்தும் இந்த குறளின் கருத்திற்கு அமைய வாழ்ந்து மறைந்தவர் “சாகித்திய ரத்னா” முருகன் சிவலிங்கம்.
இலங்கையில் இன்றளவும் சமூக பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைந்த நிலையில் இருக்கும் சமூகம், பெருந்தோட்டத்துறையில் ஆண்டாண்டுகளாக அடிமைச் சங்கிலியில் சிக்கி அதிலிருந்து மீண்டுவர முயன்றும் முடியாமல் தவித்து தங்கள் உயிரையே உரமாக்கி உழைக்கும் இந்திய வம்சாவளி மக்கள்.
அவர்களின் இருநூற்று ஆண்டுகால துன்பங்களை சொல்லி மாளாது. நரபலி தொடங்கி நவகாலனித்துவ அடிமைகளாக இருக்கும் அவர்களது வாழ்வு கண்ணீர் காவியங்களில் ஒன்று. அப்படியான கண்ணீர் காவியங்களை உருவாக்கி மலையக பெருந்தோட்ட மக்களின் அவலத்தை தனது எழுத்துக்கள் மூலம் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் காலஞ்சென்ற ஐயா மு.சி
சில வாரங்களுக்கு முன்னர் அவரது அமுத விழாவை (அகவை 80 ஆண்டு விழாவை) மலையக மக்கள் முன்னெடுத்து நடத்தினர். அச்சமயம் அவரது சமூக பங்களிப்பை போன்றும் வகையிலான “சிவாமுதம்” என்ற மலரும் வெளியானது.
அந்த விழாவில் பேச நான் அழைக்கப்பட்டிருந்த நிலையில், என்னால் பங்குபெற இயலாத நிலை ஏற்பட்டது. எனினும் நவமபர் மாதம் கொழும்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவசியம் பங்கேற்பேன் என்று நான் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த எண்ணம் ஈடேறாமல் அவர் அமரராகிவிட்டார்.
எனக்கும் அவருக்குமான தொடர்பு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலானது. எனக்கும் அவருக்கும் இடையேயான முக்கியமான உரையாடல் ஒன்று லண்டனில் கடுங்குளிர் நிலவிய ஒரு நாளில் இடம்பெற்றது.
எனது அன்றாட ”லண்டன் பிபிசியின் உலக சேவையிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழோசை” வானொலி ஒலிபரப்பு மற்றும் இணையத்தில் செய்திப் பதிவு ஆகியவற்றை நிறைவு செய்து நான் ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தேன். அவர் கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். எங்கள் உரையாடலின் தெளிவு மற்றும் தொடர்பு இரு நாடுகளின் தொ(ல்)லைதொடர்பு (வ)சதியை பொறுத்தே இருந்தது. இதற்கு அப்பாற்பட்டு ரயில் பயணமும் பேருந்து பயணமும் தொடர்ந்தது.
இலங்கையில் போரும்-போர் நிறுத்தமும் எப்படி இடையிடையே நின்றும்- நீண்டும் சென்றதோ அதே போன்று தான் எங்கள் உரையாடலும் இருந்தது. “தமிழோசை” வானொலி தொடர் ஒன்றிற்காக நான் திட்டமிட்டுக்கொண்டிருந்த சமயம் அது. அது குறித்த அலோசனைக்காக அவரிடம் உரையாடிய சந்தர்ப்பம் அது.
ஆனால், அந்த சமிஞ்கை இடைஞ்சலுக்கு அப்பாற்பட்டு எமது பிணைப்பிற்கு அடிகோலிட்ட அந்த உரையாடல் தொடர்ந்தது. இந்திய வம்சாவளி தமிழர்கள் மீது எனக்கு இயற்கையாகவே இருந்த பற்று, அவர்களின் வாழ்க்கை தரம் பற்றிய கவலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் அவலம், அதற்கு தீர்வு என்னவாக இருக்கும், அதற்கு ஒரு ஊடகவியலாளகராக என்ன செய்ய முடியும் என்று எனக்குள் மிக நீண்டகாலமாக ஓடிக் கொண்டிருந்த சிந்தனை அவருடனான அந்த உரையாடல் மூலம் மேலும் வலுவடைந்தது.
