2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அரசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும்.
மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது ஜனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம். தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்வது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும். இந்த நெருக்கடியான சூழலில், மதவாத – திரிபுவாத – வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசனும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட ‘வாக்கு வங்கி வலிமையும்’, தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய ‘நன்மதிப்பு வலிமையும்’ கொண்ட அண்ணன் கமல்ஹாசனை, அவ்வாறு விட்டு விடமாட்டோம் என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘டார்ச்’ சின்னத்தில் போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் ‘வெல்வோம் ஒன்றாக’ என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.