பொய்யான ‘முறைமை மாற்றம்’; அரசியலமைப்பை பலவீனப்படுத்தி தேசியப் பாதுகாப்பு அரசுக்கு அதிகாரமளித்தல்

Share

இந்தக் கசப்பான வரலாற்றுப் பாடங்கள் அதிகாரத்தில்
உள்ளவர்களிடம் இருக்கும்போது உறுதியான கொள்கை
தீர்மானங்களாக பரிணமிக்காதது வருத்தத்துக்குரியது.

மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் உத்தேச ‘பயங்கரவாதத்துக்கு எதிராக அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) குற்றம் புரிந்தோரை விட தம் மீதுதான் அதிக குற்றங்கள் சுமத்தப்படுவதாகச் சொல்லும் அரசின் அனுதாபிகளின் இலகுவான தற்காப்பு வாதத்தைப் பொய்யாக்கியுள்ளது.

கடந்தகால துஷ்பிரயோகங்களை மீண்டும் தொடர்தல்

இவ்விடயத்தின் தீவிரத்தன்மையை அனுசரித்து மிகவும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தில் (PSTA) தந்திரமாகச் சேர்க்கப்பட்டுள்ள மிக மோசமான திருத்தங்களை நத்தார் பண்டிகைக்கால கொண்டாட்டத்துக்கு மத்தியிலும் எம்மால் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் (CTA, 2018) மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபு (ATB, 2023) ஆகிய பழைய சட்டங்கள் குறித்த ‘முறைமை மாற்ற’ அரசாங்கத்தின் மீள் பொருள்கோடல் அவற்றை விட மோசமாக இருக்க முடியாது என்ற எதிர்பார்ப்புடன் ஆரம்பத்தில் அணுகப்பட்ட போதிலும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் நிலைமை இதுதான்.

அந்த எதிர்பார்ப்பை சிதைக்கும் வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் முன்னறிவிக்கும் பயங்கரங்களிலிருந்து விலகி வருவது மென்மேலும் கடினமாகி வருகிறது. உதாரணமாக, ஒரு ‘நபர்’ இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்யத் தயாராகிறார் என நம்புவதற்கு ‘நியாயமான காரணங்கள்’ இருக்கும் பட்சத்தில் அவருக்கு’ எதிராக பிறப்பிக்கப்படக்கூடிய ‘மட்டுப்படுத்தும் உத்தரவுகளை’ எடுத்துக்கொள்வோம். உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் எதனைப் பிரதியீடு செய்ய அவசியமான பயங்கரவாதத் தடைச் சட்டமானது (PTA) இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்க அனுமதியளிக்கிறது.

‘ஒரு நபர் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டுள்ளார் அல்லது அதனுடன் தொடர்பில் இருக்கிறார் என நம்புவதற்கு அல்லது சந்தேகிப்பதற்கு அமைச்சருக்கு தகுந்த காரணம் இருக்கும் பட்சத்தில்…’ இது நிகழ்கிறது (பிரிவு 11, PTA). இதன் அடிப்படையில், இலக்கு வைக்கப்பட்ட ஒரு நபர் தனது வசிப்பிடத்திற்கு வெளியே நடமாடுவது, இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ பயணம் செய்வது போன்றவற்றுடன், ஏனைய விடயங்களும் ‘மட்டுப்படுத்தப்படலாம்’; அத்துடன் செயற்பாடுகள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றுக்கும் இதேபோன்ற தடைகள் விதிக்கப்படலாம். அதன் உச்ச வரம்பு வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இந்த அதிகாரங்கள், தெற்கில் (1980களில்) இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதன் உறுப்பினர்களுக்கு எதிராக வகைதொகையின்றிப் பிரயோகிக்கப்பட்டன.

பொதுமக்களின் கரிசனைகளுக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபு (ATB) பதிலளிக்கிறது

2018 ஆம் ஆண்டில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட வரைபு (CTA) இத்தகைய அதிகாரங்களை வழங்குவதைத் தொடர்ந்தது. சட்டத்தின் 82 ஆவது உட்பிரிவு பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் ‘மட்டுப்படுத்தும் உத்தரவுகளை’ பிறப்பிப்பதற்கான அதிகாரத்தை அமைச்சருக்கு அளித்தது. அதனை விமர்சித்தோருக்கு பாதிக்கப்பட்ட ஒரு நபர் இத்தகைய உத்தரவுகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு என மேலோட்டமான ஒரு வாய்ப்பை வழங்கிய போதிலும், அன்று அது ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கரிசனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபு அத்தகைய உத்தரவுகளை பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் வெளியிடுவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது.

இந்தச் சட்டத்தின் கீழ் எவரேனும் ஒரு நபர் குற்றத்தைச் செய்யவதற்கு முனைகிறார் என நம்புவதற்கு ‘நியாயமான காரணங்கள்’ இருக்க வேண்டும் என உட்பிரிவு 80 நிபந்தனை விதித்ததோடு, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்த பின்னரே இந்த அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்தது. அதன்படி, ஒரு உத்தரவைப் பிறப்பிப்பது என்பது ‘தேவையானது’ என்பதற்கும்; ‘ஒரு குற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கும்’, ‘விசாரணைகளை நடத்துவதற்கும்’ உட்பட்டதாக இருந்தது.