இந்த சவால் உந்துதலாக மாற அதை எதிர்கொள்ள பெருந்தோட்ட மலையக மக்களின் பின்புலம், வாழ்வியல் அவலங்கள் போன்றவை குறித்து மேலும் எனது புரிதலை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் மேலிட்டது.
பலரிடம் இந்த புரிதலுக்காக யாரிடம் பேசுவது ஆகச்சிறந்ததாக இருக்கும் என்று நான் வினவிய போது, அனைத்து பதில்களும் ஒருவரை நோக்கியே கை காட்டின- திரு மு சிவலிங்கம் ஐயா அவர்களை நோக்கிய கைகாட்டல் அது.
சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அந்த உரையாடல், மலையகம் குறித்த எனது புரிதல், அந்த மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும், இயன்ற உதவிகளை செய்ய வேண்டும், அவர்களின் தீராத வாழ்க்கை பிரச்சனைகளை பன்னாட்டளவில் கொண்டு செல்ல வேண்டும் போன்ற பல அம்சங்களில் எனது ஆர்வம் மற்றும் உறுதிப்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியது என்பது உண்மை.
பிறகு எம்மிடையேயான உரையாடல்களும் தொடர்புகளும் அதிகரித்தன. இலக்கியம் மற்றும் சமூகப் பணியில் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த அவர் எனக்கு நேரம் ஒதுக்க தயங்கியதில்லை.
பின்னர் அவரது படைப்புகளை மனமுவந்து லண்டனுக்கே அனுப்பி மலையக மக்களின் வாழ்வியலை மேலும் புரிந்தும் அறிந்தும்கொள்ள உதவினார். அந்த புத்தகங்களை நான் வாசித்த பிறகு லண்டனிலுள்ள தமிழர்களும் வாசித்து மலையக மக்களின் நிலையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை அங்குள்ள அரச நூலகம் ஒன்றிற்கு கொடுத்தேன்.
அப்படி அவர் அனுப்பி நான் இரண்டே நாட்களில் வாசித்து முடித்த நெடுங்கதை மலைகயத்து கண்ணீர் காவியமான “ஒப்பாரி கோச்சி”. அற்புதமான அந்த படைப்பில் ஒரு சிறிய அம்சம் விடுபட்டிருந்தது. அதாவது, முதல் பக்கத்தில், ‘பலவீனமாவர்கள் வாசிப்பதை தவிர்க்கவும்’ என்று ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.
ஏனென்றால், அந்த உண்மைப் புதினம் அந்தளவிற்கு நெஞ்சை உருக்குவதாக இருந்தது. வாசிக்க வாசிக்க கலக்கமும், கவலையும் தொற்றி கொண்டன. அற்புதமான அந்த படைப்பு ஒரு உயிரோவியம். இரு அரசுகளின் வஞ்சகம் மற்றும் சுயநலன்கள் காரணமாக எவ்வாறு பல்லாயிரக்கணக்காணவர்கள் ஒரே இரவில் நிர்கதி ஆக்கப்பட்டனர் என்பதை விவரிக்கும் ஒரு ஆவணம். அது புதினம் என்பதற்கு அப்பாற்பட்டு ஒரு வரலாற்று துரோகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் காலத்தின் சாட்சியம்.
தமிழ்நாட்டில் லா ச ரா (லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்) அவர்களின் ”அபிதா, பிராயச்சித்தம்”, ஜெயகாந்தனின் ”சில நேரங்களில் சில மனிதர்கள்”, அகிலனின் “சித்திரப்பாவை”, ராஜம் கிருஷ்ணனின் “கரிப்பு மணிகள், வேருக்கு நீர்”, சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை, அசோகமித்ரனின் “தண்ணீர்”, தோப்பில் முகமது மீரானின் “சாய்வு நாற்காலி” போன்ற படைப்புகளில் இருந்த வீச்சு, ஆழம், தாக்கம், ஆகியவை எனக்கு மு சிவலிங்கம் ஐயாவின் ”ஒப்பாரி கோச்சியை” வாசித்த போது ஏற்பட்டது.
