பிரபல விளையாட்டான பார்முலா-1 கார் பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 சுற்றுகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான முதல் சுற்று ஆஸ்திரேலியாவில் நடந்தது. தற்போது சீனாவில் நடந்து வரும் 2-வது சுற்றின் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. 3-வது சுற்று போட்டி வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஜப்பானில் நடக்கிறது.
4-வது சுற்று பக்ரைனில் ஏப்ரல் 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும், 5-வது சுற்று சவுதி அரேபியாவில் ஏப்ரல் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக பஹ்ரைன்- சவுதி அரேபியாவில் நடைபெற இருந்த பார்முலா-1 கிராண்ட்பிரீ சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பார்முலா-1 நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையேயான போரில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பஹ்ரைன், சவுதி அரேபியா மீது ஈரான் தொடர்ந்து டிரோன்கள், ஏவுகணைகள் வீசி வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பஹ்ரைன், சவுதி அரேபியாவில் பார்முலா-1 கார்பந்தயங்கள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.