3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது, அமெரிக்காவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படை தளத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
3 மணிநேரத்திற்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது. இதனை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது டிரம்பை புதின் புகழ்ந்து பேசினார். புதின் கூறும்போது, எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான் என்று கூறினார். டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை, எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. அதேவேளையில், நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது. ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பாதுகாப்பு சமநிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் பலமுறை கூறி வந்தோம். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு நான் உடன்படுகிறேன் என்றார். அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என்றும் புதின் கூறினார்.