முதல் சூட்டிலேயே தனது மகன் மயங்கியதாகவும், வாகனத்தை நிறுத்திய பின்னரே துப்பாக்கி சூடு மேற்கொண்டதாக, அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அ.அருள்பாயஸ்ஸின் தாயார் தெரிவித்துள்ளார்.
11ம் திகதி வியாழக்கிழமை அன்று இடம்பெற்ற இறுதிச் சடங்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது மகனுக்கும் வெள்ளை மோட்டார் சைக்கிளில் நின்ற பொலிஸாருக்குமிடையே தான் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களுடன் பிரச்சினைபட்டுவிட்டு சென்றவேளை ஜீப்பில் வந்த பொலிஸாராலேயே துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது. ஜீப்பில் வந்த பொலிஸாருக்கும் எனக்குமிடையே எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. வாகனத்தை நிறுத்திய பின்னரே துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது. அந்த பொலிஸார் எனது மகனிடம் அவர்கள் கொத்து, சிகரெட் ஆகியன வழமையாக வாங்கி சாப்பிடுகின்றவர்களாம்.
இன்று எமது வீட்டுக்கு வந்த பொலிசார் போராட்டம் செய்ய வேண்டாம் என்று மறித்தனர். பொலிஸார் காட்டிய இடத்திலேயே புதைகுழி வெட்டி, எனது மகனின் சடலத்தை புதைத்துள்ளோம். அந்த இடத்தில் கிடங்கு வெட்டியவேளை தண்ணீர் வந்தது. அந்த இடத்திலேயே புதைத்துள்ளோம்.
எனது மகன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டது 1.30க்கு என்று செல்லப்படுகிறது. ஆனால் 5.30 மணிக்கே அவரது சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒருடத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது, ஆனால் வேறொரு இடத்திற்கு சடலம் இழுத்து செல்லப்பட்டு போடப்பட்டது.
எனது மகனோடு சென்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை சித்திரவதை செய்துள்ளார்கள். அவர்களின் உடற்பகுதியில் அடி காயங்கள் உள்ளன. கஞ்சா வழக்கு மற்றும் வேறு வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்போவதாக மிரட்டினார்களாம்.
முதல் சூட்டிலேயே அவர் மயங்கியதாக கூட இருந்தவர்கள் கூறுகின்றார்கள். அதன்பின்னரே ஏனைய துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளன. இது திட்டமிட்ட ஒரு கொலை. எனவே இதற்கு ஒரு சரியான முடிவெடுத்து, எனது பிள்ளையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.