குருதி தோய்ந்த அந்த அழியா காவியம் எக்காலத்திற்கும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அவலத்தை தோலுரித்து காட்டும் ஒரு படைப்பு. ஒரு இனத்தின் துயரத்தை இதைவிட வேறு வகையில் சிறப்பாக ஆவணப்படுத்த முடியாது. அப்படி அதை காலத்தின் கண்ணாடியாக ஒரு இனத்தின் சுரண்டலை, வெளிவர முடியாத அடிமைத்தனத்தை, எழுத்துக்களில் வடித்த ஒரு சிற்பி ஐயா சிவலிங்கம் அவர்கள்.
வலிந்து நாடு கடத்தப்பட்டவர்களின் வேதனையை வார்த்தைகளில் செதுக்கியவர் அவர். வேதனை என்பதை அனுபவித்தால் மட்டுமல்ல, வாசித்தாலும் ஆழமாக உணர முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டுகளில் ஒன்று “ஒப்பாரி கோச்சி”. வடக்கு-கிழக்கு பிரச்சனை வேறு மலையக பிரச்சனை வேறு என்று பேசுபவர்களில் எவ்வளவு பேர் ”ஒப்பாரி கோச்சி” புதினத்தை வாசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், வாசித்துள்ளவர்கள் இதுவும் ஒரு இனப்பிரச்சையின் அடிநாதம் என்பதை வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், மனதளவில் உணர்வார்கள், உணர வேண்டும்.
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் 1964லிலிருந்து, இந்தியா திரும்பிய உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி, கண்ணீரில் நனைந்தக் கடிதங்களையே அனுப்பிக் கொண்டிருந்தனர்.
“என் இரு கண்களிலும் கிடைக்கப் பெற்ற சுக்குருவுக்கு தங்கவேலு எழுதும் கடதாசி. நாங்கள் இப்பவும் கடவுள் கிருபையால் ஷேமமாக இருக்கோம். தம்பி இந்தியாவுக்கு வர்ற ஆசைய வுட்டுப்புடு..! நாங்க ஏமாந்துட்டோம். குடும்ப கார்டு எல்லாம் பொய்யி. புனர் வாழ்வும் பொய்யி. இங்க இருக்கிறவனெல்லம் மனுசங்களே கெடையாது. திருட்டு, ஏமாத்து, பொய்தான் வாழ்க்க…. வாக்குவாடம் செஞ்சா.. வெட்டு, கொத்து, கொலை… எல்லாருமே கொடூரமானவங்க”.
’தந்தை நாடு’ கைவிட ’தாய் நாடு’ திரும்பியவர்களின் நிலையை ஒரு கடிதத்தின் மூலம் வலி மிகுந்த வார்த்தைகளால் இதைவிட ஆழமாக விவரிக்க முடியாது. இது அவரது அபாரமான படைப்புகளிலுள்ள வீச்சின் ஒரு மிகச்சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. அவரது எழுத்துக்களை இதுவரை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாசிக்காதவர்கள் துர்பாக்கியசாலிகள் என்று கூறலாம்.
அவரது எழுத்துக்களின் வீச்சால் ஏற்படும் தாக்கத்தின் பரிமாணத்திற்கு மேலும் ஒரு சிறந்த உதாரணம் “பஞ்சம் பிழைக்க வந்த சீமை”. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வறுமையின் பிடியில், சமூகத்தில் மிகவும் பின் தங்கியிருந்த மக்கள், எப்படியாவது தமது வாழ்வு மலராதா என்ற ஏக்கத்துடன், எதிர்பார்ப்புகளுடன், கனவுகளுடன், பெரிய படுகுழி ஒன்றிற்குள் தள்ளப்படுகிறோம் என்பதை அறியாமல், இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்து, நிரந்தர அடிமைகளாக மாற போகிறோம் என்பதை உணராமல், காலனித்துவ ஆட்சியாளர்களால் ஏமாற்றி இலங்கைக்கு எப்படி அழைத்துவரப்பட்டனர் என்பதை விவரிக்கும் அமர காவியம் “பஞ்சம் பிழைக்க வந்த சீமை”.