அந்த உத்தரவானது, ‘இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அல்லது இழைக்கப்பட வாய்ப்புள்ள குற்றத்தின் அளவுக்கு பொருத்தமானதாக’ இருப்பதுடன், அது ‘அரசியலமைப்பின் விதிகளின்படி, தன்னிச்சையாகச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவோ அல்லது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதாகவோ’ அமையக்கூடாது. அதேவேளை, இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபு குறிப்பாக வழிவகுத்திருந்தது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபின் வரையறுக்கப்பட்ட பாதுகாப்புகளை நிராகரித்தல்

எவ்வாறாயினும், இந்த பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றி, உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபானது, பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் சாத்தியப்பாடுகளைக் குறைத்துள்ளது. உட்பிரிவு 64, ‘மட்டுப்படுத்தும் உத்தரவுகளை’ கோருவதற்கான அதிகாரத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு குறையாத ஒரு பொலிஸ் அதிகாரிக்கு வழங்குகிறது; அவர் இது தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தை அணுக முடியும். இந்த திருத்தத்தின் விளைவுகளை குறைத்து மதிப்பிடவோ அல்லது விடயங்களின் போக்கில் முக்கியமற்றது என அலட்சியப்படுத்தவோ முடியாது.

உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபின் 64 (3) வது உட்பிரிவின் கீழ் வரும் ‘மட்டுப்படுத்தும் உத்தரவுகள்’ முழு அளவிலான தடைகளை உள்ளடக்குகின்றன. இவை (அ) வசிப்பிடத்துக்கு வெளியே நடமாடுதல், (ஆ) இலங்கைக்குள் பயணம் செய்தல், (இ) வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தல் மற்றும் (ஈ) வசிப்பிடத்துக்கும் பணிபுரியும் இடத்துக்கும் இடையிலான சாதாரண வழியைத் தவிர்த்து வெளியே பயணம் செய்தல் ஆகியவற்றை மட்டுப்படுத்தலாம். அத்துடன், உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குறிப்பிட்ட நபர்களுடன்’ (உ) தொடர்பு கொள்வது அல்லது பழகுவது அல்லது இவை இரண்டின் மீதும் மட்டுப்படுத்தல்கள் விதிக்கப்படலாம்.

மேலும் இதில், (ஊ) இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமிழைப்பதற்கு வழிவகுக்கக்கூடிய குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்தலும் உள்ளடங்கும். முன்னைய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபில் இருந்த பட்டியலை விரிவுபடுத்தியுள்ள உத்தேசபயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமானது, (எ) உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு இடத்துக்கும் செல்வதைத் தடுத்தல் எனும் புதிய மட்டுப்படுத்தலையும் சேர்த்துள்ளது. இத்தகைய உத்தரவுகள், பாதிக்கப்பட்ட நபர் ஒரு பொலிஸ் நிலையத்தின் முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் உள்ளடக்கியிருக்கலாம். ஆரம்பத்தில் ஒரு மாத காலத்துக்குப் பிறப்பிக்கப்படும் இந்த உத்தரவுகள், நீதவானின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை நீடிக்கப்படலாம்.

உரிமைகளுக்கான பாதுகாப்புகளை வலிந்து பலவீனப்படுத்தும் உள்நோக்கம்

மிகவும் பாரதூரமான விடயம் என்னவென்றால் முன்னைய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறிப்பிடப்பட்டிருந்த ‘மட்டுப்படுத்தல் உத்தரவுகளை’ பிறப்பிப்பதற்கான அனைத்து தேவைப்பாடுகளையும் இரக்கமின்றி நிராகரிப்பது பொருத்தமானது என பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் கருதியுள்ளமை ஆகும். இந்தச் சட்டத்தை இயற்றியோர் இத்தகைய அசாதாரணமான அதிகாரங்களைப் பிரயோகிப்பதை பொலிஸ் உத்தியோகத்தர்களின் தற்துணிவுக்கு (அது தகுதியற்றதாக இருப்பினும்) விட்டுள்ளனர். எனவே, சிவில் உரிமைப் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தைத் தவிர, பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபு (சர்ச்சைக்குரிய) தரநிலையிலிருந்து கூட வலிந்து விலகிச் செல்வதற்கான காரணமாக எதனைக் கூற முடியும்?

அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தில் காணப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் ஏற்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபில் ‘மட்டுப்படுத்தல் உத்தரவுகளுக்கு’ எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்யும் உரிமை ஆகிய இரண்டுமே உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் அப்பட்டமாக நீக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் விரிவாக கலந்துரையாடப்பட்டது போல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் ‘சட்டவிரோத நடவடிக்கை’ என்பதற்கான வரைவிலக்கணமானது அதன் குறைபாடுகள் அத்தனையையும் தாண்டி உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் பரிந்துரைக்கும் ‘குற்றங்களின்’ நீண்ட பட்டியலை விடக் குறைவான பரப்பினைக் கொண்டதாகும். இந்த உட்பிரிவு எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பதை கற்பனை செய்து பார்ப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல.

