பு.கஜிந்தன்
பேருந்துச் சேவையில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நடத்துநர் ஒருவரை, இது தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 12.10.2026 அன்று சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தின் நடத்துநர் யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் இருந்ததாகவும், இதன் காரணமாகப் பேருந்துச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் சங்கத்துக்கு தெரியப்படுத்திய அதிகார சபை உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு பணித்ததற்கு அமைவாக, விசாரணை நிறைவடையும் வரை குறித்த நடத்துநரைப் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன், பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்புணர்வுடனும் ஒழுக்கத்துடனும் செயற்படுவது அவசியம் எனக் குறிப்பிட்டார். பயணிகளின் பாதுகாப்பையும் போக்குவரத்துச் சேவையின் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்கு சாரதிகளும் நடத்துநர்களும் தமது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும். சேவையின்போது இடம்பெறும் இத்தகைய ஒழுங்கீனங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பேருந்துச் சேவைகள் தொடர்பான குறைபாடுகள், சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் ஒழுங்கீனமான செயற்பாடுகள், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் உள்ளிட்ட முறைப்பாடுகளைப் பொதுமக்கள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முறைப்பாட்டு வட்ஸ்அப் இலக்கமான 071 9090900 ஊடாகத் தெரிவிக்கலாம்.