விளக்கில் வீழும் விட்டல் பூச்சிகளைப் போன்று, ஆசை வார்த்தைகளை நம்பி, அவலத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் மீளலாம் என்ற நப்பாசையுடன், புதைகுழியை நோக்கி காலடெத்து வைத்து, இலங்கையின் மலையகத்தில், மண்ணோடு மண்ணாக புதைந்து, தேயிலை தோட்டங்களுக்கு உரமாகி காலத்தால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் கதை அது. “செக்கு மாடு சுற்றி வரலாம் ஊர் போய்ச் சேராது” என்பது போல், தமிழகத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களிலிலிருந்து, காலில் செருப்பு கூட இல்லாமல், கட்டிய வேட்டியுடன், உள்ளூரில் வாங்கிய கடனை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்ற சூழலில் ஒரு வழி பயணமாக தொடங்கியவர்களின் கதை தான் “பஞ்சம் பிழைக்க வந்த சீமை”. ஆனால் அவர்களின் உடல் பஞ்சடைத்து, உளுத்துப் போய், உருக்குலைந்து சிதைக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதை அது. அந்த “செக்கு மாடுகள்” ஒரு போதும் சுகத்தை அனுபவிக்கவும் இல்லை, ஊரும் போய்ச் சேரவில்லை.
“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” மற்றும் ”ஒப்பாரி கோச்சி” படைப்புகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே அவலங்கள் மற்றும் ஏமாற்றத்தின் கதை. ஒன்று வந்தவர்களின் கதை, மற்றது வந்து, நொந்து, நைந்து போய் விரட்டப்பட்டவர்களின் கதை.
ஐயா மு சிவலிங்கத்தின் இந்த இரண்டு படைப்புகளை நான் மேற்கோள் காட்டியுள்ளதற்கு காரணம் அவரது சிந்தனையோட்டம் எப்படிப்பட்டது என்பதை காட்டுவதற்கே. இயல்பாகவே அவருக்குள் ஒரு பொதுவுடமைச் சிந்தனை மற்றும் சிந்தாந்தம் இருந்தது என்பதை அவரது எழுத்துக்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த படைப்புகளில் மலையக மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், தீர்வின்றி தொடரும் பிரச்சனைகள் ஆகியவை பாரபட்சமின்றி முழுமையாக வெளிப்படும்.
அவரது எழுத்தின் வீச்சு, ஆழம் மற்றும் நீட்சி ஆகியவை சிங்கள படைப்பாளிகள் மத்தியிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின என்பது உண்மை. அதன் வெளிப்பாடாகவே அவரது பல படைப்புகள் சிங்கள மொழியிலும் வெளியாயின. சிங்கள பேரினவாத கடும்போக்கு கொள்கைகளை கொண்டிருந்த பெருவாரியான மக்களின் நடுவிலே மலையக மக்கள் மீதும்-பக்கசார்பற்ற சிந்தனையுடன் இருந்த சிங்கள மக்களும் கரிசனை கொண்டிருந்தார்கள் என்பதற்கு, மு சி அவர்களின் எழுத்தும், அது சிங்கள சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும் முக்கியமான காரணம்.
ஆனால், மலையக இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் நவகாலனித்துவ அடிமை நிலையை பெரும்பாலான சிங்கள மக்கள் உணரவில்லை அல்லது அவர்கள் “இந்திய கூலிகள்”, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? என்கிற எண்ணம் இன்றளவும் நிலவுகிறது என்பது கசப்பான உண்மை.
கையறு நிலையில் இருந்த மலையக பெருந்தோட்ட இந்திய வம்சாவளி மக்கள் ‘விதி வலியது’ என்று தமது நிலையை நொந்து கொண்டு, லயன் வீடுகளும், கொழுந்தும், கறுத்த கைகளும், குழி விழுந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும், நொடிந்து போன வாழ்க்கையும், குளவிகளின் கடியும், சிறுத்தைகளின் தாக்குதலும், யானைகளின் அச்சுறுத்தலுமே தமது அன்றாட வாழ்வின் தீராத துன்பங்கள் என்கிற கசப்பான உண்மையை உணர்ந்த அவர்கள்- தமது வாழ்வை விதியிடம் விட்டுவிட்டனர் என்பதே யதார்த்தம். எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போன்று கசிப்பு வேறு.
இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், மலையக மக்களை அச்சுறுத்தி சுரண்டும் சந்தா அரசியல். அந்த சந்தா அரசியலின் அடிப்படை கோட்பாடு, “கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார், உழைத்தவர்கள் தெருவில் நின்றார் என்பதே”.