‘பயங்கரவாதக் குற்றங்கள்’ எனும் அதீதமான கவலையளிக்கும் விரிவுபடுத்தப்பட்ட பட்டியலையும், அத்துடன் ‘பயங்கரவாதம் சார்ந்த/செயல்கள்’, ‘பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்’ மற்றும் ‘பயங்கரவாத வெளியீடுகளை விநியோகித்தல்’ போன்ற அச்சமூட்டும் வகையில் பரந்த வரைவிலக்கணங்களைக் கொண்ட உப குற்றங்களையும் இதனுடன் சேர்த்து வாசித்தால் அரசியலமைப்பின் 14 (1) (h) உறுப்புரையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நடமாடுவதற்கான சுதந்திரம் மீறப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என்பதைக் காணலாம். ‘மட்டுப்படுத்தல் உத்தரவுகள்’ போலன்றி, ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரச பாதுகாக்கும் சட்டமூலத்திலும் ஜனாதிபதியின் வசமே மாற்றமின்றித் தொடர்கிறது.

உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரச பாதுகாக்கும் சட்டம் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான குறைந்தபட்ச பாதுகாப்புகளை பலவீனப் படுத்துவதானது எவ்வாறு தற்செயலான ஒன்றாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்திக் கேட்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பைப் புறக்கணித்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு அரசை வலுவூட்டக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரச பாதுகாக்கும் சட்டம் இந்த கவலையளிக்கும் போக்கு பல கட்டங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது; இடநெருக்கடி காரணமாக இவற்றில் பெரும்பாலானவை பின்னர் கலந்துரையாடப்பட வேண்டியவை. இவ்வாறான தளர்வான போக்கை, அமுல்படுத்தலில் பலவீனமாக இருக்கும் ‘சிறந்த’ ஏற்பாடுகளைக் கொண்டு ஈடு செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

உதாரணமாக, எந்தவொரு நபருக்கும் எதிராகத் தடுத்துவைத்தல் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பொலிஸ் மா அதிபர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் குறையாத பதவிநிலையிலுள்ள ஓர் உத்தியோகத்தர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரலாம் என பயங்கரவாதத்திலிருந்து அரச பாதுகாக்கும் சட்டம் குறிப்பிடுகிறது. ஒரு குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்று நம்புவதற்கு ‘நியாயமான காரணங்கள்’ இருக்க வேண்டும். அதற்கான காரணங்கள் வழங்கப்பட வேண்டும் மற்றும் அவற்றின் நோக்கம் குறிப்பிடப்பட வேண்டும். அதன்பின்னர், சந்தேகநபர் பகிரங்கமாக பட்டியலிடப்பட்ட ‘ ‘அங்கீகரிக்கப்பட்ட தடுத்துவைத்தல் நிலையத்த்தில்’ அல்லது ‘அங்கீகரிக்கப்பட்ட தடுத்து வைத்தல் நிபந்தனைகளின்’ கீழ் தடுத்து வைத்திருக்கப்படலாம்.

இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏட்டில் வாசிப்பதற்கு சிறந்தவையாகத் தெரிந்தாலும், எமது நீதித்துறை வரலாறானது இது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் அப்பட்டமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிகழ்வுகளாலும் அவை தொடர்பாக உயர்நீதிமன்றத்தினால் அடிக்கடி விடுக்கப்பட்ட ம் கண்டனங்களாலும் நிறைந்துள்ளது. சந்தேகநபர்கள் தமக்கு முன்னால் முன்னிலைப்படுத்தப்படும்போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றியமைக்காக நீதவான்கள் கண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில்தான் பயங்கரவாதத்திலிருந்து அரச பாதுகாக்கும் சட்டம் போன்ற சட்டங்களில் பொலிஸ் அதிகாரங்கள் பரவலாக்கப்படுவது விசித்திரமான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. சுருங்கக்கூறின், ‘நல்லாட்சிக்கு ஏற்ற ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை’ வழங்குவதாக உறுதியளித்து வடிவமைக்கப்பட்ட உதாசீனமான நடனம் படுதோல்வியடைந்துள்ளது.

கசப்பான வரலாறுகளைப் புறக்கணித்தல்

சட்டவாட்சி தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் ஒரு நாட்டில் நாம் வாழவில்லை. பாதுகாப்புத்துறையும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும் வகைக்கூறலையும் கண்காணிபையும் மிகவும் எதிர்க்கக்கூடியவை என்பதை எமது வாழ்வனுபவங்கக் எமக்குக் கற்றுத்தந்திருக்கின்றன. அந்த கசப்பான உண்மையை ஏதேனுமொரு அரசியல் தரப்பினர் முழுமையாக அறிந்திருப்பார்கள் என்றால், அது தற்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகார மையங்களில் அமர்ந்திருப்பவர்கள்தான்.

இந்தக் கசப்பான வரலாற்றுப் பாடங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருக்கும்போது உறுதியான கொள்கை தீர்மானங்களாக பரிணமிக்காதது வருத்தத்துக்குரியது.

கிசாலி பின்டோ-ஜயவர்தன (ஆங்கிலத்தில்)

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>