ந.லோகதயாளன்.
வலிகாமம் .வடக்கில் இருந்து இலங்கைச் சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேணல் நிசங்கவினால் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் 30ம் திகதி புதன்கிழமை அன்று கையளிக்கப்பட்டது.
காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு அரச காணி 351.23 ஏக்கர் வழங்குவதற்கு ஜனாதிபதி அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள், நேற்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றது.
இதேநேரம் மக்கள் தமது வாழ்விடம் மற்றும் வாழ்வாதார இடங்களை விடுவிக்குமாறு கோரி தொடர்ச்சியாகப் போராடிவருகின்றபோதும் மக்களிற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலமும் விடுவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.