இப்படியான சூழாலில் அவர்களின் வாழ்க்கை அவலத்தை தோலுரித்து வெளியுலகத்திற்கு காட்டிய ஒரு ஆளுமை ஐயா மு சி அவர்கள். அவரது படைப்புகளில் அந்த மக்களின் வலியும் வேதனையும் வெளிப்பட்டது. எப்படியான ஒரு நரக சூழலில் அவர்கள் இருநூறு ஆண்டுகளாக, வீடு, தோட்டம், கொழுந்து, அடிமை, என்று- மகாபாரத போரில் சக்கர வியூகத்தில் சிக்கிய அபிமன்யு போன்று- அந்த அபலை மனிதர்களின் கண்ணீர் கதையை வெளியுலகத்திற்கு தனது எழுத்தோவியத்தின் மூலம் எடுத்துச் சென்றார் ஐயா சிவலிங்கம் அவர்கள்.
நாக தீபம் அல்லது மணிபல்லவ தீவு அல்லது கண்ணீர் தேசம் என்ற இலங்கையில் சிலர் அறிந்திருந்தாலும், மலையகத்திலுள்ள இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்திராத ஒன்று, இலங்கையின் இனப்போராட்டம் மற்றும் அதற்கான தீர்வு விஷயத்திலும் ஐயா மு சிவலிங்கத்தின் பங்களிப்பும் கணிசமான வகையில் இருந்துள்ளது என்கிற விஷயம்.
இலங்கை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒருங்கிணைந்திருந்த வடக்கு-கிழக்கு தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டு அதிகாரப் பகிர்வு என்பது ஏட்டளவில் கூட இன்று இல்லை என்ற யதார்த்தமான நிலையில், மாகாணங்களுக்கு அதிகாரங்கள் முழுமையான வகையில் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய மாகாண சபையில் உறுப்பினராக இருந்த மு சிவலிங்கம் தொடர்ந்து காத்திரமாக குரல் கொடுத்தார் என்பதை இன்றைய அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் அரசியல் தலைவர்களும், இளைய தலைமுறையினரும் அறிய வேண்டும்.
மாகாண சபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே அவர் மாகாண சபையில் உறுப்பினராக செயற்பட்டவர். மக்களின் அடிப்படை தேவைகள் எப்படி கையாளப்பட வேண்டும் என்றும் அதற்கு அதிகாரப் பகிர்வு எவ்வளவு முக்கியமானது என்பதையும் அவர் மாகாண சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பேசிவந்தார் என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள்.
அதிகாரப் பகிர்வு முறைமையை ஒழிக்கும் நோக்கில், யார் நீதிமன்றம் சென்றார்கள், ஒருங்கிணைத வடக்கு-கிழக்கு மாகாண சபையை பிரித்தவர்கள் யார்? நாட்டிலுள்ள தமிழ் மக்கள்-மலையகத்திலுள்ளவர்கள் உட்பட யாரும் அதிகாரம் பெற்றுவிடக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் சென்று அதை நிறுத்தியவர்கள் யார் என்பதெல்லாம், இலங்கையின் கண்ணீர் கதைகளில் ஒன்று. இது இலங்கை சரித்திரத்தின் ஒரு பகுதி.
அந்த சமயத்தில் மு சி அவர்களும், அவரை போன்ற ஒத்த சிந்தனையுடைய வெகு சிலரும், அதிகார பகிர்வு, சமவாழ்வு, சகவாழ்வு போன்றவை எப்படி இருக்க வேண்டும் அதற்கு மாகாண சபை எப்படி செயற்பட வேண்டும், அதன் மூலம் நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவர முடியும் என்பதை யதார்த்த ரீதியில் சிந்தித்து செயற்படுத்தி அமைதியை நிலைநாட்ட முயன்றனர். சமூகத்தில் நிலவிய முரண்பாடுகள், மோதல்களை போன்றவைகளை களைய மு சி அவர்கள் கடும் நெருக்கடிகளுக்கு இடையே பங்களித்தார் என்பதெல்லாம் போருக்கு அப்பாற்பட்ட சரித்திரத்தின் ஒரு அங்கம்.
நானறிந்த வகையில் அவர் படைபாளியாக மட்டுமில்லாமல், ஒரு செயற்பாட்டாளராகவும் களத்தில் நின்றவர். மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சனைகள் உலகவில் பேசப்பேட வேண்டும் என்று மனதார விரும்பி அதற்கு தனது படைப்புகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் செயல்வடிவம் கொடுத்தவர் மு சி அவர்கள். இதை என்னால் உறுதிபட சான்றுகளுடன் கூற முடியும்.
அதேவேளை பிபிசி தமிழோசையில் நான் தயாரித்து வழங்கிய 15 வார தொடரான “மலருமா மலையக மக்களின் வாழ்க்கை”? வெற்றிபெற அறிவுரையும் ஆலோசனையும் அளித்து தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தவர் மு சிவலிங்கம் அவர்கள். இச்சமயத்தில் அவரது அந்த “காலத்தால் செய்த உதவியை” நன்றியும் நினைவு கூறுகிறேன்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்றளவும் இலங்கையில் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே உள்ளனர் என்பதை வெளிக்கொண்டுவரும் வகையில், தயாரிக்கப்பட்ட அந்த வானொலித் தொடர் ஓரளவிற்கு மலையக மக்களின் அவல நிலையில் பன்னாட்டளவிற்கு கொண்டு சென்றது என்று கருதலாம். அந்த தொடரின் வெற்றிக்கு எனது நீண்டகால நண்பரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கணிசமானளவில் உதவி செய்தார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாட்டு ஊடகவியலாளர், அதிலும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை வருவதற்கு விசா பெறுவதே சவாலாக இருந்த காலத்தில், அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இடையே களத்தில் ஒலிப்பதிவு செய்வது மிகவும் சவாலானதாக இருந்தது. அவ்வகையில் “அரசு இடைஞ்சல்களை நான் கவனித்து கொள்கிறேன், களப்பதிவுகளை நீங்கள் கவனியுங்கள்” என்று கூறி உடனிருந்து ஒத்துழைப்பு அளித்தவர் மனோ கணேசன். தொலைதூர தோட்டப் பகுதிகளுக்குச் சென்று அச்சமின்றி மக்களைச் சந்திக்க அவர் பாரிய பங்களிப்பு செய்தார். மேலும், அந்த ஒலிப்பதிவில் மக்கள் கூறிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி, சில விஷயங்களுக்கு தீர்வும் பெற்றுத்தந்தார்.
இலங்கையின் இலக்கிய, சமூக, அரசியல் ஆளுமைகளில் தவிர்க்கப்பட முடியாத முக்கியமான சில தமிழ் படைப்பாளிகளில் ஐயா மு சி ஒருவர். அவரது படைப்புகள் குறித்து மேற்கோள் காட்டவே நான் ”ஒப்பாரி கோச்சி” மற்றும் ”பஞ்சம் பிழைக்க வந்த சீமையை” தொட்டுள்ளேன். அவரது சிறப்பு மிக்க படைப்புகளின் பட்டியல் நீளூம்.
அவரது “வெந்து தணிந்தது காலம், தேயிலை தேசம், ஒரு விதை நெல்” போன்றவைகளும், மலையக நாட்டுப்புற பாடல்கள் குறித்த படைப்பும், உலகத் தமிழ் இலக்கியங்களின் ஒரு பங்காக எக்காலத்திற்கும் நிற்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் உலகின் இலக்கிய ஆளுமை குறித்து பேசப்படும் போதும், ஆவணப்படுத்தபடும் போது, இலங்கையிலிருந்து இரு ஆளுமைகள் அதில் இடம்பெறுவார்கள் அல்லது இடம்பெற வேண்டும் என்று நான் ஆழமாக எண்ணுகிறேன். ஒருவர் ஈழத் தமிழர் அப்பாதுரை முத்துலிங்கம் மற்றவர் இந்திய வம்சாவளி தமிழரான மு சிவலிங்கம்.
அமரத்துவம் வாய்ந்த அவரது படைப்புகள், அயராத அவரது சமூக, கலைப் பணிகள் காலத்தால் அழியாதவை.
அவரது படைப்புகள் உலகின் பல மொழிகளில் வெளிவர வேண்டும், அவரது சில படைப்புகளை பன்னாட்டுப் பெருநிறுவனம் ஒன்று ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இருந்தாலும் இலங்கை பெருந்தோட்ட இந்திய வம்சாவளி மக்களின் சோகம் மிகுந்த வாழ்க்கை வரலாறு உலகெங்கும் பேசப்பட வேண்டும். அதற்கு அவரது பங்களிப்புகள் மேலும் வலு சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.